“100 வயது வரை வாழ வேண்டும்” என்பதைவிட, ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே இங்கு பலரின் ஆசையாக உள்ளது.
அந்த ஆசைக்கு ஒரு சிறந்த உதாரணமாகவே புளு ஸோன்ஸ் (Blue Zones) பகுதிகள் கருதப்படுகின்றன.
1999-ஆம் ஆண்டு, நேஷனல் ஜியாகிராபிக் (National Geographic) ஆய்வாளரும் பத்திரிகையாளருமான டான் பியூட்னர் (Dan Buettner), ஜப்பானின் ஓகினவா (Okinawa) தீவுக்குச் சென்றார்.
அங்கு நூறு வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை ஏன் இவ்வளவு அதிகமாக இருக்கிறது என்ற கேள்விதான் அவரை அந்தப் பயணத்திற்கு அழைத்துச் சென்றது.
அதே நேரத்தில், இத்தாலிய மருத்துவப் புள்ளியியல் ஆய்வாளர் கியானி பெஸ் (Gianni Pes) மற்றும் பெல்ஜிய மக்கள் தொகை ஆய்வாளர் மைக்கேல் பாலின் (Michel Poulain) ஆகியோர், இத்தாலியின் சர்தினியா (Sardinia) பகுதியில் அதிக வயது வரை வாழும் மக்களைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.
அவர்கள் நீண்ட ஆயுளுடன் மக்கள் வாழும் கிராமங்களை வரைபடத்தில் நீல நிற பேனாவால் வட்டமிட்டு குறித்தனர். அதிலிருந்துதான் “Blue Zones” என்ற பெயர் பிறந்தது.
இந்த ஆய்வு அமெரிக்க எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளரான டான் பியூட்னரின் கவனத்தை ஈர்த்தது.
பின்னர் National Geographic மற்றும் National Institute on Aging ஆகியவற்றின் ஆதரவுடன், விஞ்ஞானிகள், மக்கள் தொகை ஆய்வாளர்கள், மருத்துவ நிபுணர்கள் ஆகியோரைக் கொண்ட குழு உலகின் பல பகுதிகளுக்குச் சென்று நீண்ட ஆயுள் வாழும் சமூகங்களை நேரில் ஆய்வு செய்தது.
பிறப்புப் பதிவுகள், மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள், நூறு வயதைக் கடந்தவர்களுடனான நேர்காணல்கள், அவர்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், குடும்ப அமைப்பு, சமூக உறவுகள் என பல அம்சங்கள் ஆராயப்பட்டன.
இந்தப் பயணத்தின் முடிவில் ஐந்து பகுதிகள் தனித்துவமாகத் தெரிந்தன.
ஜப்பானின் Okinawa, இத்தாலியின் Sardinia, கிரீஸின் Ikaria, கோஸ்டா ரிகாவின் Nicoya Peninsula, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள Loma Linda.
பின்னர் 2023-ல் டான் பியூட்னர், சிங்கப்பூரை புதிய புளு ஸோன் பகுதியாக முன்மொழிந்தாலும், அது ஆரம்ப ஐந்து பகுதிகளைப் போல அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இல்லை.
இந்த ஐந்து பகுதிகளும் உலகின் வெவ்வேறு மூலைகளில் இருந்தாலும், அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையில் பல ஒற்றுமைகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர்.

அவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய ஜிம்மிற்குச் செல்லவில்லை.
அதற்குப் பதிலாக நடைபயிற்சி, தோட்ட வேலை, விவசாயம் போன்ற இயல்பான அன்றாட செயல்களே அவர்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருந்தன.
அவர்களின் உணவிலும் ஒரு பொதுவான அம்சம் இருந்தது. காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், முழு தானியங்கள், பீன்ஸ் போன்ற தாவர அடிப்படையிலான உணவுகளே அதிகம்.
இறைச்சி மிகவும் குறைவாகவே இருந்தது. அதிகமாக பதப்படுத்தப்பட்ட (Processed) உணவுகளும் அவர்களின் வாழ்க்கையில் பெரிதாக இடம் பெறவில்லை.
ஜப்பானின் ஓகினாவா பகுதியில் மக்கள் “Hara Hachi Bu” என்ற பழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள்.
அதாவது, வயிறு 80 சதவீதம் நிரம்பியவுடன் சாப்பிடுவதை நிறுத்திவிடுவார்கள். இது அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க உதவுகிறது.
மேலும் இக்கிகய் (Ikigai) என்ற கருத்தும் மிகவும் முக்கியமானது. அதாவது, வாழ்க்கைக்கு அர்த்தமும் நோக்கமும் தரும் ஒன்றைக் கண்டறிந்து அதன்படி வாழ்வது.
கோஸ்டாரிகா(Costa Rica)-வின் நிகோயா (Nicoya) பகுதியில் இதே கருத்து “Plan de Vida” என்ற பெயரில் காணப்படுகிறது.
வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும், ஒரு நோக்கமும் இருக்க வேண்டும் என்பதே அங்குள்ள மக்களின் நம்பிக்கை.
இவர்கள் உணவையும் உடற்பயிற்சியையும் மட்டுமல்ல, உறவுகளையும் முக்கியமாகக் கருதுகிறார்கள்.
குடும்பத்துடன் நேரம் செலவிடுவது, நண்பர்களுடன் நெருக்கமாக இருப்பது, சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்வது ஆகியவை அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருந்தன.
இந்த எல்லாப் பழக்கங்களையும் ஒன்றாக இணைத்து “Power 9” என்று பெயரிட்டார் டான் பியூட்னர்.
இயற்கையாக உடலை இயக்குவது, வாழ்க்கையின் நோக்கத்தை உணர்வது, மன அழுத்தத்தைக் குறைப்பது, 80% மட்டுமே சாப்பிடுவது, தாவர அடிப்படையிலான உணவு, குடும்ப உறவுகள், நல்ல நண்பர்கள், சமூகத்துடன் இணைந்து வாழ்வது போன்ற ஒன்பது வாழ்க்கை முறைகளே அதில் இடம்பெற்றன.
இந்த ஆய்வுகள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றன. 2005-ல் National Geographic இதைப் பற்றி சிறப்புக் கட்டுரை வெளியிட்டது.
பின்னர் டான் பியூட்னர் எழுதிய தி புளு ஸோன்ஸ் (The Blue Zones) என்ற புத்தகம் உலகளவில் அதிகம் வாசிக்கப்பட்டது.
அதன் பிறகு Blue Zones Project என்ற திட்டம் தொடங்கப்பட்டு, சில நகரங்களில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

Blue Zones பற்றிய கருத்துகள் உலகம் முழுவதும் பிரபலமான பிறகு, சில விஞ்ஞானிகள் அதன் ஆதாரங்களையே கேள்விக்குள்ளாக்கத் தொடங்கினர்.
2019-ஆம் ஆண்டு மரபியல் ஆய்வாளர் சால் நியூமன் (Saul Newman), புளு ஸோன்ஸ் பகுதிகளில் உள்ள சில நூறு வயது மக்களின் வயது பதிவுகளில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறினார்.
சிலரின் பிறப்புச் சான்றிதழ்கள் கிடைக்கவில்லை என்றும், சில வயது விவரங்கள் அதிகாரப்பூர்வ பதிவுகளுடன் பொருந்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதனால், புளு ஸோன்ஸ் பற்றிய சில தரவுகள் மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் முன்வைத்தார்.
மேலும், Okinawa போன்ற பகுதிகளில் சமீபத்திய தலைமுறையினரின் ஆயுட்காலம் மாறிவருகிறது என்றும், Nicoya பகுதியில் பிறந்த அனைத்து தலைமுறையினரிடமும் ஒரே மாதிரியான நீண்ட ஆயுள் காணப்படவில்லை என்றும் சில ஆய்வுகள் சுட்டிக்காட்டின.
இதற்கு டான் பியூட்னர் பதிலளித்தார். சால் நியூமனின் முடிவுகளுடன் தாம் ஒத்துக்கொள்ளவில்லை என்றும், தங்களது தரவுகள் பல்வேறு முறைகளில் சரிபார்க்கப்பட்டவை என்றும் அவர் கூறினார்.
அதோடு, புளு ஸோன்ஸின் முக்கிய நோக்கம் ஒரு “அதிசய இடத்தைக் காட்டுவது அல்ல; ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை உலகிற்கு எடுத்துக்காட்டுவதே” என்றார்.

இன்று பல முன்னணி மருத்துவ நிபுணர்களும், பல்கலைக்கழக ஆய்வுகளும், புளு ஸோன்ஸில் காணப்படும் வாழ்க்கை முறைகள் உடல் நலத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் உதவுகின்றன என்பதற்கு தனித்தனி அறிவியல் ஆதாரங்கள் இருப்பதாக குறிப்பிடுகின்றனர்.
புளு ஸோன்ஸ் பகுதிகளின் மக்கள் தொகைத் தரவுகள் குறித்து இன்னும் சில அறிவியல் விவாதங்கள் இருந்தாலும் அந்த ஆய்வுகள் எடுத்துக்காட்டும் வாழ்க்கை முறைகள் இன்றைய இயந்திர வாழ்க்கை வாழும் தலைமுறையினருக்கு ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள உதவக்கூடும்.
நீண்ட நாட்கள் உடல் நலத்துடன் வாழ்வதற்கான ரகசியம் ஒரு அதிசய மருந்திலோ, விலையுயர்ந்த சிகிச்சையிலோ இல்லை.
நாம் தினமும் எப்படி சாப்பிடுகிறோம், எப்படி நகர்கிறோம், யாருடன் வாழ்கிறோம், எதற்காக வாழ்கிறோம் என்பதில்தான் அதற்கான பெரும்பாலான பதில்கள் இருக்கின்றன.
– சங்கீதா