வெப்பநிலை மேலும் 4 டிகிரி வரை அதிகரிக்கும்!

  • சென்னை வானிலை மையம் அறிவிப்பு

சென்னையில் நேற்றும் வெயில் அதிகளவில் இருந்த நிலையில், பிற்பகல் முதல் மாலை வரை நகரின் ஒரு சில இடங்களிலும் புறநகர் பகுதிகளிலும் ஆங்காங்கே லேசான மழை பெய்தது.

இதற்கிடையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து விளக்கமளித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், “மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக 6-ம் தேதி (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரையிலும், ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

வங்கக்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் செல்லவேண்டாம்” எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 13 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி அடித்தது. அதிகபட்சமாக சென்னையில் 105.44 டிகிரி வெயில் வாட்டியதால் மக்கள் அவதியடைந்தனர்.

You might also like