புரட்சிக் கவிஞரின் இடத்தை நிரப்பிய உவமைக் கவிஞர்!

திரைப்பாடல் ஒன்றை எழுத பாவேந்தர் பாரதிதாசனைத் தேடினார்கள். அவர் ஊரில் இல்லை. கிடைத்தவர் சுப்புரத்தினதாசன் எனப்படும் பாவேந்தரின் சீடரான சுரதா தான்.

பாடல் எழுதத் தொடங்கும் முன், தனது குருவான பாவேந்தருக்கு மிகவும் பிடித்தமான சொல் எது என்று சுரதா சிந்தித்தார்.

தமிழுக்கு அடுத்தபடி பாவேந்தருக்கு மிகவும் பிடித்தமான சொல் ‘அமுது’.

அந்த அமுதையே முதல் சொல்லாக்கி சுரதா அந்தத் திரைப்பாடலை யாத்தார்.

அந்தப் பாடல்

‘அமுதும் தேனும் எதற்கு? நீ அருகினில் இருக்கையிலே எனக்கு’ (படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்)
……..

நீர்க்குமிழி படத்தில் இடம்பெற்ற, ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா‘ என்ற பாடல் உவமைக்கவிஞர் சுரதாவின் சிறப்பான பாடல்களில் ஒன்று.

அதில் வரும், ‘முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா, கண் மூடினால் காலில்லா கட்டிலடா’ என்ற வரி அற்புதமானது. ‘காலில்லா கட்டில்’ என்று பாடையை சுரதா குறிக்கும் பாங்கு பாராட்டத்தக்கது.
………

‘நாணல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘விண்ணுக்கு மேலாடை பருவமழை மேகம்’ என்ற பாடலில், ‘மண்ணுக்கு மேலாடை வண்ணமயில் இருட்டு, மனதுக்கு மேலாடை தொடர்ந்து வரும் நினைவு’ என்றெல்லாம் குறிப்பிடும் சுரதா,

‘பத்துக்கு மேலாடை பதினொன்றே ஆகும்’ என்று எழுதி நம்மை வியக்க வைப்பார்.
………
‘மயில் ஆடுமோ வெயில் நாளிலே
கயல் நீந்துமோ சுடுநீரிலே’
என்று எழுதிய உவமைக் கவிஞர் சுரதாவின் நினைவைப் போற்றுவோம்!

நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு

You might also like