அறுபத்தாறு வருடங்களுக்கு முன் என் பெற்றோரின் திருமணப் பரிசாக ஒரு புத்தகம் வந்தது. அதுவும் ஒரு கவிஞர் எழுதிய கடித இலக்கியம். புத்தகத்தின் பெயர் ‘திருமண நாள்’. எழுதியவர் கவிஞர் சுப்பு ஆறுமுகம்.
அது திருமணமாகிப் போகும் பெண்களுக்கு சொல்லும் புத்திமதிக் கடிதம். அது அந்தக் காலத்தின் கோலம்.
கவிஞர் நா.வே.அருள் அவர்கள் எழுதியிருக்கும் ‘மற்றவை நேரில்…’ தொகுப்பும் ஒரு கடித இலக்கியம் தான்.
ஆனால், இது பெண்களுக்கு புத்தி சொல்ல எழுதப்பட வில்லை. பெண்களாக நின்று, அறச்சீற்றம் கொண்டு, சமூகத்தின் அனைத்து அங்கங்களையும் கேள்விகேட்கும் கவிஞர் அருளின் கோபம் பொங்கும் கடிதங்களின் தொகுப்பு இது.
தமிழில் உரைநடை எழுதுவது மிகவும் கடினம். ஏனென்றால் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய், தன்னைப் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தி, சொற்செல்வங்களை குவித்து வைத்திருக்கும் தமிழ் ஒரு கவிதை மொழி.
தமிழில் எழுதும்பொழுது, தொடர்ந்து வந்து விழுந்து கொண்டே இருக்கும், கவிதைகளை நீக்குவதே உரைநடை எழுத முதல் பாடம். அதையும் மீறி தேங்கி நிற்கும் கவிதைகளை உடைத்தாவது உரைநடை ஆக்கவேண்டும். அது ஒரு பயிற்சி. அப்படித்தான் தமிழில் உரைநடை உருவாகி இன்று சீர்பெற்று வளர்ந்து நிற்கிறது.
கவிஞர் அருள் தன் கடிதங்களில் இருந்து கவிதைகளை நீக்க பெரும் முயற்சி செய்திருக்கிறார். ஆயினும் கவிதைகள் ஆங்காங்கே ஒளிந்திருக்கத்தான் செய்கிறது.
அது கவிஞர்களின் பிரச்சினை.
கவிஞர் அருளின் கடிதங்கள் அனைத்தும், பெண்களுக்காகவும், தானே பெண்களாய் மாறியும் எழுதப்பட்டவை. இந்தத் தொகுப்பை இவர் எழுதி சுமார் இருபது வருடங்கள் கடந்துவிட்டன.
இப்போது பரவலாக பேசப்படும் பெண்ணிய வாதங்கள் பலவற்றையும் கவிஞர் அருள் அப்போதே முன்வைத்திருப்பது கருதத்தக்கது.
குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், திருநங்கைகளுக்கும் தொடர்ந்து ஆண்களால் இழைக்கப்படும் வன்கொடுமைகளே, கவிஞரை சீற்றம் கொண்டு, உள்ளம் குமைந்து கடிதங்களாக எழுதவைத்தன என்று இந்தப் புத்தகத்தில் இருந்து அறியமுடிகிறது.
காலம்காலமாக கணவனிடம் வதைபடும் மனைவியருக்காக, ஆண்கள் மையம் கொண்டு புறையோடிய, விபச்சாரத்தின் கீழ்மைகளை வெளிப்படுத்தி, மகனை ஆளாக்கி, மகளை கழித்துக் கட்டி செத்துப்போன அப்பனை கிழித்தெறியும் மகளாக,
தற்கொலைக்கு முயலும் பள்ளி மாணவிக்கு, ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய ‘வால்காவிலிருந்து கங்கை வரை’யை நினைவூட்டி,
மதப் பஞ்சாயத்தை எதிர்த்து, பெண் குழந்தைகளை வன்புணரும் பாழ்பட்ட ஆண்களுக்கு, திருமணம் பெண்களை படுத்தும் பாடுகளை முன்னிறுத்தி, தொழுநோய் பீடித்த பிச்சைக்காரக் கிழவியின் சார்பாக, குழந்தைத் திருமண கொடூரங்களை விளக்கி,
பெண்கள் அரசியல் பதவியே பெற்றாலும், அடக்கியாள முனையும் ஆடவர் புத்தியை அம்பலப்படுத்த, கணவன் எனும் சந்தேகப் பிராணிகளை கழித்தொழிக்க, துப்புரவு பெண் தொழிலாளியின் உள்ளத்தின் வாயிலாக,
பெண்களை மதம் படுத்தும் பாடுகளை இவ்வாறான நம் உள்ளம் பதைக்கும் சமூகப் பிரச்சினைகளை கவிஞர் அருள் எப்போதும் போல கவிதைகளில் அல்லாமல் கடிதங்கள் வாயிலாக நம் முன் வைக்கிறார்.
ஒவ்வொன்றையும் விரிவாக சொல்வதற்காகவே கடித வடிவத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். அது மிகச்சரியான தேர்வு தான்.
என்னைப் பொறுத்தவரை இந்தப் புத்தகத்தின் முதல் கடிதமே என்னைப் புரட்டிப் போட்டது. நான் செய்த குடும்ப அநியாயங்களை பட்டியலிட்டுக் காட்டியது.
‘கற்றபின் நிற்க அதற்குத் தக’
ஆகையால், இன்னும் மிச்சமிருக்கும் என் குறைகளை, மிச்சமிருக்கும் வாழ்விலாவது நீக்க, நிச்சயம் கவிஞர் நா.வே.அருள் அவர்களின் ‘மற்றவை நேரில்…’ எனக்கு உதவும்.
நீங்கள் படித்தால் உங்களுக்கும் வேறு வகைகளில் உதவலாம்.
என்னைக் கவர்ந்த வரிகளில் சில உங்கள் பார்வைக்கு..
“…வருகிற உள்ளாட்சித் தேர்தலில் நான் பஞ்சாயத்துத் தலைவராய்ப் போட்டியிடலாம் என்று நினைக்கிறேன்.
விவாகரத்து வாங்கிக் கொண்ட கணவர் இனி என் விவகாரத்தில் தலையிட முடியாது அல்லவா?”
•••
“என் கனவெல்லாம் இப்போதைக்கு இதுதான். என் இரண்டு மகள்களும் சந்தேகப்படாத கணவன்மார்களுக்கு வாழ்க்கைப் படவேண்டும்”
•••
“நான் விற்ற எத்தனையோ பொருள்களுக்கு ‘கியாரண்டி’ உண்டு. நான் வாங்கப் போகும் மாப்பிள்ளைக்கு என்ன ‘கியாரண்டி?’.
நீங்க வாங்கறதுக்கு முன்னால ஒரு பொருளை எத்தனை முறை சோதித்துப் பாத்து வாங்கறீங்க. நான் வாங்கப் போகும் மாப்பிள்ளையை எப்படிச் சோதித்துப் பாக்கறது?”
•••