நான் ஏன் எழுதுகிறேன்? – இந்திரன்!

எனக்கு இப்போது வயது 74-க்கு மேல். தனியே அமர்ந்து யோசித்துப் பார்க்கிறேன். வாழ்க்கையில் எரியும் பிரச்சினைகளைக்கூட ஆறப்போட்டுவிட்டு, எழுதுவதில் என் நேரத்தை நான் செலவிட்டு இருக்கிறேன்.

இது ஏன்? எழுதி பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டேனா? இல்லை. எழுத்தும் கலையும் சோறு போடாது என்று சிறுவயதிலேயே தெரியவந்துவிட்டது. அதனால் பணத்துக்காக நான் எழுத வரவில்லை. இப்படி நான் சொல்வதால் பணத்துக்காக எழுதுவது எல்லாம் குப்பை என்று நினைக்கிறவனா நான் என்றால் அதுவும் இல்லை.

தாஸ்தாவெஸ்கி தனது அற்புதமான “சூதாடி” குறுநாவலை பணத்துக்காகத்தான் எழுதினார். ரௌலட் சூதாட்டத்தில் பட்ட கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் தாஸ்தாவ்ஸ்கி பணத்துக்காக மிகவும் சிரமப்பட்டார்.

1866 நவம்பர் மாதம் ஒன்றாம் தேதிக்குள் இந்த நாவலை எழுதிக் கொடுப்பதாகவும், அப்படி செய்யத் தவறினால் வரப்போகும் 9 ஆண்டுகளில்தான் எழுதும் எல்லா நாவல்களையும் வெளியிடும் உரிமையை இலவசமாகக் கொடுக்கிறேன் என்றும் சொல்லும் வில்லங்கமான ஒரு உடன்படிக்கையில் ஸ்டெலொவ்ஸ்கி என்பவரிடம் கையெழுத்திட்டு விடுகிறார் தாஸ்தாவ்ஸ்கி..

இதனால் ”சூதாடி” எனும் மகத்தான நாவலை தன் மனைவியும் சுருக்கெழுத்தாளருமான அன்னா ஸ்னிட்கினாவிடம் அவர் வாய்மொழியாகச் சொல்லச் சொல்ல, மனைவி சுருக்கெழுத்தில் பதிய குறுகிய காலத்துக்குள் எழுதிக் கொடுக்கிறார். முழுக்க முழுக்க பணத்துக்காக எழுதப்பட்டதுதான். “சூதாடி” நாவல். ஆனால் அது உன்னதமான ஒரு இலக்கியப் படைப்பு.

இப்போது ஞாபகம் வருகிறது. ஒருமுறை சி.சு.செல்லப்பா சென்னையில் பல முக்கிய எழுத்தாளர்களைக் கூப்பிட்டு, ”எதற்காக எழுதுகிறேன்?” என்ற தலைப்பில் பேச வைத்தார். அவற்றைத் தொகுத்து ஒரு புத்தகம் வெளியிட்டார்.

அதில் தி.ஜானகிராமன் “எழுத்து என்பது அடுத்தவன் பெண்டாட்டியை அனுபவிப்பது மாதிரி சுவாரசியமானது. அதனால்தான் நான் எழுதுகிறேன்” என்று சொல்லியிருந்தார். தமிழில் நிறைய வாசிக்க வாசிக்க ஒரு கேள்விதொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கின்றது ஏன் எழுதுகிறார்கள்?

சிலர் பணத்துக்காக, சிலர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக, சிலர் இலக்கியச் சந்நிதானங்களாக மாறுவதற்காக, சிலர் தன் சாதி அல்லது மத பெருமை பேசுவதற்காக, சிலர் வெற்றுப் பிரபல்யத்துக்காக, சிலர் தங்களது மனக்கஷ்டத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்காக, ஆண்களாக இருந்தால் பெண்களைக் கவர்வதற்காக, பெண்களாக இருந்தால் ஆண்களைக் கவர்வதற்காக, சிலர் தங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக, சிலர் அழுகிப் போய்க் கொண்டிருக்கும் சமூகத்தைக் காப்பாற்றுவதற்காக என்று பல்வேறுவிதமான காரணங்கள்.

ஆனால், இந்த காரணங்கள் அனைத்தையும் கடந்து அடி ஆழத்தில் எழுதுவதற்காக என்னிடம் ஒரு காரணம் இருக்கிறது. அது இதுதான், என்னால் எழுதாமல் இருக்கமுடியாது. அதனால் நான் எழுதுகிறேன்.

You might also like