அமைதியை இழந்த காலத்தில் மனிதர்கள் வாழ்கிறார்கள். பரஸ்பர நம்பிக்கையை தொலைத்த ஒரு காலமோ இது? சந்தேகம் தோன்றுகிறது.
இதன் பொருட்டு உள்ளுக்குள் வெறுமையை ஒவ்வொருவரும் உணர்கிறார்கள். வீட்டை நிறைப்பது எளிது. டிவி, கட்டில், ஃபிரிஜ், புத்தகங்கள், ஆடைகள், அலங்காரப் பொருட்கள் போதும். ஆனால் அகம் எப்படி நிறையும்? அங்கு அன்பின் பற்றாக்குறை இருக்கிறது, நம்பிக்கையின் வெற்றிடம் இருக்கிறது.
ஒவ்வொருவருள்ளும் தொடர்ச்சியான ஆசையும் எதிர்பார்ப்பும் இருக்கிறது. உள்ளுக்குள், இன்னும் சிறப்பாக ஏதாவது நடக்கும் என எதிர்பார்க்கிறார்கள். அதன் பொருட்டு அடிக்கடி மின்னஞ்சலை, வாட்சப்பைத் திறந்து பார்க்கிறார்கள்.

நேற்று இதனிடமிருந்து விலகிய பலரைச் சந்திக்க முடிந்தது.
அஷோக் சாம்ராட்டின் மனிதர்கள் குறும்படத் திரையிடல் நிகழ்வு சிறப்பாக நிகழ்ந்தேறியது. பத்திரிகை, காட்சி ஊடகத்துறை, திரைப்படம் சார்ந்து நிறைய நண்பர்கள் வந்திருந்தார்கள்.
பலரும் வளர்கிற இளம் கலைஞர்கள். இன்னும் வெற்றியை சுவைக்காதவர்கள். அவர்கள் தேடலும் நம்பிக்கையும் உடையவர்களாகத் திகழ்ந்தார்கள்.
உடன் இயங்குபவர்கள் மீது அவர்கள் கொண்டுள்ள அன்பு, புரிதல், நம்பிக்கை முக்கியமானது.
அஷோக் சாம்ராட் எதைச் சம்பாதித்தாரோ? இல்லையோ? இப்படி நிறைய நல்ல மனங்களைப் பெற்றிருக்கிறார்.
புரிதல் என்பது அன்புக்கான மற்றொரு சொல். மற்றொருவரை நேசிப்பது என்பது அவரது துன்பத்தை முழுமையாக புரிந்துகொள்வதாகும்.
துன்பம் என்றால் லௌகீக அடிப்படையில் அல்ல. இதை ஆன்மீகத் தொனியில் குறிப்பிடுகிறேன்.
ஒரு கலைஞராக முகிழ்த்தெழும் அனுபவங்கள் தோற்றத்தில் துன்பமாகப் படுகிறது. பௌத்தம் வாழ்வின் சாராம்சமாக துன்பத்தைக் கருகிறது. இதைக் கடக்க நம்பிக்கையும் நேயமும் முக்கியமானது.

ஒரு குவளை தண்ணீரில் கைப்பிடி அளவு உப்பைப் போடுங்கள். அந்தத் தண்ணீர் குடிக்க முடியாததாகிவிடும். அதே கைப்பிடி உப்பை ஆற்றில் போடுங்கள். ஒன்றும் ஆகாது.
நம் மனம் டம்ளராக இருந்தால் கெட்ட எண்ணங்கள் துளி கலந்தாலும் விகாரமாகிவிடும். நம் இதயம் நதிபோல பரந்து, விரியவேண்டும்.
நம் இதயம் சிறியதாக இருக்கும்போது நம் புரிதலும், இரக்கமும் சிறியதாகவே இருக்கும். நம் இதயம் விரிவடையும்போது மற்றவர்களை ஏற்றுக்கொள்கிற பக்குவத்தைப் பெறுகிறோம்.
‘மனிதர்கள்’ என்கிற 18 நிமிடக் குறும்படம் வழி மனதை விரிவடைய வைக்கிற ஒரு ஆன்ம அனுபத்தை ஏற்படுத்தினார் அஷோக். அது உருவாக்கிய திறப்புகளில் இருந்து அன்பு என்றால் என்ன? ஏன் நம்பிக்கை தேவை? மனிதர்கள் யார்? என உரையாடினோம்.

வசந்தபாலன், பிருந்தாசாரதி, தாமரை பாரதி போன்றோர் பொறுப்புணர்ந்து ஒரு இளம் கலைஞரை கொண்டாடினார்கள்.
இந்நிகழ்வு நிறைவடைய வேடியப்பன், லார்க் பாஸ்கரன், அம்பிகா குமரன் போன்றோரின் உதவி முக்கியமானது.
இந்தக் காலம் நாம் நினைப்பதுபோல் அவ்வளவு மோசமானதில்லை. நாம் சென்றடைய வேண்டிய தூரம் 10,000 கி.மீ இருக்கிறது! என நினைக்கிறோம். அது அப்படியில்லை.
உங்கள் புத்தருக்கு செவி கொடுங்கள். அவர் about-turn சொல்கிறார். கொஞ்சம் திரும்பினால் போதும். இதுவரை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தது எதிர்திசை. இப்போது பாருங்கள். நீங்கள் சென்றடைய வேண்டிய இடம் வெறும் 10 மீ தூரம்தான்.
நன்றி: முகநூல் பதிவு