தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கிய கானா பாலா!

தமிழ் சினிமா உலகில் பாடல்களுக்கு என எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. காதல், பக்தி, சோகம், தத்துவம் என பல வகையான பாடல்கள் தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்றிருக்கின்றன. இதேபோல் கானா பாடல்களும் தனக்கான ஒரு முத்திரையை பதித்துள்ளது.

தமிழ்த் திரைப்படத்துறையில் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் உச்சத்தில் இருக்கும்போது தனக்கென தனி டிராக்கை கானா வழியில் உருவாக்கியவர் தேனிசைத் தென்றல் தேவா.

சென்னையில் மூலை முடுக்குகளில் ஒலித்து வந்த கானா பாடல்களை திரைப்படங்களில் முதலில் பயன்படுத்தியவரும் தேவா தான். அன்று முதல் இன்றைக்கு வரைக்கும் இவரின் பாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

தமிழ்த் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத இசை சக்தியாக உருவெடுத்துள்ள கானா பாடல்கள் இன்று வரை தனிச்சிறப்பைப் பெற்று வருகிறது.

பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு விதமான கானா பாடல்கள் பல பாடகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு வந்த சூழலில் 2007-ம் ஆண்டில் ‘பிறகு’ என்ற படத்தின் மூலம் கானா பாடகராக அறிமுகமானவர் தான் பாலா.

இவரது உண்மையான பெயர் பாலா முருகன். ரசிகர்கள் இவரை அனாதை பாலா, கானா குயில் கிங் பாலா என்றும் அழைப்பார்கள்.

வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கிய பாலா, கானா பாடல்கள் மீது கொண்ட தீராத காதலினால் அதை எழுதியும் பாடியும் வந்துள்ளார்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் அனாதை பாலா என்ற பெயரில் ‘பதினோரு பேரு ஆட்டம்’. ‘உன்னைப் போல பெண்ணை’ என்ற பாடல்களையும் பாடியுள்ளார்.

2008-ம் ஆண்டு ‘தொடக்கம்’ படத்தில் ‘ஃபோனப் போட்டு’ என்ற பாடலையும், ‘வேதா’ திரைப்படத்தில் ‘சிக்கு புக்கு ரயிலு’ என்ற பாடல்களையும் இவர் பாடி இருக்கிறார்.

2012-ம் ஆண்டு இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய ‘அட்டகத்தி’ படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் ‘ஆடி போனா ஆவணி’ மற்றும் ‘நடுக்கடலுல கப்பல எறங்கி தள்ள முடியுமா?’ போன்ற பாடல்கள் கானா பாலாவுக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தன.

இந்தப் பாடல்கள் மூலம் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் பரவி மிகவும் பிரபலமானார் கானா பாலா. இவை தவிர பீட்சா, நிமிர்ந்து நில், சேட்டை, பட்டத்து யானை உள்ளிட்ட பல படங்களிலும் கானா பாலா பாடியுள்ளார்.

பாடல்கள் எழுதுவது, பாடுவதோடு மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் தலைகாட்டவும் தவறவில்லை கானா பாலா.

கானா பாடல்களாலும் தனது தனித்த குரலாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குத்தாட்டம் போட வைத்து மகிழ்வித்து வருகிறார் கானா பாலா.

– நன்றி: இந்துஸ்தான் டைம்ஸ்

You might also like