இப்படியொரு பிறந்த நாள் நிகழ்வை நான் எதிர்பார்க்கவில்லை. அற்புதம். எப்போதாவதுதான் நிகழும். அது கவிஞர் கரிகாலனுக்கு நடந்தது. நிகழ்த்திக் காட்டியவர் இயக்குநர் நந்தா பெரியசாமி. இருவரும் அன்புடன் அழைத்தார்கள்.
விருகம்பாக்கத்தில் உள்ள பிளாக் ஃபாரஸ்ட் மட் மக் உணவகத்தில் ஒரு கோப்பைத் தேநீரோடும் அவரது கவிதைகளோடும் மகிழ்ந்திருக்க ஒரு கூடுகை என்றார்கள்.
ஆனால், கடைசி வரை தேநீர் தரவில்லை. வந்திருந்த விருந்தினர்களுக்கு சுவைமிகு விருந்தே கொடுத்துவிட்டார்கள்.
நவீனமாக இன்டீரியர் செய்யப்பட்ட உணவகம். மெல்லிய விளக்கொளி, வசதியாக உட்கார ஷோபாக்கள். மெனு லிஸ்ட்டில் விருப்பத்தை டிக் செய்து பெயர் எழுதிக் கொடுத்தோம். சூப்பில் தொடங்கி பெயர் சொல்லி அழைத்து பரிமாறினார்கள்.
காசு கொடுத்தால் கொஞ்சம் காஸ்ட்லியாக இருக்கலாம். காதுக்கு இனிமை சேர்க்க இளையராஜாவின் பாடல்கள்.
விருத்தாச்சலம் அருகே மருங்கூரில் பிறந்த கரிகாலன், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நவீன தமிழ் இலக்கியவெளியில் இயங்கிவரும் கவிஞர்.
இலக்கியப் பங்களிப்புகளுக்காக கதா இலக்கிய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
பண்பாடு, கலை, நுண் அரசியல் வெளிகளில் தொடர்ந்து செயல்படுகிறார். தற்போது ஃபேஸ்புக் பக்கங்களில் அவர் எழுதும் ரசனைக் குறிப்புகளுக்கு வாசகர்கள் அதிகம்.
திரைப்படம் பற்றிய கரிகாலனின் விமர்சனங்கள் தமிழ்ச் சூழலில் ஒரு புதிய குரலாக ஒலிக்கிறது.
மனிதர்களை நேசிக்கும் படைப்புக் கலைஞன் கரிகாலனின் கவிதைகள் அதிகாரமற்ற பேரன்பை மானுடத்திற்கு அள்ளித்தருகின்றன.
நேற்று மாலையில் நடந்த கூடுகையில் சமகால படைப்பாளிகள் பலரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர். நிகழ்வை தொகுத்து வழங்கியவர் பதிப்பாளர் கவிஞர் அம்பிகா குமரன்.
கவிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் – நந்தா பெரியசாமி, பிருந்தா இளங்கோ, பாலைவன லாந்தர், ம.கா. சிவஞானம், என். ஸ்ரீராம், ஜின்னா அஸ்மி, டிஸ்கவரி வேடியப்பன், வடலூர் ஆதிரை, அசோக் சாம்ராட், அஜயன்பாலா,
கவிதைக்காரன் இளங்கோ, வேல்கண்ணன், வீரமணி, விஷ்ணுபுரம் சரவணன், லார்க் பாஸ்கரன், ஜோசப் மாணிக்கம், வசந்தபாலன் மற்றும் நான் உள்பட பலரும் கரிகாலனின் கவிதை, எழுத்து, திரைப்பட ரசனை பற்றிப் பேசி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்கள்.
சில நிமிடங்களில் வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் கரிகாலன்.
விருந்தளித்த மட் மக் நிறுவனர் மகேந்திரனின் உபசரிப்புக்கு பெரும் நன்றியும் அன்பும்.
சென்னையில் ஒரு கவிஞருக்கு இப்படியொரு புதுமையான பிறந்த நாள் நிகழ்வு நடந்தது என் அனுபவத்தில் புதியது. மகிழ்ந்திருந்த ஒரு மாலைப்பொழுது.




– சுந்தரபுத்தன்