“பெரும்பாலான மக்கள் 25 வயதில் இறந்துவிடுகிறார்கள். 75 வயது வரை அடக்கம் செய்யப்படுவதில்லை.” – என்பார் பெஞ்சமின் பிராங்க்ளின்.
நல்லவேளை ஜெயதேவன் முதன் முறையாக இப்போதுதான் தனது 80 வது வயதில் இறந்திருக்கிறார். இது ஆறுதலான விசயம்தான்.
ஒரு கவிதையின் மத்தியப் பகுதியில் இடம் பெறக்கூடிய ஒரு வரியை யோசித்திருப்பார். சற்று களைப்பாக இருந்திருக்கலாம். ‘போதும்’ எனத் தோன்றியிருக்கும். விலகியிருப்பார்.
மற்றவர்கள் எப்படியோ. கவிஞர்கள் தாங்கள் இறப்பதற்கான பருவத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த வசந்தத்தை தெரிவு செய்திருக்கிறார் ஜெயதேவன்.
பலரை நான் ஞாபக மறதியால் இழந்திருக்கிறேன். அதைவிடவும் மனிதர்களை இழக்க மரணம் மிகவும் கனிவான வழியாகவே தோன்றுகிறது.
சமீபத்தில் ஒருநாள், ஜெயதேவன் அழைத்திருந்தார். அது எந்தையின் நினைவு தினம். நல்ல சமிக்ஞையாக அவ்வழைப்பு இருந்தது. கனிந்த குரல். எனது ‘கீழ்ப்படிய மறுக்கும் சொற்கள்’ நூலை அம்பிகாவிடம் வாங்கி வாசித்ததைக் கூறினார்.
யாருக்கும் எனது கவிதை நூல்களை அனுப்புவது இல்லை. உங்கள் நூலைப் படித்ததும், நீங்கள் என் கவிதைகளை வாசிக்க வேண்டுமெனத் தோன்றியது! என்றார்.
அவரது கவிதைகளை வாசித்தேன். அனுபவத்தின் சாரமும் தோற்றத்தில் இளமையும் கொண்ட கவிதைகளவை. அவரது மொழி சமகால இளம் கவிகளை சவாலுக்கு அழைக்கிறது.
ஜெயதேவன் போன்ற கவிஞர்கள் முதுமையடைவதில்லை. கனிகிறார்கள். நதிகளுக்கு, சமுத்திரங்களுக்கு, கதிருக்கு மூப்புண்டா என்ன?
ஆத்மாநாம், ஜான் கீட்ஸ் போன்றோர் இளம் வயதில் இறக்கவில்லை என்றால், அவர்களிடம் வாழ்வின் வேறு பரிமாணங்களை நாம் வாசித்திருக்க முடியும்.
ஆனாலும், இளமைக் குதூகலம், மனச்சோர்வு, லட்சியங்கள், மற்றும் கனவுகளின் கவிஞர்களாக அவர்கள் நினைவில் இருக்கிறார்கள்.
பதினெட்டாம் நூற்றாண்டில் தாமஸ் சாட்டர்டன் முதல், இருபதாம் நூற்றாண்டில் சில்வியா ப்ளாத் வரை நித்திய இளமையில் வாழ்வை முடித்துக் கொண்ட கவிஞர்களும் இருக்கிறார்கள்.
கவிஞர் டொனால்ட் ஹால் 90 வயதுவரை வாழ்ந்தார். மில்லினியத்தில்தான் (2018) மறைந்தார். எதிர் விதியைக் கொண்ட அரிய கவிஞர்களில் ஒருவர்.

அவரது கவிதைகள் முதுமையைக் கொண்டாடியவை. வயதாவது நம் சமூகத்தில் ஒரு தவறான செயலாகக் கருதப்படுகிறது.
ஜெயதேவன் போன்றோர், வயது பற்றிய மாயைகளோ, சங்கடங்களோ இல்லாமல் எழுதியவர்கள்.
ராபர்ட் பிரவ்னிங் கவிதைகள், வாழ்வின் கடைசிப் பகுதியே சிறந்ததென நம்பவைத்தன.
தாமஸ் ஹார்டி, அறுபதுக்குப் பிறகு கவிதை எழுதத் தொடங்கினார். பிறகு உரைநடை பக்கம் திரும்பவில்லை.
நிறைய சொல்லலாம். ராபர்ட் ஃப்ராஸ்ட், ஈட்ஸ் போன்றோர் எழுதி, எழுதி வயதைக் குறைத்தார்கள். அப்படி எழுதி வயதைக் குறைத்த பிறகு விடைபெற்ற அபூர்வ கவிஞர் ஜெயதேவன்.
அவரை யாரும் கல்லறையில் தேட வேண்டியதில்லை. தனது கவிதைகளில் நித்தியமாகி இருப்பவர்.
– நன்றி: கரிகாலன் முகநூல் பதிவு