எளிய மக்களின் உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டும் நூல்!

எழுத்தாளர் கா.ரபீக் ராஜா 2022-ம் ஆண்டில் எழுதி, சிறுகதைப் போட்டிகள் சிலவற்றில் வெற்றி பெற்ற கதைகளுடன், மொத்தம் பத்து சிறுகதைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது.

எளிய மக்களின் கலவையான உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டும் இச்சிறுகதைகள், நாம் அன்றாடம் காணும் மக்களையும் சேர்த்தே எழுதப்பட்டது. நூலின் தலைப்பும், அதற்கு ஆசிரியர் கொடுத்திருக்கும் விளக்கமும் அருமை.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் கா.ரபீக் ராஜா, தொடர்ந்து சொல்வனம், வாசகசாலை, கீற்று, திண்ணை, தி இந்து போன்ற பல்வேறு மின்னிதழ்களில் கட்டுரைகளும், சிறுகதைகளும் எழுதி இருக்கிறார்.

காரைக்குடியில் நண்பர்களுடன் இணைந்து, ‘சம்பை ஊற்று’ எனும் வாசகர் வட்டம் ஒன்றை நடத்தி வருகிறார்.

அரசாங்க வேலையை செய்து முடிப்பதற்காக, அதிகாரிகளிடம் அனுசரித்து நடக்க வேண்டும் எனும் ஒரு எதார்த்த நிலையில் இருந்து, அந்த அதிகாரியின் பார்வையில், சிறப்பாக வெளிப்பட்டிருக்கும் கதை ‘காரியம்’.

தன்னிலையில் இருந்து சொல்லப்படும் இக்கதையின் புழங்குவெளி மட்டுமின்றி, கதையைச் சொன்ன விதமும், வித்தியாசமானதாக இருந்தது.

முதல் கதையில் இருந்தே, இவரது எழுத்தின் மீது, ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கி விடுகிறார்.

தெருவில் வாழும் காதலின், ஒரு நீண்ட மழை நாள் இரவை, அதன் துன்பத்தை, சகிப்புத் தன்மையை, பயத்தை, ஏக்கத்தை, இயலாமையை, இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாய் காதலையே சொல்லிச் செல்கிறது #கண்ட_கனவு எனும் கதை.

ஒரு கட்டத்தில், அவர்களின் வாழ்வில் ஒரு எதார்த்தமான நாளை, நாமே அருகிருந்து பார்த்த உணர்வு ஏற்பட்டு விட்டது.

பெற்றோர் இல்லாத சிறுவயதில், தன்னை ஆதரிக்கின்ற ஒரு வேலை, தன் இறுதிக்காலம் வரை மனம் ஒப்பாத வேலை, ஆனாலும் ஒட்டிக்கொண்டிருந்த வேலை என ஒரு சிறிய வட்டத்தில் அடைப்பட்ட மனிதனின் நிலை, ஒரு வகையில், நம்முடைய பணிச் சூழலையும் சற்று பொருத்திப் பார்க்க வைக்கிறது, #நர்மதா_லாட்ஜ் கதை. சற்று நீளம் குறைத்திருக்கலாம்.

ஒரு நடுத்தர வர்க்கத்தின் சொந்த வீட்டுக் கனவை, அத்தனை எள்ளலுடனும், நறுக் தொடர்களுடனும், வெகு இலகுவாக படைத்திருக்கிறார், #ஊருக்கு_அப்பால் சிறுகதையை.

சொந்த வீடு என்பது, குடும்பத் தலைவர், மனைவி, தாய், குழந்தைகள் என ஒவ்வொருவரின் பார்வையில் வெவ்வேறு வகையில் வெளிப்படுபதை இயல்பாக எழுதியிருக்கிறார்.

செல்லும் வழியில் காணும் ஒவ்வொரு காட்சியையும் முன்னும் பின்னுமாக கணக்குப் போட்டுக் கொண்டே செல்லும் நாயகன், தன் சொற்கள் வழியாக ஈர்க்கிறான். இத்தொகுப்பில் எனக்குப் பிடித்த கதை இது.!!

மொத்தத்தில், எளிய மக்களின் நாட்களை, வித்தியாசமான கோணத்தில் பார்க்கச் செய்வது மட்டுமின்றி, இனி இவ்வாறான மக்களை நேரில் காணும் போதும், இக்கதைகள் மனதில் மின்னலென வெட்டிச் செல்லுமளவில் இயல்பாக உள்ளன.

ஆசிரியர் எடுத்துக்கொண்ட களமும் எழுத்தும் பாராட்டுக்குரியவை. நூல் மற்றும் அட்டை வடிவமைப்பு நன்றாக உள்ளது.

ரபீக் ராஜாவின் இக்கதைகள் வழியே, தான் கண்ட காட்சிகளைக் கூர்நோக்கி எழுதியிருப்பதன் மூலம், நம்மையும் அந்த இடத்திற்கே கூட்டிச் சென்று மௌன சாட்சியாக நிறுத்துகிறார்.

இவரது கதை மாந்தர்கள் தாங்கள் பேச நினைப்பவற்றை, தனிமையில் தங்கள் மனதிற்குள்ளே பேசிக்கொண்டு இருப்பதிலேயே திருப்தி அடைந்து விடுகிறார்கள்.

எந்த ஒரு கடினமான சூழலிலும், எங்கோ ஒரு மூலையில் ஒரு சிறு எள்ளலும், நகைச்சுவையும் ஒளிந்து கொண்டு இருக்கின்றது, இவரது எழுத்தில்.

இவரது எழுத்தில் இன்னும் பல நல்ல படைப்புகள் வரும், என்ற நம்பிக்கையுடன்…!

நன்றி: சங்கர்

*******

நூல்: ஐஸ் பிரியாணி
வகைமை: சிறுகதைகள்
ஆசிரியர்: கா.ரபீக் ராஜா
வெளியீடு: வாசகசாலை
விலை: ரூ.170/-

நூலைப் பெற: 9790443979

You might also like