பல்வேறு துறைகளில் பெண்கள் கோலோச்சி வரும் நிலையில், வணிகத்துறையில் மகளிர் கண்டு வரும் வளர்ச்சி, நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
போட்டிகள் நிறைந்த இத்துறையில், தன்னுடைய திறமையாலும் அயராத உழைப்பாலும் பல்லாயிரம் கோடி ரூபாய் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் தான் பிராமல் எண்டர்பிரைசஸ் லிமிடெட் இன் துணைத் தலைவர் டாக்டர் சுவாதி.
பிராமல்:
சேவை மனப்பான்மையோடு சிறிய அளவில் போலியோ தடுப்பு மருந்து தயாரிக்க ஆரம்பித்த இவர், இன்று இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார்.
பல வருடங்களுக்கு முன்பு, மருத்துவ மாணவியாக மும்பையில் காட்டன் மில்கள் நிறைந்த பகுதியான பரேல் இல், பயணம் செய்து கொண்டிருந்தபோது, போலியோவால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தை ஒன்று தவழ்ந்து சென்றதைக் கண்டார்.
அதோடு, அந்த மில்லில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதையும் அறிந்து கொண்டார்.
மருத்துவப் படிப்பை முடித்த பிறகு, இப்பகுதிக்கு வந்து நோய் குறித்த விழிப்புணர்வை கொண்டு வரவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும், இனிமேல் பிறக்கும் இந்தப் பகுதி குழந்தைகள் போலியோ தாக்காமல் வளர, வழிவகை செய்ய வேண்டும் எனவும் நினைத்தார்.
அந்த எண்ணத்தின் செயல்பாடு தான், பிற்காலத்தில் அவர் கட்டி எழுப்பிய மருந்து நிறுவனமாக உருவெடுத்தது.
சிறு வயதிலேயே கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், மும்பை பல்கலைக்கழகத்தில் தன்னுடைய மருத்துவப் படிப்பை நிறைவு செய்தார்.
தொடர்ந்து அமெரிக்காவின் ஹார்வோர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தில் மாஸ்டர்ஸ் பட்டமும் பெற்றார்.
பிறகு பரேல் பகுதியில், தன்னைப் போன்றே சிந்திக்கும் மருத்துவக் குழுவினருடன் இணைந்து, போலியோ குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
நோய் குறித்த புரிதல், பெரிதாக இல்லாத அந்த காலகட்டத்தில், இவர்கள் கூறிய தகவல்களை மக்கள் ஏற்கவில்லை.
எனினும் விடாமல் முயன்று வீதி நாடகங்கள், நாட்டுப்புற பாடல்கள், எளிமையான சொற்பொழிவு என்றெல்லாம் செய்து காட்டி போலியோவின் தீவிரத்தை அவர்களுக்கு உணர்த்தினார்.
பெரும் முயற்சியின் பலனாக குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் பணி தொடங்கப்பட்டது.
1980-களில் பரேல் பகுதியில், சுமார் 25,000 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் 1990-களில் போலியோ இல்லா பகுதியாக பரேல் மாறியதில், இவரின் பங்கு அளப்பரியது.
சமூக வாழ்வில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில், இவரின் தனிப்பட்ட வாழ்வு பாதிப்புக்குள்ளானது.
கணவர் அஜய் பிராமல் செய்து வந்த தொழிலில் பலத்த நஷ்டம் ஏற்பட்டதால், நிதிநிலைமை மோசமடைந்தது மட்டுமல்லாமல், இழப்புகளையும் சந்திக்க நேரிட்டது.
மருத்துவத் துறையை சேர்ந்தவர் என்பதால் இதய நோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட எல்லா விதமான வியாதிகளுக்கும் தரமான, அதேசமயம் வாங்கக்கூடிய விலையில் மருந்துகளை தயாரிக்கலாம் என்று முடிவு செய்து கணவருடன் இணைந்து மருந்து நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்.
பரிச்சயம் இல்லாத துறையில் கால் பதித்தாலும் கடும் உழைப்பினால் வெற்றிபெற முடியும் என்பதை நிரூபித்தவர், அதன் பிறகு இந்தியாவில் செயல்பட்டு வந்த நிக்கோலஸ் லேபாரெட்ரிஸ் என்ற மருந்து நிறுவனத்தை விலைக்கு வாங்கி அதை பிராமல் ஹெல்த் கேர் லிமிடெட் ஆக மாற்றினார்.
தரமான மருத்துவ விஞ்ஞானிகளை கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனம், தற்போது பிராமல் என்டர்பிரைசஸ் லிமிடெட் என்ற பெயரில், இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனமாக வெற்றிகரமாக செயலாற்றி வருகிறது.
இந்நிறுவனத்தின் இன்றைய சொத்து மதிப்பு 26 ஆயிரம் கோடி ரூபாயாகும்.
சமூக நோக்கத்தோடு செய்யப்படும் வணிகம் தான் காலம் கடந்து நிற்கும் எனக் கூறும் சுவாதி, தன்னுடைய பிராமல் அறக்கட்டளையின் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி, மற்றும் வளமான எதிர்காலம் ஆகியவற்றிற்கு பெரும் பங்களிப்பைச் செய்து வருகிறார்.
– எஸ். வாணி