தவெக அரசின் முதல் பட்ஜெட் – ஒரு பார்வை!

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் அரசின் முதல் முழுமையான (2026-27 நிதியாண்டு) பட்ஜெட், புதன்கிழமை (ஆகஸ்ட் 5) மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் சார்பில், நிதியமைச்சர் மரிய வில்சன், காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.

இந்த பட்ஜெட் தமிழக வெற்றிக் கழக அரசின் முக்கிய மைல்கல்லாகும்.

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, கடந்த பிப்ரவரி மாதம் 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது.

அப்போது நிதியமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, மாநிலத்தின் வருவாய் வருவாய் ரூ.3.44 லட்சம் கோடி என்றும், நிதிப் பற்றாக்குறை ரூ.1.22 லட்சம் கோடி என்றும் கணித்திருந்தார்.

ஆனால், த.வெ.க அரசுப் பொறுப்பேற்ற பிறகு, மாநிலத்தின் நிதிநிலை குறித்து வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், மாநிலத்தின் நிலுவைக் கடன் ரூ.13.18 லட்சம் கோடியாக இருப்பதாகவும், முந்தைய ஆட்சியிலிருந்து கடுமையான நிதிச் சுமை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது.

முதல் பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து கடந்த ஒரு மாதமாக, முதல்வர் விஜய் ஒவ்வொரு துறையுடனும் விரிவான ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார்.

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு, சென்னையில் உள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோயிலில் அமைச்சர் என்.ஆனந்த் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து சட்டசபையில் பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் மரிய வில்சன், கடந்த 3 மாதங்களில் த.வெ.க அரசு மக்களுக்காக ஏராளமான திட்டங்களை கொடுத்து சாதனை படைத்துள்ளது.

இந்த தொலைநோக்கு பார்வையை முன்னெடுக்கும் வகையில் வெற்றித் தமிழகம் திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது என மரிய வில்சன் கூறியுள்ளார்.

2036-க்குள் 1.5 டிரில்லியன் பொருளாதாரத்தை அமைவது இலக்கு என்று கூறினார்.

கடந்த தி.மு.க ஆட்சியில் பட்ஜெட் தாக்கலில் ரூபாய் குறியீடை தவிர்த்து ‘ரூ’ என்ற தமிழ் எழுத்தை தி.மு.க பயன்படுத்தியது.

இந்நிலையில், இந்த ஆண்டு த.வெ.க பட்ஜெட்டிலும் அதே நடைமுறை தொடரப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட்டில் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறைக்கு ரூ. 17,290 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் ‘வெற்றி 150’ திட்டம் அறிமுகம் செய்யப்படும். 125 நாட்கள் வேலை முடித்த குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்களுக்கு வேலை கொடுக்கப்படும்.

மொத்தமாக 150 நாட்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும். இதற்காக ஆண்டு தோறும் ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

புதிய மாநில வீட்டு வசதித் திட்டமான வெற்றி வீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. வீட்டு அலகுத் தொகை ரூ. 3.10 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

ரூ. 3,500 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவுத் திறனை ஊக்குவிக்கும் விதமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்திற்கு ரூ. 163 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திறன் பயிற்சி மற்றும் சுய தொழிலுக்கு மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும். ரூ. 50,000 வரை சுயதொழில் வங்கி கடனுக்கு மானியம் வழங்கப்படும்.

5 மாவட்டங்களில் அரண் தங்கும் இடம் அமைக்கப்படும். 15 மாவட்டங்களில் குறுகிய கால தங்கும் இட வசதிகள் ஏற்படுத்தப்படும்.

கருவுற்ற பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும்.

மகப்பேறு நாள் நெருங்கும் வேளையில் தங்கியிருந்து பயன் பெறலாம். கட்டணமில்லாமல் உணவு மற்றும் மருத்துவ உதவிகள் தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகளை இதன் மூலம் பெறலாம்.

பெண்கள் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப்புடவை வழங்கும் திட்டத்திற்கு ரூ. 812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

11-ஆம் வகுப்பு மாணவர்கள் 5.32 லட்சம் பேருக்கு ஹெல்மெட், வாட்டர்பாட்டில் வசதியுடன் ரூ. 277 கோடி மதிப்பில் சைக்கிள் வழங்குவது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறை – ரூ. 8,393 கோடி

சமூக நீதித்துறை – ரூ. 3,937 கோடி

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை – ரூ. 1,051 கோடி ஒதுக்கீடு

சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை – ரூ.17,150 கோடி ஒதுக்கீடு

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை – ரூ.2,022 கோடி ஒதுக்கீடு

பள்ளி பாடத்திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, போதைப்பொருள் மற்றும் அதன் தவறான பயன்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த 10581 என்ற எண் பள்ளி வளாகத்தில் காட்சிப்படுத்தப்படும்.

இதை செயல்படுத்த ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளிகளில் தூய்மையான மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வது மாணவர்களின் நலனுக்கு அவசியமானதாகும்.

சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தூய்மைப் பணிகள், கழிவறை பராமரிப்பு, பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் காமராஜர் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 2000 கோடி செலவில் வெற்றி மடிக்கணிணி திட்டம் அமல்படுத்தப்படும்.

உயர்கல்வித்துறைக்கு ரூ. 8,393 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

You might also like