கூட்டணி ஆட்சி; முஸ்லீம் லீக்கின் ஃப்ளாஷ் பேக்!

கூட்டணி ஆட்சியை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்ற குரல்கள் சுமார் இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள தேசியக் கட்சிகளாலும் மாநிலக் கட்சிகளாலும் எழுப்பப்பட்டு வந்தாலும்கூட, தற்போது நடந்து முடிந்திருக்கிற தேர்தல் முடிவு கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பை கனிய வைத்திருக்கிறது.

1952-க்கு பிறகு நீண்ட கால இடைவெளிக்குப்பின் கூட்டணி ஆட்சி தமிழத்தில் தவெக தலைமையில் உருவாகி, அதில் காங்கிரஸ், விசிக, ஐ.எம்.யூ.எல் உள்ளிட்ட கட்சிகள் அமைச்சரவையில் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

பொதுவுடமைக் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரிக்கும் தோழமைச் சூழலும் ஏற்பட்டிருக்கிறது.

இப்படி ஒரு கூட்டணி ஆட்சி அமைந்தாலும் கூட இதற்கு எதிரான கண்டனங்கள் திமுக தரப்பிலும் எழுந்திருக்கின்றன. அதிமுக தரப்பிலும் எழுந்திருக்கின்றன.

இதையொட்டி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவரான காதர் மொய்தீன் கூட்டணி ஆட்சி தொடர்பாக பலர் கருத்துகளை முன்வைத்தார்.

1967-ல் அறிஞர் அண்ணா தலைமையில் திமுக அமைச்சரவை அமைந்தபோதே அந்த வெற்றிக்கு பாடுபட்ட ராஜாஜியின் சுதந்திரா கட்சி தரப்பிலும் காயிதே மில்லத் முஸ்லீம் லீக் தரப்பிலும் கூட்டணி ஆட்சியில் பங்கேற்பது குறித்து பேச்சுக்கள் எழுந்ததாகவும்,

ஆனால், அன்றைக்கு திமுகவுக்கு பெரும்பான்மை பலம் இருந்ததால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்றும் தற்போதுதான் நீண்டகால இடைவெளிக்குப் பிறகு தவெக அமைத்திருக்கிற கூட்டணி ஆட்சியில் பங்கேற்கிற வாய்ப்பு முஸ்லீம் லீக்கிறகு வந்திருக்கிறது என்பதையும் கேசுவலாக, அனுபவப் பின்னணியுடன் குறிப்பிட்டார் காதர் மொய்தீன்.

தவெக அணிக்கு மாறியவர்களைப் பற்றிய ஆ.ராசாவின் பதிவு குறித்த கேள்விக்கு பளிச்சென்று “அத்தகைய விமர்சனம் முட்டாள்தானமானது” என்று குறிப்பிட்டவர்,

“இனி வரவிருக்கும் தேர்தல்களிலும் யாருடன் கூட்டணி வைப்பது என்பது பற்றி அப்போதைய சூழலைப் பொறுத்துதான் முடிவு செய்வோம். இப்போதே அதைப் பற்றித் தெரிவிக்க முடியாது” என்றார்.

அதோடு, “தவெக நல்லாட்சி நடத்தும் என்று நம்புவதாகவும் அதில் எதாவது பிரச்சனை ஏற்பட்டால அதைக் கண்டித்து குரல் கொடுப்போம்” என்றும் முதிர்ச்சி வெளிப்படும் விதத்தில் பேசிய காதர் மொய்தீனின் பேச்சு ஊடக வெளியில் பரவலான கவனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

You might also like