நினைவில் நிற்கும் வரிகள்:
***
தஞ்சமென்று வந்தவரைத்
தாய்போல் ஆதரித்து
வஞ்சகரின் செயல்களுக்கு
வாள்முனையில் தீர்ப்பளித்து
அஞ்சாத நெஞ்சில்
அன்புக்கு இடங்கொடுத்து
அறங்காக்கும் மக்களிடம்
பார்த்த விந்தையைச் சொல்லட்டுமா?
அதிசயம் பார்த்தேன் மண்ணிலே –
அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே –
(அதிசயம்)
மூணுபக்கமும் கடல் தாலாட்டுது –
தன்மானமுள்ள மக்களைப் பாராட்டுது
வானுயரும் மலையில் அருவி பெருகியே
வந்துவந்து நிலத்தை நீராட்டுது –
பல வளம்பெருகி மறவர் பேர்நாட்டுது
(அதிசயம்)
மலையைச் செதுக்கிவச்ச சிலையிருக்கு –
அதில் மனங்கவரும் அழகுக் கலையிருக்கு,
மானிருக்கு வண்ண மயிலிருக்குச்
செந்தேனிருக்கு வீரச் செயலிருக்கு
(அதிசயம்)
அங்கே – சந்தன மரக்கிளையும்
தமிழ்க் கடலும் –
தழுவி சந்தமிசைத்துத்
தென்றல் தவழ்ந்து வரும்
செந்தாழை மலர்தொட்டு
மணம்சுமந்து வரும்
இங்கே – தங்கிட நிழலுமில்லை
பொங்கிடக் கடலுமில்லை –
சற்று நேரங்கூட
வெயில் மறைவதில்லை
நம்மை தழுவிடத்
தென்றலெதும் வருவதில்லை.
(அதிசயம்)
– 1963-ம் ஆண்டு வெளிவந்த ‘கலையரசி‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
இசை – கே.வி.மகாதேவன். குரல் – சீர்காழி கோவிந்தராஜன்.