மூங்கில் பொருள் தயாரிப்பு: மாதம் ரூ.2 லட்சம் வருமானம்!

ஒடிசாவைச் சேர்ந்த சாந்தினி கென்டல்வால், கடந்த ஆண்டு ஈகோ லூப் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கினார்.

பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத மூங்கில், சபாய் புல் மற்றும் பனை ஓலைகளால் உருவான பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார்.

எப்போதுமே பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்பதில் கவனம் கொண்டவராக இருந்தார் சாந்தினி.

“நான் ஹாஸ்டலில் தங்கி கல்லூரியில் படித்தபோது, இரவு மற்றும் மதிய சாப்பாடு பிளாஸ்டிக் பேக்கில் வரும். இது எப்போதுமே எனக்கு கவலையளிக்கும். ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூங்கியெறிந்து விடுவோம். அதையெல்லாம் சேகரித்து சுத்தம் செய்வேன்.

இரண்டே ஆண்டுகளில் ஒரு டிராலி முழுவதும் பிளாஸ்டிக் பைகளைச் சேகரித்து விட்டேன். அதை கொண்டுபோய் குப்பைகளில் கொட்டாமல், வீட்டுக்குப் பயன்படுத்தும் பொருட்களாக மாற்ற விரும்பினேன்” என்கிறார் சாந்தினி.

பின்னர், அவருடைய கனவை அடைந்தார். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பில்லாத இயற்கை தயாரிப்புகளுக்கான ஈகோ லூப் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கினார்.

ஈகோ என்பது சுற்றுச்சூழலையும், லூப் என்பது எங்கே ஒரு வடிவம் தொடங்குகிறது அது முடியும் இடத்தைக் குறிக்கிறது.

கடந்த 2021 செப்டம்பரில் சாந்தினியின் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கப்பட்டது. தங்களுடைய தயாரிப்புகளை இந்தியா முழுவதும் விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

மாதந்தோறும் அவர் மூங்கில் பொருட்களின் மூலம் 2 லட்சம் வரை சம்பாதிக்கிறார்.

புவனேஸ்வரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிலையத்தில் படித்த சாந்தினி, கலை மற்றும் கைவினைக் கலையில் ஆர்வம் உடையவராக இருந்தார்.

தன் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு அவரது தாய் உறுதுணையாக இருந்துவந்தார்.

பத்து வயதில் அவரை  பாரிபடா நகரில் இருந்த கலைப்பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். ஷ்யாம் பிரசாத் பட்நாயக் என்பவரில் கைவினைக் கலையைப் பயின்றார்.

அவர்தான் சாந்தினிக்கு கலைகளின் மீதான காதலை ஏற்படுத்தியவர். அவருடைய வழிகாட்டுதலில் நிப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார்.

படிக்கும்போது புகழ்பெற்ற பல உள்ளூர் கைவினைக் கலைஞர்களுடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்தக் கலைஞர்கள் இயற்கையான பொருட்களில் இருந்து பல கலைப்பொருட்களை உருவாக்கிக் காட்டினார்கள்.

அப்போதுதான் மூங்கில், சபாய் புல், பனை ஓலைகள் ஆகியவற்றில் கைவினைப் பொருட்களைச் செய்யமுடியும் என்பதை உணர்ந்து கொண்டார்.

சாந்தினி தொடங்கியுள்ள ஈகோலூப் நிறுவனம், பல கலைப்பொருட்களை உருவாக்குகிறது.

கூடைகள், ட்ரே மற்றும் பெட்டிகள் என இருபது வகையான தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறார்கள்.

பல பெண்களுக்கும் பயிற்சி வழங்கியுள்ள சாந்தினி, அரசு ஆதரவுடன் ஒவ்வொரு பெண்ணும் சுயதொழில் தொடங்க உதவியாக இருக்கிறார்.

அப்படி சமீபத்தில் 15 பெண்கள் தொழில் தொடங்கியுள்ளனர். வெறும் 20 ஆயிரம் ரூபாயுடன் தொடங்கிய அவரது ஸ்டார்ட் அப், இன்று மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கிறது.

பா.மகிழ்மதி

02.02.2022  4 : 30 P.M

You might also like