23-ம் புலிகேசி படத்தில் ஒரு காட்சியில் புலிகேசியாக நடித்த வடிவேலு, எதிரே இருக்கும் கரடியைக் குறி வைத்து வில்லில் அம்பை வைத்து எய்ய ஆரம்பிக்க ஒவ்வொரு முறையும் குறி தவறி வேறொங்கோ அம்புகள் பாயும்.
அந்தப் படத்தில் அம்புகள் குறி தவறுவது ஒரு காமெடிக் காட்சியாக அமைந்திருக்கும்.
தற்போது, ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் கைது செய்யப்பட்டபோது, உதயநிதி செய்தியாளரிடம் சொன்னார்.
“எல்லாம் காமெடியாகத்தான் இருக்கு”
காமெடி என்று உதயநிதி சொன்னாலும், முந்தைய தினம் தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் பேசிய தண்ணீர் பற்றிய பேச்சு அதைத் தொடர்ந்து கைதுக்குப் பிறகு தமிழகத்தில் பரவலாக நடத்திய போராட்டமும் உதயநிதி சொன்ன மாதிரி காமெடியாக இல்லை. சீரியஸாகத்தான் இருந்தன.
தஞ்சையில் உதயநிதி பேசிய பேச்சை நேரடியாக பல தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. திமுகவைச் சார்ந்த தொலைக்காட்சிகளும் இதில் அடக்கம்.
இதில், எந்தவிதமான ஆன்லைன் எடிட்டிங் இல்லாமல் நேரலையாகவே உதயநிதியின் பேச்சு ஒளிபரப்பானது என்பதை கவனிக்க வேண்டும். அதை எடுத்து ஏகப்பட்ட யூடியூப் சேனல்கள் வீட்டுக்கு வீடு கொண்டு சென்றன.
தமிழகத்திலுள்ள சில கட்சிகள் உதயநிதியின் பேச்சைக் கண்டிக்காமல், அவர் கைதானதை மட்டும் கண்டித்தனர்.
சில கட்சிகள் அவருடைய பேச்சையும் அவர் கைதானதையும் கண்டித்தன. ஓரிரு கட்சிகள் அவர் கைது செய்யப்பட்டதை ஆதரித்தன.
இதெல்லாம் ஒருபுறம் நடந்தாலும், சென்னை துவங்கி கன்னியாகுமரி வரை பல்வேறு இடங்களில் திமுகவினர் பரவலாகவே போராட்டத்தில் இறங்கினார்கள். சாலையில் அமர்ந்து போக்குவரத்திற்கு தற்காலிக தடையை ஏற்படுத்தினார்கள்.
நெல்லை போன்ற சில பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சென்ற பொதுமக்களைத் தாக்குவதும் நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல மணிநேர அளவுக்குக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பல பகுதிகளில் கடைகளை அடைக்கச் சொல்லி வியாபாரிகளை வற்புறுத்தியிருக்கிறார்கள்.
காவல்துறை விசாரணை முடிந்து உதயநிதி விடுவிக்கப்பட்டு வெளியே வரும்வரை திருச்சியிலிருந்து தஞ்சை வரைக்குமான சாலை போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டிருந்தது.
சில இடங்களில் விஜய்யின் உருவ பொம்மைகள் கொளுத்தப்பட்டன. தவெக கொடி கிழிக்கப்பட்டது.
இதையெல்லாம் சில தொலைக்காட்சி சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்ததன் விளைவாக தவெகவினரும் பதிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள்.
அவர்களுக்கும் திமுகவினருக்கும் இடையில் மோதல் நிகழ்வுகள் கூட நடந்தன. தவெகவினரும் உதயநிதியின் உருவ பொம்மையை பதிலுக்குக் கொளுத்தினார்கள்.
இரண்டு கட்சித் தொண்டர்களுமே நடத்திய இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்டது பொதுமக்கள் தான்.
தமிழக மக்களுக்கு இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தத்தான் இரண்டு கட்சிகளும் போராட்டத்தை நடத்தினவா?
கர்நாடகம் காவேரி நீரைத் திறந்துவிடக் கோரியும் மேகதாது அணைக்கட்டக் கூடாது என்பதை வற்புறுத்தியும் எழ வேண்டிய கோரிக்கைகள் இப்படி தனிப்பட்ட விதமான முழக்கங்களை முன்வைத்து கேவலமான வசவுகளை முன்வைத்து திசை மாறிப்போனதால், பாதிக்கப்பட்டது யார்?
இதே தமிழக மக்கள் தானே.
இதற்காகவா – இந்த பாதிப்புகளை ஏற்படுத்துவதற்காகவா? இந்த இரு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும் போராடினார்கள்? ஏன், போராட்ட இலக்கு இந்தத் தனிப்பட்ட எல்லைக்குள் சுருங்கிப் போனது?
இது ஒருபுறம் இருந்தாலும், காலை நேரத்தில் தான் கைது செய்யப்பட்டதை காமெடி என்று சொன்ன உதயநிதி மாலை வேளையில் விசாரணை முடிக்கப்பட்டு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “நான் அப்படி பேசவேயில்லை, அதுவும் மற்றவர்கள் சொன்ன மாதிரி டபுள் மீனிங்கில் நான் பேசவில்லை” என்றும், மீடியாக்கள் கட் அண்ட் பேஸ்ட் முறையில் தன்னுடைய பேச்சை திரித்து ஒளிபரப்பிவிட்டதாகவும் தனி விளக்கத்தைக் கொடுத்தார்.
ஆனால், அதற்குள் கர்நாடக தொலைக்காட்சி சேனல்களில் தமிழகத்தில் நடந்த இத்தகைய ஆபாச எதிர்வினைகளை முன்வைத்து தமிழக அரசியல் எவ்வளவு கீழ்த்தரமாக போய்க் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி விவாதித்து தமிழக போராட்ட நோக்கத்தையே கேள்விக்கு உட்படுத்தினார்கள்.
டெல்லி மீடியாக்கள் சலிக்கவில்லை. உதயநிதியின் பேச்சை முன்வைத்து ஆங்கில சேனலில் பெரும் விவாதமே நடந்தது.
தமிழகத்திலுள்ள பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் உதயநிதியின் இந்தப் பேச்சுதான் விவாதப்பொருளாகி பெரும் சூட்டைக் கிளப்பியது.
சில காரசாரமாக அந்தப் பேச்சை எதிர்க்க, மேலும் சிலர் மிகவும் காரசாரமாக உதயநிதியின் பேச்சை ஆதரித்துப் பேச, பல விதமான ஆபாசப் பேச்சுக்கள் பொது வெளிக்கு வந்தன.
திமுக தலைவரான கலைஞர் குறித்தும், மு.க.ஸ்டாலின் குறித்தும், ஸ்டாலின் குடும்பத்தினர் குறித்தும் கடுமையாக முன்வைத்த விமர்சனங்களும் ஆபாசம் என்கிற ரகத்திலேயே இருந்தன.
சமூக வலைத்தளங்களில் இன்னும் மோசம். திமுகவினர் விஜய் குறித்து படு கேவலமான பதிவுகளை பதிவுசெய்திருந்தார்கள்.
பதிலுக்கு தவெகவினர் கலைஞரின் குடும்பத்தைப் பற்றி நாஞ்சில் மனோகரன் எழுதிய கருவின் குற்றம் கவிதை துவங்கி சட்டமன்ற நாடாப் பேச்சு வரை பல்வேறு ஆபாசப் பேச்சாளர்களின் பிரபலமான வசவுகள் பற்றியும் குறிப்பிட்டு வெளியான அந்த சமூகவலைதளப் பதிவுகளின் நிறமே மஞ்சள் மயமாக மாறியிருந்தது.
இப்படி தமிழகத்தில், தஞ்சையில் காவேரி பிரச்சனையை முன்வைத்து நடந்த கூட்டத்தில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு, தமிழகம் துவங்கி கர்நாடகம், டெல்லி வரை பரவலாகவே சென்றடைந்திருக்கிறது.
கர்நாடகம் காவேரி நீரை தமிழத்திற்கு திறந்துவிடுவதற்கு சற்று தாமதப்படுத்திய நிலையில், பெருமழை கர்நாடகப் பகுதியில் பெய்து, கர்நாடக அணைப் பகுதிகளிலிருந்து இயற்கையாக தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டிருக்கிறது.
இயற்கையான மழை காட்டும் கருணை கூட ஏன் இங்கு இல்லை?
– லியோ