சிஎஸ்கேவுக்கு வரும் சஞ்சு சாம்சன்!

இறுதிக் கட்டத்தில் பேச்சுவார்த்தை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சன் ஆட வருவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகளுக்கு இடையே இது தொடர்பான கடைசிகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

சி.எஸ்.கே.வைப் பொறுத்தவரை, தோனி ஓய்வுபெறும் நிலையில் இருக்கிறார்.

இந்த நேரத்தில் அவரது இழப்பை ஈடுகட்ட ஒரு நட்சத்திர வீரர் தேவைப்படுகிறார். அந்த வீரர் ஒரு விக்கெட் கீப்பராகவும் இருப்பது நல்லது என்று சிஎஸ்கே நிர்வாகம் நினைக்கிறது.

அந்த வகையில் ரிஷப் பந்த்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏலம் எடுப்பார்கள் என்று முதலில் கூறப்பட்டது.

ஆனால், கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் அவரை 27 கோடி ரூபாய் கொடுத்து லக்னோ ஜெயண்ட்ஸ் அணி வாங்கியது.

மற்றொரு அதிரடி விக்கெட் கீப்பரான இஷான் கிஷன் இப்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடுகிறார். அவரை விட்டுக்கொடுக்க சன்ரைசர்ஸ் அணி தயாராக இல்லை.

இதனிடையே ராஜஸ்தான் அணியை விட்டு வெளியேற சஞ்சு சாம்சன் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சஞ்சுவைப் பொறுத்தவரை, அவருக்கும் அணியின் பயிற்சியாளரான திராவிட்டுக்கும் கடந்த ஐபிஎல் தொடரில் உறவு சீராக இல்லை. இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.

அதேநேரத்தில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வாலுக்கு, கேப்டனாகும் விருப்பம் ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து அணி நிர்வாகத்திடம் அவர் பேசியுள்ளார்.

கேப்டன் பதவி கிடைக்காவிட்டால், அணியில் இருந்து வெளியேறவும் அவர் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகின.

ஜெய்ஸ்வால் அதிரடி வீரர் என்பதால் அவரை இழக்க ராஜஸ்தான் நிர்வாகம் தயாராக இல்லை.

சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் கோப்பையை வெல்லாததால், அவருக்கு பதில் ஜெய்ஸ்வாலை கேப்டனாக்கினால் என்ன என்ற எண்ணம் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதைக் கேள்விப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து வாங்க திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வந்தால் அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

அதிரடி பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன், விக்கெட் கீப்பராகவும் இருப்பதால், தோனிக்கு மாற்றாக இருப்பார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் நம்புகிறது.

சிஎஸ்கேவுக்கு சஞ்சு சாம்சனை தரும் பட்சத்தில், அவருக்கு பதிலாக சென்னை அணியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய 3 வீரர்களில் யாராவது ஒருவரை தங்கள் அணிக்கு தருமாறு ராஜஸ்தான் கேட்கிறது.

ருதுராஜ் கெய்க்வாட்டை தர முடியாது என்பதில் சிஎஸ்கே நிர்வாகம் உறுதியாக இருக்கிறது. மற்ற இருவரில் யாரைக் கொடுப்பது என்ற யோசனையில் இருக்கிறது.

ஷிவம் துபேவை சிஎஸ்கே கொடுத்தாலும், சஞ்சு சாம்சனின் தொகையை ஈடுகட்ட, அஷ்வினையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேட்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த ஐபிஎல் ஏலத்தில் அஸ்வினை வாங்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடுமையாகப் போராடி இருந்தது.

கடைசியில் 9.75 கோடி கொடுத்து அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வசமாக்கியது.

சஞ்சுவை வாங்குவது குறித்து தெரிவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகி ஒருவர்,

“சஞ்சு சாம்சன் ஒரு இந்திய பேட்ஸ்மேன் என்பதாலும், விக்கெட் கீப்பர் என்பதாலும் அவரை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்வமாக இருக்கிறது.

அதே நேரத்தில் அவருக்கு பதிலாக எந்த வீரரை டிரேடிங் செய்வது என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை” என்றார்.

ஆகமொத்தத்தில் மலையாள சேட்டனான சஞ்சு சாம்சன், சென்னையின் சிங்கமாக மாறுவதற்கான காலம் கனிந்து வருகிறது.

– பி.எம்.சுதிர்

You might also like