தாய் தலையங்கம்:
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே அறிவிக்கப்படாத உலக நாயகனைப் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
அவர் பதவியேற்றதிலிருந்து பல நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் விதத்தில் வரி விதிப்பை அதிகப்படுத்தி இருக்கிறார்.
தற்போது, அதே வரிவிதிப்பு அஸ்திரத்தை இந்தியாவுக்கு எதிராகவும் திருப்பியிருக்கிறார்.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு பெருமளவில் ஏற்றுமதி நடந்து கொண்டிருந்த நிலையில், அதற்குத் தடை விதிக்கிற நிலையில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்து, நாடு தழுவிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.
இதில், தமிழகத்தின் நிலையை மட்டும் பார்த்தால், ஜவுளி, நகை, மோட்டார் இயந்திரங்கள் என்று பல்வேறு உற்பத்தியாளர்களுக்கு, ஒண்ணே முக்கால் லட்சம் கோடி அளவுக்கு ஏற்றுமதி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை நம்பி தமிழகத்தில் உற்பத்தி செய்துவந்த நிறுவனங்களுக்கே இந்த அளவுக்குப் பொருளாதார பாதிப்பு இருக்குமென்றால், இந்திய அளவில் பரவலாக எவ்வளவு தூரம் பாதிப்பு ஏற்படும் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.
அமெரிக்காவின் இந்த ஆபத்தான வரிவிதிப்பைக் கண்டிக்கும் விதத்தில், இந்தியப் பிரதமர் மோடி, ”விவசாயிகளைப் பாதுகாக்க எதற்கும் தயார்” என்று அறிவித்திருக்கிறார்.
இது, அவரது பார்வை என்றாலும், இந்தியா முழுக்க இருக்கக்கூடிய உற்பத்தி நிறுவனங்களும், அதை நம்பி இருக்கும் இந்திய முதலாளிகளும், சிறு குறு தொழில் செய்வோர்களும், இதைச் சார்ந்திருக்கும் கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தில் இந்த வரிவிதிப்பு பெரும் பாதிப்பை உருவாக்காதா?
ஏற்கனவே, ஜி.எஸ்.டி வரிச்சுமையை சுமந்து கொண்டிருக்கும் இந்தியத் தொழில் நிறுவனங்கள் தற்போது, டிரம்பின் அறிவிப்பின் மூலமாக உருவாகியிருக்கும் பொருளாதாரச் சீர்குலைவை எப்படி எதிர்கொள்வார்கள்?
வளர்ந்து கொண்டிருக்கும் உலக நாடுகளில் பொருளாதார ரீதியாக இந்தியா முன்னணிக்கு வந்து கொண்டிருக்கும் தருணத்தில், டிரம்பின் இந்த அறிவிப்பு இடியைப் போல இறங்கியிருக்கிறது.
டிரம்ப் என்கின்ற ஒற்றை மனிதரின் அறிவிப்பாக மட்டும் இந்த வரிவிதிப்பு நடவடிக்கையை எடுத்துக் கொள்ள முடியாது.
வல்லரசாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள அமெரிக்கா எடுத்துக் கொள்ளும் முயற்சியாகவே அல்லது ஆதிக்கமாகவே இதை எடுத்துக் கொள்ள முடியும்.
பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தின் கீழிருந்து இந்தியா விடுதலை பெற்ற பிறகும் இந்தியாவைத் தங்களுடைய உற்பத்திக்கான சந்தையாக, காலனியாக மாற்ற எம்மாதிரியான ஆதிக்க முயற்சிகளெல்லாம் நடக்கத் துவங்கியிருக்கின்றன.
இந்தியாவின் நலனை உண்மையாகவே நேசிக்கும் இந்தியக் குடிமக்கள் இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வது?
– யூகி