சிறுபான்மை மக்களுக்கு எம்.ஜி.ஆர். செய்த உதவி!

- காதர் மொய்தீன்

தமிழ்நாடு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரான காதர் மொய்தீன் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அதன் செய்தியாளரான சமஸ்-க்கு அளித்த நீண்ட பேட்டியிலிருந்து ஒரு பகுதி…

***

“எம்.ஜி.ஆர் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது தென் தமிழகம் மீனாட்சிபுரத்தில் ஏராளமானவர்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாக பரபரப்பாக செய்திகள் வெளிவந்த நேரம்.

பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் பலர் மீனாட்சிபுரத்திற்கு சென்று பார்வையிட்டார்கள்.

அதையடுத்து அந்தப் பகுதியிலுள்ள சில ஜமாத் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

அதுபற்றி விசாரணை நடத்த அங்கு சென்ற குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன்.

அதுபற்றிய குறிப்புகள் என் கைவசம் இருந்தன.

நேராக சென்னைக்கு வந்து முதலமைச்சராக இருந்த திரு. எம்.ஜி.ஆர். அவர்களை சந்திப்பதற்கு நேரம் கேட்டிருந்தோம்.

மறுநாள் காலை ராமாவரம் தோட்டத்திற்கு வருமாறு எங்களுக்கு அழைப்பு வந்தது. சரியான நேரத்திற்கு நாங்கள் அங்கே போய்விட்டோம்.

போனதுமே, சில அதிகாரிகள் எங்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று சாப்பிடச் சொன்னார்கள்.

பக்கத்திலிருந்த நீண்ட ஹாலில் தொண்டர்கள் பலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் சாப்பிட்டுவிட்டதால், எங்களுக்கு காஃபி கொடுத்து உபசரித்தார்கள்.

அடுத்த அறைக்கு எங்களை அழைத்துக் கொண்டு போனபோது, அங்கிருந்த முதல்வரான எம்.ஜி.ஆர் எங்களை வரவேற்றார்.

அப்போதுதான் நான் முதன்முதலாக எம்.ஜி.ஆர் அவர்களைப் பார்க்கிறேன்.

மிக இயல்பாக “பாய்” என்று அழைத்தபடி பல விஷயங்களைப் பற்றி கேஷுவலாகப் பேசிக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.

அரைமணி நேரம் ஆகிவிட்டது.

நாங்கள் வந்த நோக்கத்தை சுருக்கமாகச் சொன்னோம். மீனாட்சிபுரத்தில் நடந்த சில கைதுகள் பற்றிச் சொல்லிவிட்டு, கைதானவர்களின் பட்டியல்கள் அடங்கிய குறிப்புகளை எம்.ஜி.ஆரிடம் கொடுத்தேன்.

அந்தக் குறிப்புகளை வாங்கிப் பார்த்த எம்.ஜி.ஆர், சிறிதும் தயங்கவில்லை.

உடனே காவல்துறை உயரதிகாரி ஒருவருக்கு ஃபோன் செய்து, மீனாட்சிபுரத்தில் கைது செய்யப்பட்டவர்களைப் பற்றி குறிப்பிட்டு அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 அதன்படியே அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். 

சிறுபான்மை மக்களிடம் எப்போதுமே நேசத்துடன்தான் இருந்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.”

You might also like