தமிழ் சினிமாவில் ஒரு துறையில் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளில் கால் பதித்து வெற்றிகளை அள்ளியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
அந்த வகையில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஆகியவற்றைக் கையாண்டதோடு பாடல் எழுதுவது, படம் தயாரிப்பது, இசையமைப்பது, நடிப்பது என்று பலவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்களில் ஒருவர் கஸ்தூரி ராஜா.
டி.ராஜேந்தர், கங்கை அமரன், கே.பாக்யராஜ், பாண்டியராஜன் உள்ளிட்ட சிலர் மட்டுமே ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’க்களாக தமிழ் திரையுலகில் பல சாதனைகளைப் படைத்திருக்கின்றனர்.
கால ஓட்டத்தில் அவர்களுக்கான வரவேற்பு மங்கிப்போனாலும், அவர்களது திரைப்படங்களைப் பார்க்கிற ஒவ்வொரு கணத்திலும் அந்த சாதனைகள் மீண்டும் மலர்ந்து விரிகின்றன.
அந்த வரிசையில் தொண்ணூறுகளில் தனக்கான ’தனித்துவமான’ ரசிகர் வட்டத்தைக் கொண்டவர் இயக்குனர் கஸ்தூரி ராஜா.
நடுத்தர வயதில் இயக்குனர் ஆசை!
இயக்குனர் ஆகும் ஆசையோடு கோடம்பாக்கத்துக் கதவுகளைத் தட்டிய பலர் இருபதுகளில் இருக்கிற இளைஞர்களாக, தனிக்கட்டைகளாக இருப்பார்கள். புகழும் பெயரும் பணமும் சம்பாதித்த பிறகே திருமணம் முதலான வாழ்வின் அடிப்படை சுகங்களை அடைய வேண்டுமென்ற பிடிப்போடு இருப்பார்கள்.
அதிலிருந்து விலகி நிற்பவர்களாக, திருமண வாழ்வு, குழந்தைகள் என்றானபிறகு திரையுலகில் சாதிக்கும் முனைப்போடு நுழைந்தவர்கள் வெகு சிலரே.
வி.சேகர் உட்பட மிகச்சிலரை அதற்கான உதாரணங்களாகச் சொல்லலாம். அந்த வரிசையில் ஒருவராகத் திகழ்பவர் கஸ்தூரி ராஜா.
தேனி மாவட்டம் மங்காபுரத்தில் பிறந்து வளர்ந்த கஸ்தூரி ராஜா, இல்லற வாழ்வில் நுழைந்தபிறகே திரையுலகை எட்டிப் பார்த்தார். அதுவரை ஒரு வேலை, சொற்ப சம்பளம் என்றே அவரது உலகம் இருந்து வந்தது.
இயக்குனர் விசுவிடம் உதவி இயக்குனராகச் சேர்ந்த கஸ்தூரி ராஜா, அவர் இயக்கும் படங்கள் அனைத்தையும் உற்று நோக்கியிருக்கிறார். அவற்றில் தன்னால் இயன்ற பங்களிப்பைத் தந்திருக்கிறார். கதை அமைப்பு, காட்சியாக்கம் மட்டுமல்லாமல் தயாரிப்பு நுணுக்கங்களையும் அங்குக் கற்றிருக்கிறார்.
அந்தக் காலகட்டத்தில் விசுவிடம் உதவி இயக்குனர்களாக இருந்த டி.பி.கஜேந்திரன் உள்ளிட்ட சிலர், அவரை நாயகனாகக் கொண்டு படங்கள் இயக்கினர்.
அவை அனைத்துமே, அவரது பாணியைப் பிரதியெடுத்தாற் போலவே இருந்தன. அப்படங்கள் சம்பந்தப்பட்ட இயக்குனர்களின் தனித்துவத்தை வெளிக்காட்ட உதவவில்லை.
அப்படியொரு வாய்ப்பு கஸ்தூரி ராஜாவுக்கு விசுவால் தரப்பட்டபோது, அவர் அதனை ஏற்க மறுத்திருக்கிறார். தான் கற்ற வித்தையைக் கொண்டு வேறு வகைமையில் அமைந்த படங்களைத் தர வேண்டுமென்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.
அதற்கேற்ற வாய்ப்பைத் தரும் தயாரிப்பாளருக்காகச் சில காலம் காத்திருந்திருக்கிறார். அதன்பிறகே ‘என் ராசாவின் மனசிலே’ வாய்ப்பு கஸ்தூரி ராஜாவைத் தேடி வந்திருக்கிறது.
அப்படம் முழுமையாகத் தயாராகி வெளியாவதற்குள், சில படங்களுக்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்றிருக்கின்றன; சில படங்கள் பேச்சுவார்த்தையோடு நின்றிருக்கின்றன. படப்பிடிப்பு தளத்தை எட்டியபிறகு நின்றுபோனவையும் உண்டு.
அந்த அனுபவங்களைக் கடந்து போராடியதற்கும் வெற்றி பெற வேண்டுமென்ற உத்வேகத்தை மாறாமல் பாதுகாப்பாக வைத்திருந்ததற்கும் நாம் கோடி வணக்கங்கள் சொல்லியாக வேண்டும்.
இப்படிப் பல தடைகளைத் தாண்டியபிறகே ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் இயக்குனர் ஆனார் கஸ்தூரி ராஜா. தான் பார்த்த, கேட்ட, அனுபவித்த கிராமத்து வாழ்வின் வெவ்வேறு முகங்களைப் படங்களில் பிரதிபலித்து, அதன் வழியே தனிக்கவனம் பெற்றார்.
பிற துறைகளில் புலமை!
’என் ராசாவின் மனசிலே’வை அடுத்து ’ஆத்தா உன் கோவிலிலே’, ’தூது போ செல்லகிளியே’ படங்களையும் கிராமியப் பாணியில் இயக்கினார் கஸ்தூரிராஜா. ’சோலையம்மா’ படத்தில் முதன்முறையாகத் தேவா இசையில் பாடல்கள் எழுதினார். அதன்பிறகு, ‘மௌன மொழி’, ‘தாய் மனசு’ எனப் பல படங்களில் அதனைத் தொடர்ந்தார்.
‘தூது வளை இலை அரைச்சு’, ‘பஞ்சுமிட்டாய் சீலை கட்டி’, ‘உன் கெண்டைக்காலு தெரியுதடி’ எனப் பல பாடல்களில் கஸ்தூரி ராஜாவின் தனி முத்திரை தெரியும்.
காதல், வீரம், சோகம், நகைச்சுவை, நையாண்டி என வாழ்வின் விதவிதமான உணர்வுகளைக் கிராமிய மணத்தோடு வெளிப்படுத்தவல்லதாக அவரது பாடல்கள் இருந்து வருகின்றன. அவற்றின் எளிமையும் சீர்மையும் பிறரால் பிரதியெடுக்க முடியாதவை.
இளையராஜாவின் இசையில் கஸ்தூரி எழுதிய ‘ஒத்த ரூபா தாரேன்’, ’நாட்டுபுறப்பாட்டு ஒண்ணு’, ‘கொக்கி வச்சேன்’ பாடல்கள் காலத்தால் அழியாதவை.
படத்தின் பட்ஜெட், கதைக்கு ஏற்ப தேவா, இளையராஜா என்று இருவரோடும் அடுத்தடுத்து பணியாற்றிய ஒரு சில இயக்குனர்களில் முதன்மை பெறுபவர் கஸ்தூரி ராஜா. அதற்கு அவர் கதை, திரைக்கதையில் காட்டிய நுணுக்கமான ஈடுபாடே காரணம்.
‘ட்ரீம்ஸ்’ படத்தில் பரத்வாஜ் உடன் கைகோர்த்த கஸ்தூரிராஜா, பிறகு ‘இது காதல் வரும் பருவம்’ படத்தில் அவரே இசையமைப்பாளர் ஆனார்.
இப்படி ஒரு படத்தில் கதை திரைக்கதை வசனம் தவிர்த்து பாடல்கள், இசை எனப் பல துறைகளில் தனது திறமையைச் சோதித்து வெற்றி கண்டவர் கஸ்தூரிராஜா.
’அவள் சுமங்கலிதான்’, ‘மௌன மொழி’ படங்களில் வில்லனாக நடித்த கஸ்தூரி ராஜா, சமீபத்தில் ‘படைத்தலைவன்’ படத்தில் சண்முகபாண்டியனுக்கு தந்தையாகத் தோன்றியிருந்தார்.
சில படங்களைத் தயாரித்த அனுபவமும் அவருக்குண்டு. அதனை கஸ்தூரிராஜாவே பல பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார்.
இப்படிப் பல துறை வித்தகராக இருந்துவரும் கஸ்தூரிராஜா, இன்று தனது குடும்பத்தின் அடுத்த தலைமுறையின் வளர்ச்சியைக் கண்ணாரக் கண்டு வருகிறார்.
சமீபத்தில் ஒரு விழா மேடையில், ‘தனது இரு மகன்களில் ஒருவரை இயக்குனராகவும் இன்னொருவரைப் புகழ்மிக்க நாயகனாகவும் உருவாகியதை கண் முன்னே காணும் பேறைப் பெற்றிருக்கிறார் கஸ்தூரிராஜா’ என்று புகழ்ந்திருந்தார் இயக்குனர் விக்ரமன்.
சினிமா என்றில்லை, எந்த துறையில் தம் மக்கள் புகழ் பெற்றாலும் அதனைக் கண்டு மகிழ்வதே அவர்களைப் பெற்றவர்களின் இயல்பு.
இப்படித் தனக்கென்று தனி சிறப்புகளை, சாதனைகளைக் கொண்டிருக்கிற கஸ்தூரிராஜாவை அவரது தனிப்பட்ட ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.
அவரது படத்தின் பாடல்கள் பேருந்திலோ, விழாக்களிலோ ஒலிக்கும்போதும், தொலைக்காட்சிகளில் படங்கள் ஒளிபரப்பாகிறபோதும் அதனை நம்மால் காண இயலும்.
அதுபோன்ற கணங்களே, திரைத்துறையின் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’க்களாக திகழ்ந்த காலங்களைப் போற்றுவதற்கான வாய்ப்புகளாகவும் இருந்து வருகின்றன.
- மாபா