மக்கள் மனதின் குரல்:
நடிகர் விஜயின் அதிகபட்சமான கமர்சியல் படங்களைவிட, கூடுதலாக அரசியல் மேடையில் ஸ்கோர் செய்திருக்கிறார் தவெக தலைவரான விஜய்.
மதுரையில் சமீபத்தில் நடந்த முடிந்த தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு இதைத்தான் உணர்த்துகிறது.
எத்தனையோ தடைகள் அடுத்தடுத்து விதிக்கப்பட்டும் அதையெல்லாம் மீறி லட்சக்கணக்கில் ரசிகர்களும், தொண்டர்களும் வந்து குவிந்தது ஆச்சர்யமான ஒன்றுதான்.
மாநாட்டு மேடையில் பேசிய ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட சில பிரமுகர்கள் மிகச் சுருக்கமாக உரையாற்றினாலும் கூட, திமுகவை குறிவைத்து ஊழல் அமைச்சர்களின் பெயர்களைப் பட்டியலிட்டுப் பேசினர். அதற்கு வந்திருந்த தொண்டர்கள் மத்தியில், ஆரவாரமான வரவேற்பு.
அதையும் மிஞ்சிய நிலையில், உரையாற்றிய விஜயின் முழுப்பேச்சுமே அவருடைய படங்களில் வரும் பஞ்ச் டயலாக் பாணியிலேயே அமைந்திருந்தது. அவருடைய உடல் மொழியும், தூக்கிய கரங்களும் அதைத்தான் உணர்த்தின.
அப்பா என்று தன்னை அழைக்கச் சொன்ன தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை, செல்லமாக “அங்கிள்” என்றழைத்து உரிமைக் கொண்டாடி கலாய்க்கவும் செய்தார்.
பாஜகவை பாசிசம் என்றவர் திமுகவை ரைமிங்காக பாய்சன் என்றார். அதேசமயத்தில், 35 நிமிடங்கள் வரையிலான விஜயின் உரைதான் மாநாட்டின் மையம்.
அவருடைய ஆவேசமான கேலி கலந்த இடையில் பாடலும் கலந்த அவருடைய பேச்சுக்கு அவரது ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பு இருந்தாலும், அவருடைய பேச்சு குறித்து முக்கியமான சில கேள்விகளையும் எழுப்பியாக வேண்டும்.
தனது கொள்கை எதிரி என்று பாஜகவை விமர்சித்தவர் பாஜகவின் சமீபகாலத்திய நடவடிக்கைகளைப் பற்றியோ, முக்கியமாக, தேர்தல் ஆணையத்தை எப்படியெல்லாம் முறைகேடாக பாஜக பயன்படுத்தியிருக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சிகள் ஆதாரத்துடன் நிரூபித்தும் அதை சற்றும் அலட்சியம் செய்யாத பாஜகவின் செயல்பாடு பற்றியோ விமர்சிக்கவே இல்லை.
ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை மூலம் தன் மீது எழுப்பக்கூடிய முக்கியமான குற்றச்சாட்டுக்களை மறைத்துக்கொள்வது பற்றி பேசவில்லை.
இந்தியளவில் பணமதிப்பிழப்பிற்கு பிறகும், ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்கு பிறகும் பல சிறு, குறு தொழிலை நடத்தி வந்தவர்கள் பாதிக்கப்பட்டு, பெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள் மட்டும் பெரும் வீக்கத்தைப்போல வளர்ச்சியடைந்ததைப் பற்றியும் பேசவேயில்லை.
குறிப்பாக அண்மைக்காலத்தில் இந்திய அளவில், பல்வேறு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோனதைப் பற்றியும், அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதிக்க மனோபாவ நடவடிக்கையால் பலரின் வேலை வாய்ப்பும், தொழில் வாய்ப்பும் முடங்கிப்போனதைப் பற்றித் தப்பித்தவறிக்கூட விஜய் பேசவில்லை.
இதற்கெல்லாம் மேலாக சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்து விடப்படுகிற திட்டமிட்ட செயல்பாடுகள் பற்றியோ, ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதிக்கம் குறித்தோ எதுவுமே பேசவில்லை.
வெறுமனே பாசிசம் என்று குறிப்பிட்டதோடு பாஜக குறித்த அவருடைய பேச்சின் எல்லை சுருங்கிவிட்டது.
அதைப்போலவே, திமுக அரசைப்பற்றி அதன் சட்டம் ஒழுங்கு சீர்குலைவைப் பற்றியெல்லாம் பேசியவர், மிக மிக அண்மையில் சென்னையில் பதின்மூன்று நாட்களாக போராடி காவல்துறையின் கடும் தாக்குதலுக்கு உள்ளானதைப் பற்றியும், மாநாடு நடந்த அதே மதுரையில் தற்போதும் போராட்டத்தை நடத்திவரும் தூய்மைப் பணியாளர்கள் குறித்தும் ஒரு வார்த்தையும் பேசவில்லை.
மடப்புரத்தில் காவல்துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமார் குறித்தோ, கவின் என்கின்ற இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது பற்றியோ எந்த சிறுகுறிப்பும் கூட விஜயின் பேச்சில் இடம்பெறவில்லை.
எம்.ஜி.ஆரைப் பற்றி புகழ்ந்து பேசிய விஜய் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆர். பாடிய பாடல் வரிகளை மேடையில் பாடிக் காட்டிய அதே விஜய், எடப்பாடி பழனிசாமி பற்றி பட்டும் படாமலுமாக குறிப்பிட்டாரே தவிர, அவருடைய ஆட்சிக்காலத்தில், எத்தனை அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அமலாக்கத் துறையின் சோதனைகளெல்லாம் நடந்துமுடிந்து இதுவரை எந்தவிதமான மேல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் இருப்பது பற்றியெல்லாம் பேசவே இல்லை.
அதிமுக ஆட்சிக் காலத்தில் மெரினாவில் போராடிய இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடுமையான தாக்குதல் பற்றியோ, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றியோ, சாத்தான்குளம் அத்துமீறல் பற்றியோ குறிப்பிடவே இல்லை.
தனது பேச்சில் காட்டிய ஆவேசத்தால், மேலே குறிப்பிட்ட இந்த சம்பவங்களையெல்லாம், விஜய் மறந்துவிட்டாரா?
பரந்தூர் போராட்டம் மட்டுமே நினைவுக்கு வந்த நிலையில், மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் எல்லாம் மறதியின் பட்டியலில் சேர்ந்துவிட்டதா?
சுருக்கமாகச் சொல்லப்போனால், வரலாற்றில் பின்நோக்கிப் பார்க்கும்போது கூட, சில தனிநபர்கள் மட்டுமே அவருக்கு நினைவுக்கு வருகின்றனர். பல சம்பவங்கள் திட்டமிட்டு மறந்து போகின்றனவா?
தன்னுடைய முதல் மாநாட்டு உரையிலேயே தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று விஜய் அறிவித்த பிறகும் இதுவரை தவெக கூட்டணிக்கு தமிழகத்தில் உள்ள சிறு கட்சிகள் கூட வராதது ஏன் என்பதை விஜய் நினைத்துப் பார்த்தாரா?
அல்லது நாம் தமிழர் கட்சியை நடத்தும் சீமான் மாதிரியே தனித்து நின்று தன்னுடைய சுய பலத்தை அல்லது பலவீனத்தை பரிசோதிக்கப் போகிறாரா என்பதையெல்லாம் தற்போது கேள்விகளாக பலரும் எழுப்பினாலும், 2026-ல் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் முடிவுதான் இதற்கு ஆக்கப்பூர்வமான பதிலாக இருக்கும்.
– யூகி