‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இதனால் வெற்றிமாறனுக்கும், தனுஷுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.
இந்த வதந்திகளுக்கு வெற்றிமாறன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், வெற்றிமாறன் கூறியுள்ளதாவது :
‘வாடிவாசல்’ கதை எழுதுவதில் கொஞ்சம் தாமதம் ஆகிறது. அதற்காக காத்திருக்க வேண்டாம் என்பதால் சிம்பு படத்தினைத் தொடங்குகிறேன். தாணு சார் தான் சிம்பு சாரை சந்திக்கிறீர்களா எனக் கேட்டார். உடனே சந்தித்துப் பேசினேன். அனைத்துமே சில மணி நேரங்களில் முடிந்துவிட்டது.
சிம்பு நடிக்கும் படம் ‘வடசென்னை 2’ அல்ல. தனுஷ் நடிக்க, அன்புவின் எழுச்சியாக மட்டுமே ‘வடசென்னை 2’ இருக்கும். ஆனால், சிம்பு நடிக்கும் படத்தின் கதை வடசென்னை உலகத்தில் இருக்கும். ‘வடசென்னை’ கதையில் இருக்கும். சின்னச் சின்ன விஷயங்கள், இந்தக் கதைக்குள்ளும் இருக்கும்.
‘வடசென்னை’ படத்தின் அனைத்து உரிமைகளும் தனுஷிடம் இருக்கிறது. அப்படம் சார்ந்து என்ன நடந்தாலும் அவரிடம் தான் உரிமை வாங்க வேண்டும்.
அதைச் சார்ந்து படம் எடுக்கும் போது, அவர் பணம் கேட்பதில் தவறே இல்லை. ஆனால், உண்மை என்னவென்றால் சிம்புவை சந்தித்து அனைத்தும் முடிவான அடுத்த நாள் தனுஷிடம் தொலைபேசியில் பேசினேன்.
‘’வடசென்னை உலகத்தில் உள்ள படமாகவும் அல்லது தனி படமாகவும் என்னால் பண்ண முடியும். அனைத்துமே உங்களை சார்ந்து இருக்கிறது” என்று அவரிடம் கேட்டேன்.
உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதைப் பண்ணுங்கள். எனது அணியினரிடம் பேசிக் கொள்கிறேன், பணமெல்லாம் வேண்டாம். உடனே தடையில்லாச் சான்றிதழ் கொடுக்கிறேன்” என்று தான் தனுஷ் சொன்னார்.
சமீபமாக யூடியூப் வீடியோக்களைப் பார்க்கும்போது, சிலருடைய செய்திகள் ரொம்பவே காயப்படுத்தியது. என்னையும் தனுஷையும் வைத்து சிலர் பேசும் விஷயங்கள் பிடிக்கவில்லை. இதனாலேயே இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.
தனுஷுக்கும் எனக்குமான உறவு ஒரு படம் சார்ந்த விஷயத்தில் முடிந்துவிடுவது அல்ல. சிம்புவுடன் படம் பண்ணுகிறேன் என்று சொன்னவுடன், “கண்டிப்பாக உங்கள் இருவருக்குமே புதுசா இருக்கும். சிம்புவுக்குமே உங்களுடன் பணிபுரிவது புதுசா இருக்கும்” என்று தனுஷ் சொன்னார்” என விளக்கம் அளித்துள்ளார் வெற்றிமாறன்.
– பாப்பாங்குளம் பாரதி.