மத்திய, மாநில அமைச்சரவைகளில் மாற்றம்?

பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணி ஆட்சிகளின் ஆதரவுடன் கூடிய ஆட்சி மத்தியில் அமைந்ததிலிருந்தே சிலச்சில பிரச்சினைகள் உருவானாலும் கூட, மத்திய அமைச்சரவையில் எந்தவிதமான மாற்றமும் இதுவரை நிறுத்தப்படவில்லை.

ஆனால், தற்போது பல்வேறு விதமான பொருளாதார நெருக்கடிகளையும் உலக அளவில் போர்ச்சூழலால் உருவான பக்க விளைவுகளையும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், அண்மையில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் நிகழ வாய்ப்பிருக்கிறது என்று டெல்லி வட்டாரத்தில் செய்திகள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன.

மத்திய அமைச்சரவையில் தற்போது முக்கிய பொறுப்பில் இருக்கும் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட சிலர் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டோ அல்லது புதிய பொறுப்புகளில் நியமிக்கப்படவோ வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே, தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி.யான ரவிக்குமார், இது குறித்த முன்னோட்டமாக, “நிர்மலா சீதாராமன் கல்வி அமைச்சராவதற்கு வாழ்த்துகள்“ என்று பதிவிட்டிருந்தார்.

இத்தகைய மாற்றம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே இப்போதைக்கான டெல்லி வட்டாரத் தகவல்.

இது மத்திய அமைச்சரவையைப் பற்றியது. அடுத்து மாநில அமைச்சரவையைப் பற்றி பார்ப்போம்.

ஏறத்தாழ 40 நாட்களுக்கு மேல் கூட்டணிக் கட்சிகளின் பங்களிப்புடன் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருக்கும் தவெக தலைவரான விஜய்க்கு, அவர் முதல்வர் ஆனதிலிருந்தே சந்திக்கும் நெருக்கடிகள் மிக அதிகம்.

பெரும்பான்மை எண்ணிக்கை கிடைத்தாலும் கூட, பத்து தொகுதிகளுக்காக பல கூட்டணிக் கட்சிகளை அவர் சந்தித்து அவரிடம் பேசிய பிறகே, கூட்டணி அமைச்சரவையில் அவர்களில் சிலர் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

முக்கியமாக 1967-ம் ஆண்டு வரை தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த காங்கிரஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தவெக அமைச்சரவையில் இடம்பெற முடிந்திருக்கிறது.

அதுபோலவே, மிக நீண்ட காலமாக திமுகவுக்குக் கூட்டணியில் உற்ற துணையாக இருந்து வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கும் அமைச்சரவையில் இடம் தரப்பட்டிருக்கிறது.

மிகுந்த தயக்கத்திற்குப் பிறகு விடுதலைச் சிறுத்தைகளும் இதே கூட்டணி அமைச்சரவையில் பங்கேற்றிருக்கிறது.

தற்போதைக்கு தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கைக்கோரும் தீர்மானத்தில் வெற்றி பெற்ற நிலையில் இருந்தாலும் கூட, தவெகவிற்கு எந்த நேரத்திலும் பிரச்சனை வரலாம் என்கின்ற ஒரு எண்ண ஓட்டத்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன.

சிலர் மூன்று மாதம் என்று சொல்ல, சிலர் ஆறு மாதம் என்று கூட்டணி ஆட்சிக்கு காலக்கெடு விதித்திருக்கிறார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் தவெக ஆட்சியவே கலைக்க திமுக முற்பட்டதாக ஒரு தகவல் பரவி, திமுக முன்னாள் அமைச்சரான கரூர் செந்தில் பாலாஜி அவரது சகோதரர் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பாய்ந்திருக்கிறது.

சில காலம் தலைமறைவாக இருந்து வந்த அவர்கள் தற்போது நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்ற நிலையில், தினமும் கையெழுத்திடும் நிலையில் இருக்கிறார்கள்.

திமுக, ஆட்சியைக் கலைக்க ஒரு தவெக எம்எல்ஏவுக்கு 35 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்கள் தவெக அமைச்சர்கள்.

அதிலும் நீதிமன்றத்தில் காவல்துறை இதே விஷயத்தை உறுதிப்படுத்தி இருப்பதோடு, இதில் தொடர்புடைய ஒருவர் சிங்கப்பூருக்கு தப்பி ஓடிவிட்டதாகவும் சொல்லியிருக்கிறது.

ஆக, திமுக உள்ளிட்ட கட்சிகள் மிகுந்த மனப்பதற்றத்தில் இருக்கின்றன என்பது பல்வேறு செயல்பாடுகள் மூலமாகவும், அவர்களுடைய பேச்சுக்களின் மூலமாகவும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

பத்தாம் தேதி அன்று கரூருக்குச் செல்வதாக முதல்வர் விஜய் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு கூட நீதிமன்றத் தடையைப் பெற திமுக தரப்பில் ஒரு முயற்சி நடந்திருக்கிறது.

இப்படிப் பல்வேறு தடைகளை மீறிய நிலையில் தான், மிகுந்த குழப்பத்தை எதிர்கொண்ட நிலையில் தவெக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இத்தகைய நிலையில் தவெக அணியில் இடம்பெற்றிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்னியரசு சமூக நீதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு அவருடைய செயல்பாடுகள் கவனிக்கத்தக்க ஒன்றாகவே இதுவரை இருந்து கொண்டிருக்கின்றன.

முக்கியமான பிரச்சினைகள் அரசு சார்பில் வன்னிய அரசும் உரிய முறையில் குரல் கொடுப்பவராக இருந்து வருகிறார்.

ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள்ளேயே தவெகவுக்கு எதிரான சில கருத்துக்களை தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி.யான ரவிக்குமார் முன்வைத்து வருகிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவரான தொல்.திருமாவளவனும் தவெக ஆட்சி குறித்த விமர்சனங்களை இடையிடையே முன்வைத்த நிலையில், திமுக ஆதரவு நிலைப்பாட்டையும் அடிக்கடி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஏன் இந்த இரட்டை நிலையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எடுக்க நேர்ந்திருக்கிறது?

மிக அண்மையில் பாமக தலைவரான அன்புமணி தமிழக முதல்வர் விஜய்யிடம் தவெக கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்திருப்பதாக தலைமைச் செயலக வட்டாரத்திலேயே பேசப்படுகிறது.

பாமக கூட்டணியில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதால், எண்ணிக்கையைப் பொறுத்தவரை தவெகவிற்கு பாமக வருவது கூட்டணியை மேலும் உறுதிப்படுத்தவே செய்யும்.

ஆனால், அதேசமயம் பாமக, தவெக அமைச்சரவையில் இடம்பெற்றால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அந்த அமைச்சரவையிலிருந்தும் ஆதரவு நிலைப்பாட்டிலிருந்தும் விலக வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகும்.

அப்படிப்பட்ட நிலை நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பதே கடந்த இரண்டு நாட்களாக தமிழக தொலைக்காட்சிகளின் விவாதப்பொருளாக மாறி இருக்கிறது.

அதோடு இடதுசாரிகளும் தொடர்ந்து தவெக கூட்டணிக்கான ஆதரவு நிலைப்பாட்டை வைப்பார்களா அல்லது மறுபடியும் ஏற்கனவே இருந்த திமுக கூட்டணிக்கு இடம்பெறுவார்களா என்பது பற்றிய தெளிவில்லாத குழப்பங்களே நீடிக்கின்றன.

விரைவில் வர இருக்கும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பே தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருக்கிறது என்பதே தற்போதைக்கு முக்கியத்துவம் பெறும் ஒன்றாக இருந்து கொண்டிருக்கிறது.

– லியோ

You might also like