நிறைவேறிய வாஷிங்டனின் கனவு!

இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்திருக்கிறார் வாஷிங்டன் சுந்தர். இதன்மூலம் தமிழகத்துக்கும் அவர் பெருமை சேர்த்துள்ளார்.

வாஷிங்டன் சுந்தரின் இந்த சதம், இங்கிலாந்திடம் இந்திய அணி தோற்பதில் இருந்து காத்துள்ளது.

ஒரு சுழற்பந்து வீச்சாளராக இந்திய அணிக்குள் நுழைந்து, இன்று ஒரு சிறப்பான ஆல்ரவுண்டராக உருவெடுத்து நிற்கிறார் வாஷிங்டன் சுந்தர். இந்த வெற்றிக்கெல்லாம் மூல காரணமாக இருந்தவர் வாஷிங்டன் சுந்தரின் அப்பாதான்.

இதுபற்றி ஒரு பேட்டியில் வாஷிங்டன் சுந்தர் கூறும்போது, “என் ஒவ்வொரு முயற்சியிலும் துணை நின்றவர் என் அப்பாதான்.

நான் ஒரு போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனாலும், சதம் அடித்தாலும் அவர் என்னுடன் உறுதியாக இருந்தார். அவர் இல்லாமல் எதுவுமே நடந்திருக்காது” என்கிறார்.

வாஷிங்டன் சுந்தரின் அப்பா சுந்தரும் முன்னாள் கிரிக்கெட் வீரர்தான். உள்ளூர் போட்டிகளில் ஆடியுள்ள அவர், தான் கிரிக்கெட் போட்டிகளில் ஆடச்செல்லும்போதெல்லாம் மகன் வாஷிங்டனையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.

போட்டியின்போது கிடைக்கும் இடைவேளைகளில் அவர் வாஷிங்டனுக்கு டென்னிஸ் பந்துகளை வீசி பேட்டிங் பயிற்சி அளித்துள்ளார். அந்த நேரத்தில் வாஷிங்டனின் ஸ்டைலை வைத்து, அவரால் கிரிக்கெட்டில் ஜொலிக்க முடியும் என்று கணித்திருக்கிறார் சுந்தர்.

இதைத்தொடர்ந்து வாஷிங்டனை தீவிர கிரிக்கெட்டில் அவர் ஈடுபடுத்தியுள்ளார்.

பின்னர் சுந்தரின் நண்பரும் தமிழக அணியின் முன்னாள் பேட்ஸ்மேனுமான டபிள்யூ.வி.ராமனின் மேற்பார்வையில் வாஷிங்டனின் பேட்டிங் மெருகேற்றப்பட்டுள்ளது.

பேட்டிங்கில் மட்டுமின்றி சுழற்பந்து வீச்சிலும் கெட்டிக்காரராக உருவெடுத்துள்ளார் வாஷிங்டன்.

தமிழகத்தின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான வெங்கட்ரமணாவின் பயிற்சியால் வாஷிங்டனின் சுழற்பந்து வீச்சில் மெருகு கூட, கிரிக்கெட்டில் ஒவ்வொரு கட்டமாக வளர்ந்து 2016-ல் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்தத் தொடரில் தன் சிக்கனமான பந்து வீச்சாலும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதைத்தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிய வாஷிங்டனை 2028-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் 3.20 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது ஆர்சிபி அணி.

இதைத்தொடர்ந்து அடுத்த ஐபிஎல் தொடரில் புனே அணிக்காக அவர் ஆடினார். அதில் சிறப்பாக பந்துவீசி கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்தார்.

ஐபிஎல் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான ரஞ்சி உள்ளிட்ட போட்டிகளில் தனது திறமையை நிரூபித்து இந்திய அணியில் நுழைந்த வாஷிங்டன், இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் மூலம் தனது இட்த்தை ஸ்திரப்படுத்தி உள்ளார்.

கிரிக்கெட்டில் தனது வழிகாட்டிகளாக தோனி, ஸ்மித் ஆகியோரைத்தான் வாஷிங்டன் கூறுகிறார். இதுபற்றி கூறும் அவர், “புனே அணிக்காக ஆடியதில் எனக்கு 2 குருநாதர்கள் கிடைத்தனர். ஒருவர் மகேந்திர சிங் தோனி.

மற்றொருவர் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். தான் பந்து வீசும்போது, ஸ்டம்புக்கு பின்னல் தோனியை போன்ற திறமைவாய்ந்த ஒரு ஜாம்பவான் நிற்கவேண்டும் என்பதே ஒவ்வொரு பந்துவீச்சாளரின் கனவாக இருக்கும்.

அந்தக் கனவு எனக்கு ஐபிஎல் மூலம் நிறைவேறியது. ஐபிஎல் போட்டிகளில் நான் பந்து வீசியபோது ஒரு குருநாதராகவும் இருந்து தோனி ஆலோசனைகளை வழங்கி வழிநடத்தினார்.

அவரைப் போலவே கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் எனக்கு உந்துசக்தியாக இருந்தார். தொடர்ந்து 11 போட்டிகளில் எனக்கு வாய்ப்பளித்து, என் திறமையை வெளியில் தெரியவைத்தார்” என்கிறார்.

பொதுவாக ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு வகையான ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்புவார்கள்.

உதாரணமாக புஜாரா, டெஸ்ட் போட்டிகளிலும், யுவராஜ் சிங் குறுகிய கால போட்டிகளிலும் அதிக ஆர்வம் செலுத்துகிறார்கள்.

ஆனால், வாஷிங்டன், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் தான் நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

“கிரிக்கெட்டில் ஒவ்வொரு வகையான ஆட்டமும் ஒரு வகையான சவால். நான் சவால்களை நேசிக்கிறேன்.

ஒவ்வொரு சவாலையும் துணிச்சலுடன் எதிர்கொள்ள விரும்புகிறேன்” என்று உறுதியுடன் கூறுகிறார் வாஷிங்டன் சுந்தர்.

“பெரிய அளவில் லட்சியத்தை வைத்துக் கொண்டு எனக்கு நானே நெருக்கடியை கொடுக்க விரும்பவில்லை.

அதே நேரம் கிடைக்கும் அனைத்து சந்தர்ப்பங்களையும் 100 சதவீதம் பயன்படுத்துவேன்.

இந்திய ரசிகர்களுக்கு பிடித்த வீரனாக உருவெடுப்பேன்” என்று சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் வாஷிங்டன் சுந்தர்.

நேற்றைய முதல் சதம் அந்த கனவுகள் நிறைவேறுவதற்கான முதல் படியாக இருக்கட்டும்.

– பி.எம்.சுதிர்

You might also like