யாரைத்தான் நம்புவதோ?

சமீபத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையரான ஞானேஷ்குமார் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார்.

அந்தச் சந்திப்பில் அவர் தெரிவித்திருக்கிற விவரங்கள் பொதுவெளியில் பல்வேறு சலன்களை ஏற்படுத்தி இருக்கின்றன.

1950-ம் ஆண்டில் இருந்தே வெவ்வேறு தலைமைத் தேர்தல் ஆணையர்கள் இருந்திருக்கிறார்கள். இதில், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.என்.சேஷன், கிருஷ்ணமூர்த்தி, கோபாலசுவாமி என்று பலரும் தேர்தல் ஆணையாளர்களாக இருந்திருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், டி.என்.சேஷன் காலத்தில் நிறைய தேர்தல் சீர்திருத்தங்களைக் கறாராக அமல்படுத்துபவராக அவருடைய செயல்பாடுகள் இருந்ததை, அப்போதைய ஊடகங்கள் வெளிப்படுத்தின.

அந்த அளவுக்கு தனித்துவமான செயல்பாடு கொண்டவர்களாகவே பெரும்பாலான தேர்தல் ஆணையர்கள் இருந்தனர். தற்போது 26-வது தேர்தல் தலைமைத் தேர்தல் ஆணையராக 2025 பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டவர்தான் தற்போதைய தேர்தல் ஆணையரான ஞானேஷ்குமார்.

எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி பல மாநிலங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து ஆதாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்தைக் குற்றம்சாட்டி வெளிப்படுத்திய கருத்துக்கள் தேர்தல் ஆணையத்தை நம்பி வாக்களித்த பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது ராகுல்காந்தியை சார்ந்திருக்கிற இந்தியாக் கூட்டணி கட்சித் தலைவர்களும் இதே பிரச்சினையை முன்னெடுத்திருக்கிறார்கள். இதை மக்களிடம் கொண்டு சென்றிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ஒலிக்கும் குரல்கள் அதிகரித்திருக்கின்றன.

“கொடுமை கொடுமைணு கோவிலுக்குப் போனா… அங்கே ஒரு கொடுமை தலைவிரிச்சு ஆடுச்சாம்..” என்று தமிழகத்தில் கிராமப் பகுதிகளில் ஒரு சொல் வழக்கு உண்டு.

முன்பு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தேர்தல் நேரத்தில் அதிகளவில் பணப்பட்டுவாடாவும் சில பொருள்களைக் கொடுப்பதும் அதிக அளவில் நடக்கிறது என்கின்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன.

தேர்தல் ஆணையம் என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், அதையெல்லாம் மீறிய பணப்பட்டுவாடாவை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாகவே பார்க்க முடிந்தது.

தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த கோபாலசுவாமி பணப்பட்டுவாடா குறித்த தன்னுடைய அதிருப்தியை பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்தநிலையில் தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையரான ஞானேஷ்குமார் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை மறுத்து, தேர்தல் ஆணையம் தனிப்பெரும் அதிகாரம் கொண்ட அமைப்பைப் போலக் கருதி அந்தப் பேட்டியில் வெளிப்படுத்தியது பொதுவெளியில் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய பொருளாகியிருக்கிறது.

தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையரை தேர்ந்தெடுப்பவர்கள் குடியரசுத் தலைவர் உள்ளிட்ட மூன்று பேர். அதில், அரசியல் சார்பு இருக்கக்கூடாது.

அந்தத் தேர்விலும் சரி, அந்த ஆணையத்தின் செயல்பாட்டிலும் சரி எந்தவிதமான சார்பு நிலை இருக்கக்கூடாது என்பதைத்தான் அம்பேத்கர் உள்ளிட்ட சட்ட நிபுணர்கள் உருவாக்கிய அரசியல் சட்டம் கூறுகிறது.

அப்படிப்பட்ட தேர்தல் ஆணையத்தின் மீது தற்போது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அதுவும் அதற்கான ஆதாரங்கள் எல்லாம் முன்வைக்கப்பட்ட நிலையில் அதை முழுக்க மறுத்து ஒரு அரசியல் கட்சித் தலைவரைப் போல தலைமைத் தேர்தல் ஆணையர் பதிலளித்திருப்பதை ஜனநாயக உணர்வு கொண்ட எந்த ஒரு நபரும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தேர்தல் ஆணையம் என்பது மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க வேண்டிய ஒரு ஜனநாயக அமைப்பாக இருக்க வேண்டுமேயொழிய, அது மக்களிடமிருந்து விலகித் தனித்துப் பெரும் அதிகாரம் கொண்ட அமைப்பல்ல.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான் தேர்தல் ஆணையரையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஆக, ஜனநாயகத்தின் மூலவேராக இருப்பது மக்கள்தான். அப்படிப்பட்ட மக்கள் வாக்களிக்கும்போது அந்த வாக்குப்பதிவு முறையிலேயே சந்தேகம் எழுவது ஜனநாயகம் மரபுக்கு சற்றும் உகந்ததல்ல.

இதை தேர்தல் ஆணையம் மட்டுமல்ல, இந்தியாவில் இயங்கும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும், ஜனநாயக உணர்வுள்ள ஒவ்வொரு அமைப்புகளும் இதுகுறித்த ஒரு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டியது தற்போதைய உடனடியான தேவை.

அத்தகைய தேவையை நிறைவேற்றுவதன் மூலம், நாம் நம்முடைய ஜனநாயகக் கடமையை உறுதிப்படுத்துகிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

– யூகி

You might also like