நூல் அறிமுகம் : பார்வை வழிப் பயணம்!
பார்வை வழிப்பயணம் என்ற புத்தகம் மொத்தம் 53 தலைப்புகளை உள்ளடக்கியுள்ளது. இப்புத்தகத்தை படித்து முடித்த உடனே பல கேள்விகள் இந்த சமூகத்தை நோக்கி எழச்செய்தது.
ஒவ்வொரு தலைப்பிலும் இந்த சமூகத்தில் உள்ள நிர்பந்தங்கள், நியாயங்கள், நீதி, சமத்துவம் போன்றவற்றில் உள்ள முரண்பாடுகளை ஒவ்வொரு தலைப்பிலும் விளக்கியுள்ளார்.
இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களுக்குமே அதற்கென்று ஒரு வாழ்வு, அதற்கென்று தனிப்பட்ட விருப்பம் கொண்டு வாழும் வாழ்வை இந்த சமூகம் அவ்வாறு வாழ விடாமல் சில கட்டமைப்புகளுக்குள் அவற்றை அடக்கி பொறுப்புகளை அதன் தலையில் சுமத்தி மற்றவருக்காகவும் சமூக நிர்பந்தங்களைப் பின்பற்றியும் வாழ வேண்டும் என்று உருவாக்கி வைத்திருக்கிறது.
இம்மாதிரியான நிர்பந்தங்களை பின்பற்றாமல் தனது விருப்பங்களுக்கு ஏற்ப ஒருவர் வாழ்வை வாழ வேண்டும் என்பதை இப்புத்தகத்தில் முதன்மையாக வைத்து எழுதி இருக்கிறார்.
ஜாதி, மதம், பாலினப் பாகுபாடு இன்றி தனி மனிதன் அவன் விருப்பத்திற்கு ஏற்ப வாழ வேண்டும் என்பதை தெளிவாக விளக்கியுள்ளார்.
சமூகம் என்ற அமைப்பு தனி மனிதர்களின் கூட்டமே. ஆனால் இங்கு உயிர் இல்லாத சமூகத்திற்கு உயிர் கொடுக்க தன் வாழ்வையே தொலைத்து வாழ்கிறார்கள் தனிமனிதர்கள்.
மாற்றங்கள் வேண்டும், காலம் காலமாய் செய்யப்பட்டிருக்கும் மூளைச்சலவையிலிருந்து வெளிவர ஒவ்வொன்றையும் ஆராய்ந்து தெளிந்து தனக்கான பாதையைத் தேடிப் பயணப்பட வேண்டும் என்பதே புத்தகத்தின் மைய கருத்து.
இந்த புத்தகம் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தது. இந்தப் புத்தகத்தில் உள்ள சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவே முடியாத சமூகத்தில் (என்னைச் சுற்றியுள்ளவர்களில் சிலர்) தான் நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
ஆகையால் இந்த புத்தகம் படிக்கும் பொழுது எனக்கு வியப்பாகவே இருந்தது. இப்புத்தகம் படித்தால் நிச்சயமாக அனைவருக்குள்ளும் சில மாற்றங்கள் நிகழும், சமூகத்திலும் மாற்றம் ஏற்படும். கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
– கீதாஸ்ரீ
நூல் : பார்வை வழிப்பயணம்!
ஆசிரியர் : லதா
முயற்கூடு பதிப்பகம்
பக்கங்கள் : 144
விலை : ரூ. 150/-