மார்ச் 3 – உலக கானுயிர் தினம்
சமநிலை என்பது எங்கும் எப்போதும் அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. அதில் இம்மியளவு பிசகு நேர்ந்தால் கூடப் பாதிப்பு குறிப்பிட்ட அளவில் இருக்கும். உலகின் எங்கோ ஒரு மூலையில் சிறகை அசைக்கும் பட்டாம்பூச்சியினால் பின்னொரு காலத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் பிரளயம் வரக்கூடும். இந்த பட்டாம்பூச்சி கொள்கையை முழுமையாக நிறுவ முடியாது என்றபோதும், அதற்கான வாய்ப்புகளை மறுக்கும் தைரியம் எவருக்கும் இல்லை. அதுவே, இயற்கையின் மீதான இந்த உலகின் அபிப்ராயத்தைச் சொல்லிவிடும்.
நிலைமை இப்படியிருக்க, தொடர்ந்து பல ஆண்டுகளாகக் காடுகளையும் அதிலுள்ள தாவரங்களையும் விலங்குகளையும் இதர உயிரினங்களையும் அழித்தொழிக்கிற மனிதர்களின் செயல்பாடுகள் நின்றபாடில்லை. ‘நான் லாபம் சம்பாதிச்சா உனக்கென்ன’ என்ற மனப்பாங்கினை வெளிப்படுத்துபவர்களில் பலருக்கு, அதனால் தங்கள் காலுக்குக் கீழிருக்கும் மண் நழுவிச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை என்கிற அபாயம் உறைப்பதாக இல்லை.
குறிப்பாக, பணம் சம்பாதிக்கும் வேட்கையோடு காடுகளையும் கானுயிர்களையும் சூறையாடுகிற போக்கினால் இயற்கை பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. தற்போது உலகிலுள்ள மொத்த உயிரினங்களில் இந்தியாவிலுள்ள காடுகளில் 10 சதவிகிதம் விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நன்னீர் நிலைகள், கடலில் வாழ்கிற உயிரினங்களும் இவற்றில் அடக்கம்.
உலகின் மொத்த தாவர, விலங்கு வகைகளில் 7 – 8% இந்தியாவில் உள்ளன.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்த கானுயிர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 73 சதவிகிதம் வரை சரிந்திருக்கிறது. இவற்றில் நன்னீர்நிலைகளில் வாழ்கிற உயிரினங்களில் 85 சதவிகிதமும் நிலப்பரப்பில் வாழ்கிற உயிரினங்களில் 69 சதவிகிதமும் கடல்வாழ் உயிரினங்களில் 56 சதவிகிதமும் குறைந்திருக்கின்றன.
இன்னும் விளக்கமாகச் சொன்னால், இந்தியாவில் தற்போது கானுயிர்களில் 10,000 இனங்கள் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன; 5,766 இனங்கள் அழியும் நிலையில் இருக்கின்றன; சுமார் 3,947 இனங்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளன.
இதன் காரணமாக, சுற்றுச்சூழலில் உணவுச் சங்கிலி சிதைவுண்டு வருகிறது. அதனால் சூழலமைப்பின் நிலைத்தன்மை பாதிப்புக்குள்ளாகிறது. அதன் தொடர்ச்சியாக, மனிதர்களான நாம் பெரும் ஆபத்துக்கு ஆளாகியிருக்கிறோம். இதனைப் புரிந்துகொள்வதும், அதற்கேற்ப நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதும் அவசியம்.
வரும் ஐந்தாண்டுகளில் வானிலை மற்றும் இயற்கை சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதனால், கானுயிர்களைப் பாதுகாப்பாக வாழ வைப்பது என்பது நமக்கு நாமே ‘பெருவாழ்வு வாழ்க’ என்று சொல்வதற்குச் சமம்.
காப்பது நம் கடமை!
உலகளவில் நிகழும் பல்லுயிர் பெருங்கத்தில் 60 முதல் 70 சதவிகிதம் வரை பங்களிப்பைத் தருகிற 17 நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்குள்ள மேற்குத்தொடர்ச்சி மலைகள், இமயமலையின் கிழக்குப் பகுதி, இந்தியா – மியான்மர் எல்லைகள் ஆகியவற்றில் உலகின் 34 மிகச்சிறந்த பல்லுயிர்பெருக்கத் தலங்கள் உள்ளன.
இந்தியாவில் தனித்துவமான தாவர மற்றும் விலங்கு வகைகள் உள்ளன. அவற்றைக் காப்பதற்காக நீலகிரி, மன்னார் வளைகுடா, சுந்தரவனக்காடுகளில் உயிர்க்கோளகங்களை அரசு அமைத்துள்ளது. புலிகள், காண்டாமிருகங்களைக் காக்கும் திட்டங்கள் உட்படப் பலவற்றைச் செயல்படுத்தி வருகிறது.

அதீத வேட்டை, வாழ்விடங்கள் நாசம், உயர்தரச் சிறப்புகளைத் தக்க வைக்க முடியாமை, மாசுறுதல், ஆக்கிரமிப்பு செய்கிற சில உயிரினங்கள், மனிதர்கள் – வனவிலங்குகள் மோதல், கொடிய நோய்கள், குறைவான பிறப்பு விகிதம் போன்றவற்றால் கானுயிர்கள் அழிவைச் சந்தித்து வருகின்றன.
சில மனிதர்களின் அதீதப் பேராசையினால் பல வனவிலங்குகள் வேட்டையாடப்படுகின்றன; வர்த்தகரீதியில் அவற்றின் எச்சங்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இதனால் ஏற்படும் தொடர் பாதிப்புகள் பருவநிலை மாற்றம் வரை எதிரொலிக்கிறது.
இந்தியாவில் சுமார் 1,300 தாவர இனங்கள் அழிந்து வருகின்றன; சுமார் 20 இனங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. ஆசிய சிறுத்தை, காண்டாமிருகம், இளஞ்சிவப்பு தலை வாத்து, காட்டு மாடுகள், இமாலய காடை, நேரான தந்தங்களைக் கொண்ட இந்திய யானை ஆகியன அழிந்துபோன விலங்கினங்களில் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
ரசாயன மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளால் ஏற்படும் மாசுபாடு, அறுவடைக்காக வனவிலங்குகளின் வாழ்விடங்களைச் சிதைத்தல், புதிய உயிரினங்களை வளர்த்தல் உள்ளிட்ட காரணங்கள் இதன் பின்னிருக்கின்றன. அதனால், ஏற்கனவே இருந்த நிலையை மீண்டும் அடைய மிகப்பெரிய முயற்சிகளும் அதற்கான விழிப்புணர்வும் தேவையாக உள்ளது.
கானுயிர் தினம்
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3-ம் தேதியன்று ’உலக கானுயிர் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. ஐநாவில் தாய்லாந்து முன்வைத்த கோரிக்கையை ஏற்று, 2013-ம் ஆண்டு முதல் இது கடைப்பிடிக்கப்படுகிறது. 1973-ம் ஆண்டு கையொப்பமான ’அழியும் நிலையிலுள்ள வனத் தாவரங்கள் மற்றும் விலங்குகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தை’ நினைவு கூரும் வகையில் இது பின்பற்றப்படுகிறது.
’கானுயிர் பாதுகாப்பு நிதி: மக்கள் மற்றும் புவிக்கோளத்தைக் காப்பதற்கான முதலீடு’ என்பது இந்த ஆண்டுக்கான கானுயிர் தின கருப்பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது.

உணவு உற்பத்திக்காகக் காடுகளை அழிப்பது, வீடுகள் மற்றும் தங்குவிடுதிகளைக் கட்டுவதற்காக கானகங்களை ஆக்கிரமிப்பது, சுற்றுலா என்ற பெயரில் சூழலியல் செறிவுமிக்க இடங்களில் திரள்வது, சுற்றுலாத்தலங்களில் இருக்கும் உயிரினங்களுக்கு உணவிடுவதாகச் சொல்லி அவற்றின் அடிப்படை வாழ்வாதார இயல்பைத் தொலைக்கச் செய்வது, அத்தலங்களை மாசுபடுத்தி கானுயிர்களின் சமநிலையைப் பாழ்படுத்துவது என்று மனிதர்களில் சிலர் இருந்து வருகின்றனர். அவ்வாறு நாம் ஈடுபடாவிட்டாலும், அவை குறித்து எதிர்ப்பைத் தெரிவிப்பதும் அவர்கள் ஓட்டத்தோடு கலக்காதிருப்பதும் மிக முக்கியம்.
அந்த வகையில், மக்களான நமக்குள்ள கடமைகள் குறித்து நினைவூட்டுகிறது இந்த ‘உலக கானுயிர் தினம்’.
புத்திமதி சொல்ல வேண்டிய நிலையில் இங்கு எவரும் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் இயல்பை உணர்ந்து, மனதின் குரலுக்கு ஏற்ப நடந்துகொண்டாலே இந்த உலகில் சமநிலை பேணப்படும். இது நமக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். கானுயிர்களைக் காத்து நம்மையும் வருங்கால சந்ததியையும் காக்க அதையே திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது.
– மா பா