இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கட்டம் சரியில்லை. அவர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரை இந்தியா மோசமாக இழந்தது.
இப்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தடுமாறிக்கொண்டு இருக்கிறது.
இதில் முதல் 2 டெஸ்ட் தொடர்களில் கம்பீரைப் போலவே மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் ஆகியோரும் விமர்சிக்கப்பட்டனர்.
ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூத்த வீரர்கள் யாரும் இல்லாததால், தோல்விக்கான முழு பழியும் கம்பீர் மீது விழுந்துள்ளது.
அணித் தேர்வில் அவர் செய்த குளறுபடிகள்தான் இங்கிலாந்தில் இந்திய அணி தடுமாறுவதற்கு முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர் முன்னாள் இந்திய வீரர்கள். அதனால் அவரது பயிற்சியாளர் பதவிக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் இங்கிலாந்து தொடரில் கம்பீர் செய்திருக்கும் முக்கிய தவறுகள்…
நிராகரிக்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர்:
இந்திய அணி இங்கிலாந்துக்கு செல்லும் முன்பே கம்பீர் செய்த முக்கிய தவறு ஸ்ரேயர் ஐயரை அணியில் சேர்க்காதது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடிவரும் ஸ்ரேயஸ், கடந்த ஐபிஎல் தொடரிலும் நிறைய ரன்களைக் குவித்திருந்தார்.
ஆனால், அவரை இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் சேர்க்க, தேர்வுக்குழு கூட்டத்தில் கம்பீர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
2024-ம் ஆண்டு கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை வென்றபோது, அந்த அணியின் பயிற்சியாளராக கம்பீரும், கேப்டனாக ஸ்ரேயசும் இருந்தனர்.

கொல்கத்தா அணியில் வெற்றிக்கு காரணம் யார் என்பதில் கம்பீருக்கும், ஸ்ரேயஸ் ஐயருக்கும் இடையே சிறு ஈகோ மோதல் இருந்ததாக கூறப்படுகிறது.
அதனாலேயே ஸ்ரேயஸ் ஐயரை அணியில் சேர்க்க கம்பீர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அவருக்கு பதில் கருண் நாயர், சாய் சுதர்சன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவரும் தொடர்ந்து சொதப்ப, ஸ்ரேயஸ் ஐயரை கடுமையாக மிஸ் செய்கிறது இந்திய அணி.
கண்டுகொள்ளப்படாத குல்தீப் யாதவ்:
இன்றைய சூழலில் இந்திய அணியின் நம்பர் 1 சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். ஆனால், இங்கிலாந்துக்குச் சென்ற இந்திய அணியில் குல்தீப் யாதவ் இருந்தாலும், முதல் 4 டெஸ்ட் போட்டிகளிலும் கவுதம் கம்பீர் அவரைப் பயன்படுத்தவில்லை.
மாறாக அணியின் பேட்டிங்கை பலப்படுத்துவதாக கூறி நிதிஷ் குமார், ஷர்துல் தாக்குர் ஆகிய ஆல்ரவுண்டர்களுக்கு மாறி மாறி வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அந்த 2 வீரர்களும் கவுதம் காம்பீர் எதிர்பார்த்தபடி ரன்களையும் குவிக்கவில்லை, விக்கெட்டையும் எடுக்கவில்லை.
பும்ராவுக்கு இணையாக விக்கெட் எடுக்கும் ஆற்றல் வாய்ந்த குல்தீப் யாதவ் அணியில் இல்லாதது, இங்கிலாந்துக்கு மிகப்பெரிய சந்தோஷத்தைக் மொடுத்தது.
இந்திய பந்துவீச்சு மொன்னையாக இருந்ததால், ஓல்ட் ட்ராஃபோர்ட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 669 ரன்களைக் குவித்தது இங்கிலாந்து. அதேநேரத்தில் தனக்கு எதிர்புறத்தில் இருந்து ஆற்றலுடன் பந்துவீசும் வீரர் இல்லாத்ததால், பும்ராவும் சோர்வடைந்தார்.
காம்போஜ் விஷயத்தில் சறுக்கல்:
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஆகாஷ்தீப், அர்ஷ்தீப் ஆகியோருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு மாற்றாக அன்சுல் காம்போஜை அணியில் சேர்க்க பச்சைக்கொடி காட்டினார் கவுதம் கம்பீர்.
இந்திய அணிக்காக ஏற்கெனவே ஆடி அனுபவம் பெற்ற ஹர்ஷித் ராணாவுக்கு பதில் காம்போஜை அணியில் சேர்த்தது மிகப்பெரிய தவறாகிப் போனது. 125 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் காம்போஜால் பந்து வீச முடியவில்லை.

அதிவேக பந்துவீச்சாளர்களை எதிர்த்து ஆடிய அனுபவம் வாய்ந்த இங்கிலாந்து அணிக்கு, காம்போஜின் பந்துவீச்சில் ரன் குவிப்பது பூக்களை பறிப்பதுபோல் மிக எளிதாக இருந்துள்ளது.
இந்திய அணியின் சறுக்கலுக்கு இதுவும் முக்கிய காரணமாக இருந்துள்ளது.
கம்பீரின் இந்த தொடர் தவறுகளால் இங்கிலாந்தில் இந்திய அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது.
அதனால் அவரை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு விவிஎஸ் லக்ஷ்மணை பயிற்சியாளராக்க வேண்டும் என்ற குரல் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களிடையே ஓங்கி ஒலிக்கிறது.
இந்த கண்டத்தில் இருந்து கம்பீர் தப்புவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
- பி.எம். சுதிர்