குபேரா – உள்ளடக்கத்தில் செழுமையா, வறுமையா?

தமிழில் ‘மல்டி ஸ்டாரர்’ திரைப் படைப்புகள் வெகு அரிதாகத்தான் நிகழும். அதனாலேயே, அது போன்ற படங்கள் மீது எதிர்பார்ப்பு இரட்டிப்பாகும்.

தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ள ‘குபேரா’வும் அப்படியொரு எதிர்பார்ப்பினை உருவாக்கியது.

சேகர் கம்முலா இயக்கம், தேவிஸ்ரீ பிரசாத் இசை, ‘ட்ராகன்’ பட ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு எனப் பல அம்சங்கள் அதற்குக் காரணமாக இருந்தன. தற்போது இப்படம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

எப்படி இருக்கிறது ‘குபேரா’?

‘குபேரா’ கதை!

பிச்சை எடுத்து வாழும் ஒருவர், திடீரென்று தனது பெயரில் கோடிகோடியாகப் பணம் இருக்கிறது என்று உணர்ந்தால் என்னவாகும் என்பதே ‘குபேரா’வின் மைய இழை.

அரசியல் செல்வாக்கோடு திகழும் ஒரு மாபெரும் தொழிலதிபரான நீரஜ் (ஜிம் சரஃப்), மிகப்பெரிய அளவில் கருப்பு பணத்திற்கு ‘கணக்கு’ காட்டுகிற செயலொன்றில் ஈடுபடுகிறார். அதனைக் கனகச்சிதமாக முடிக்கிற நபரை முடிவு செய்ய முடியாமல் திணறுகிறார்.

அப்போது, அவரது தந்தை (தலிப் தஹில்), முன்னாள் சிபிஐ அதிகாரி தீபக் (நாகார்ஜுனா) பற்றிச் சொல்கிறார். அமைச்சகமொன்றில் சோதனை நடத்திய காரணத்திற்காக, பொய் வழக்கில் அவர் சிறைத் தண்டனை அனுபவித்து வருவதாகவும் கூறுகிறார்.

வழக்கம்போல, அவரிடம் பேரம் நடக்கிறது. முதலில் அவர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார். பிறகு, தான் நம்பிய நியாய தர்மம் தன்னைக் காப்பாற்றவில்லை என்ற முடிவுக்கு வருகிறார். நீரஜ் உடன் கைகோர்க்கிறார்.

தீபக்கின் முதல் பணியே மிகப்பெரியதாக அமைகிறது. சுமார் ஒரு லட்சம் கோடி கருப்பு பணத்தை கைமாற்ற வேண்டும். அதில் 50,000 கோடி ரூபாயைச் சட்டென்று வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கிறார் (எப்படி என்று கேட்கக் கூடாது).

மீதமுள்ள 50,000 கோடியைக் கணக்கில் கொண்டுவரச் சில பிச்சைக்காரர்களைப் பயன்படுத்த நினைக்கிறார்.

நான்கு பகுதிகளில் இருந்து நான்கு பிச்சைக்காரர்களை நீரஜ்ஜின் ஆட்கள் பிடித்து வருகின்றனர்.

திருப்பதியில் அவ்வாறு சிக்குகிறார் தேவா (தனுஷ்). இவரோடு கேலு, திவ்யா, குஷ்பு ஆகிய மூன்று பிச்சைக்காரர்கள் ஒரு அறையில் அடைக்கப்படுகின்றனர்.

மெல்ல அவர்களது தோற்றம், நடை, உடை, பாவனைகளை மாற்றுகிறார் தீபக். அவர்களது பெயரில் போலியாக நிறுவனம் செயல்படுவதாகக் காட்டப்படுகிறது. சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கப்படுகிறது.

அந்த வங்கிக் கணக்கில் இருந்து நீரஜுக்கு சொந்தமான ’பினாமி’ நிறுவனங்களின் கணக்கில் மாற்றப்படுகிறது. அவ்வாறு பணப் பரிமாற்றம் இரண்டு முறை நடக்க, அதன் தொடர்ச்சியாக கேலு, திவ்யா கொல்லப்படுகின்றனர்.

இந்த நிலையில் தேவாவும் குஷ்புவும் அது போன்ற பணப் பரிமாற்றத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். அதற்குள் ‘தாங்கள் கொல்லப்படுவோம்’ என்ற உண்மை இருவருக்கும் தெரிய வருகிறது.

அதன்பின் என்ன நடந்தது? நீரஜ்ஜின் ஆட்கள் பிடியில் இருந்து அவர்கள் தப்பினார்களா என்று சொல்கிறது இதன் இரண்டாம் பாதி.

உள்ளடக்கம் எப்படி?

கருப்பு பணத்தை கைமாற்றும் சிண்டிகேட், அதிலுள்ள ஒரு தொழிலதிபதிரின் பண வேட்கை, சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஒரு முன்னாள் சிபிஐ அதிகாரி, இவர்களுக்குச் சிறிதும் சம்பந்தம் இன்றி திருப்பதி மலையாடிவாரத்தில் இருக்கும் ஒரு பிச்சைக்கார இளைஞர் என்று வெவ்வேறு நபர்களை, பின்னணியைக் காட்டுகிறது ‘குபேரா’ திரைக்கதை.

அனைத்தையும் ஒன்றிணைக்கிற புள்ளி நாம் எதிர்பார்த்த மாதிரியே அமைகிறது. ஆனால், அதன்பிறகு திரைக்கதை நகர்வு ‘ரொம்ப மெதுவாக’ இருக்கிறது.

பெரும்பாலான திருப்பங்கள் எதிர்பார்த்த வகையிலேயே உள்ளது. கிளைமேக்ஸ் காட்சிகள் மட்டும் ‘பட்டாசு’ ரகம். இவற்றை ஒட்டுமொத்தமாகக் கட்டியிழுக்கிற வேலை ஏழெட்டு குதிரைகளைப் பூட்டிய தேரை ஓட்டுவதற்குச் சமம்.

அதனை எதிர்கொள்வதில் ரொம்பவே பின்னடைவைச் சந்தித்திருக்கிறார் இயக்குநர் சேகர் கம்முலா.

’இதற்கு முன் என்ன நடந்தது, பின்னே என்ன நடக்க இருக்கிறது’ என்பதைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாத வகையில் திரைக்கதையில் காட்சிகளை அடுக்குவது ஒருவகை சாமர்த்தியம். இதில் அது குறைவு.

அதனால், சில காட்சிகளின் பின்னணி விடுபட்டாற் போன்ற உணர்வை எதிர்கொள்ள நேரிடுகிறது. முக்கால்வாசி படம் முடிந்தபிறகு அந்த உணர்வு ஏற்படுவது ஏற்புடையதல்ல.

குறிப்பாக சமீராவாக வரும் ராஷ்மிகாவின் பெற்றோர், காதலர் பற்றிய விவரங்கள் திரைக்கதையில் பெரிதாக இல்லை.

அவரது தோழி குடும்பத்தினர் நாகார்ஜுனா பேசத் தொடங்கியதுமே தெறித்து விடுவதாகக் காட்சிகள் இருக்கின்றன. ஆனால், அக்காட்சி சரிவர நமக்குக் கடத்தப்படவில்லை.

போலவே, தீபக்கை நேரில் சந்திக்கிற குஷ்பு என்ன ஆனார் என்பது திரைக்கதையில் விளக்கப்படாதது ஒரு குறையே. இவையனைத்தும் உள்ளடக்கத்தில் இருக்கிற வறுமையைக் காட்டுகின்றன.

இது போன்ற குறைகளை மறக்கடிக்கிறது இதன் காட்சியாக்கம்.

ஒன்றுக்கொன்று நேரெதிரான களங்களை, அதனதன் இயல்புகளோடுகாட்டிய வகையில் ஈர்க்கிறது நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு. தோட்டா தரணியின் தயாரிப்பு வடிவமைப்பு அதற்குப் பக்கபலமாக இருக்கிறது.

படத்தொகுப்பு மேஜையில் கார்த்திகா ஸ்ரீனிவாஸ் நிறையவே சிரமங்களை எதிர்கொண்டிருப்பார் என்பதைத் திரையில் தெரியும் பிம்பங்கள் உணர்த்துகின்றன.

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ‘போய் வா நண்பா’, ‘கத கத கதை’ பாடல்கள் சட்டென்று ஈர்க்கின்றன.

இவை பின்பாதியில் வருவதால், முன்பாதியை நகர்த்துகிற வேலை முழுக்கப் பின்னணி இசையைச் சார்ந்திருக்கிறது. அதில் பெரும் உழைப்பைக் கொட்டியிருக்கிறார் தேவி.

சைதன்ய பிங்கலி உடன் இணைந்து இதன் திரைக்கதையாக்கத்தை மேற்கொண்டிருக்கிறார் இயக்குநர் சேகர் கம்முலா.

நிச்சயம் இவர்கள் எழுதி படம்பிடிக்கப்பட்டு பின்னர் தவிர்க்கப்பட்ட காட்சிகளைச் சேர்த்தால், குறைந்த பதினைந்து நிமிடங்களாவது வரலாம்.

படத்தின் நீளத்தைத் தவிர்க்கிற வகையில், திரைக்கதையைச் செறிவாக்குகிற வேலைகளை இந்தக் கூட்டணி சரிவரச் செய்யவில்லை.

மற்றபடி ஒலி வடிவமைப்பு, விஎஃப்எக்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் மனதைக் கவரும் வகையில் உள்ளன.

இதன் உள்ளடக்கம் வழக்கமான கமர்ஷியல் படங்களில் இருந்து ஓரளவுக்கு விலகி நிற்கிறது. அதேநேரத்தில் ‘பிச்சைக்காரன்’, ‘பிச்சைக்காரன் 2’, ‘ட்ராபிக் சிக்னல்’ உள்ளிட்ட சில படங்களின் சாயலைக் கொண்டிருக்கிறது.

முக்கியமான பாத்திரங்களின் பின்னணியை வடிவமைத்த சேகர் கம்முலா, திரையில் கூர்மையுடன் அவை வெளிப்படுமாறு செய்யத் தவறியிருக்கிறார். அதனால், சில இடங்களில் பாத்திர வார்ப்பு மழுங்கியிருக்கிறது.

இது போகப் பல குறைகள் உண்டு. அவற்றைச் சரி செய்வது நடிப்புக்கலைஞர்களின் இருப்பே.

வில்லன் கூட்டம், பின்னர் நாகார்ஜுனா அறிமுகம், அதன்பிறகே தனுஷின் காட்சிகள் என்று திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. இந்த வரிசையிலேயே ராஷ்மிகா பாத்திரமும் வருகிறது.

இவர்கள் அனைவரது நடிப்பும் அருமை. சிற்சில பாத்திரங்களில் வந்து போனவர்களும் நன்றாகவே நடித்துள்ளனர்.

இவர்களை மீறிப் படம் முழுக்க வியாபித்திருப்பது தனுஷ் மட்டுமே. அவருக்குச் சில பல விருதுகள் நிச்சயம்.

கிளைமேக்ஸ் காட்சியில் அவருக்குக் கிடைக்கிற கைத்தட்டல்கள் ‘இதுதாண்டா தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ்’ என்று சொல்ல வைப்பவை. ஆனால், அவற்றை இன்னும் அதிகப்படுத்தியிருக்க முடியும் என்பதே நமது ஆதங்கம்.

படத்தை உருவாக்கக் கஷ்டப்பட்டிருக்கும் சேகர் கம்முலா & குழு, கொஞ்சமாய் திரைக்கதை மற்றும் பாத்திரங்கள் வார்ப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், குபேரா ஒரு ‘செமயான மாஸ் கமர்ஷியல் படமாக’ மலர்ந்திருக்கும். இப்போது அந்த கோட்டைத் தொட முனைந்து கோட்டை விட்டிருக்கிறது.

– உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like