தடயங்களை விரிவாக அலசும் தரமான நூல்!

நூல் அறிமுகம் :

எல்லா விதமான குற்றங்களும் பாதிக்கப்பட்டோரின் மனத்தில் வடுக்களை மட்டும் அல்ல, தடயங்களையும் விட்டுச் செல்கின்றன.

குற்றங்களை அறிவியல்பூர்வமாக நிரூபிப்பது மட்டுமே நீதியைப் பெறும் வழி.

குற்றம் நடந்த இடம், விதம், குற்றவாளியின் குணம், எல்லாமே அறியத் தருகின்றன தடயங்கள். அதைக் கற்றுத் தருகிறது தடயவியல்.

இந்நூல் திகில் நிறைந்த அந்த உலகுக்கு உங்களைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறது.

இதன் ஒவ்வோர் அத்தியாயமும் உண்மையான குற்றச் சம்பவம் ஒன்றின் பின்னணியை ஆராய்ந்து, குற்றவாளி பிடிபடக் காரணமான தடயங்களை விரிவாக அலசுகிறது.

தடயவியலின் பல்வேறு பிரிவுகள் அதன் வழியாக அறிமுகமாகின்றன.

நூலாசிரியர் ரிஷி ரமணா, தடயவியல் துறையில் பல ஆண்டுகள் பெற்ற கள அனுபவங்கள் எழுத்தில் பிரதிபலிக்கின்றன.

மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் வெளியாகி வெற்றி கண்ட தொடர், இப்போது நூலாகிறது.

பொதுவாக துறை சார் வல்லுநர்கள் தங்கள் துறை சார்ந்த நுட்பங்களை, அனுபவங்களைப் பதிவு செய்யும்போது அந்த எழுத்துக்குத் தானாகவே ஆழம் கூடும்.

அந்த எழுத்து வாசகரை அவர் அறியாத புதிய உலகத்துக்குள் அழைத்துச் செல்வதாக இருக்கும்.

அந்த வகையில் தடயவியல் வல்லுநராக இருக்கும் ரிஷி ரமணாவின் இந்தப் புத்தகமும் கொலையைத் துப்புத் துலக்கும் உலகுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

ஒவ்வொரு அத்தியாயமும் அத்தனை அடர்த்தி. அத்தனை தகவல்கள்.

தடயவியல் என்றால் என்ன அடிப்படையில் தொடங்கி நம் உடல் இயக்கம் சார்ந்த ஒவ்வொரு அம்சமும் எப்படிச் சில தடயங்களை விட்டுச் செல்கின்றன, அந்தத் தடயங்கள் எப்படி மறைக்கப்பட்ட குற்றங்களைக் வெளிக்கொணர்கின்றன என விளக்குகிறார் ரிஷி ரமணா.

நிஜமான ஒரு கொலை சம்பவம், அந்தக் கொலையைக் கண்டுபிடிக்க உதவிய தடயம், அதன் பின் இருக்கும் அறிவியல் என ஒவ்வொரு அத்தியாயமும் எழுதப்பட்டிருக்கிறது.

குற்றவியல் குறித்த புத்தகமாக இருந்தாலும் நம் உடலையும் அதன் இயக்கத்தையும்கூட புரிந்துகொள்ள உதவும் புத்தகமாகவும் எனக்குத் தோன்றியது.

இறப்பு எப்படி நிகழ்கிறது? எத்தனை வகை இறப்புகள் இருக்கின்றன? ஒருவர் இறந்தவுடன் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன?

இறந்தவரின் உடலில் தோல் தொடங்கி, பற்கள், எலும்புகள், உடலில் வரும் பூச்சி புழுக்கள், உடலில் இருந்து வெளியேறும் வாயு, டி.என்.ஏ, கால்தடம், உடல் புதைக்கப்பட்ட மணல் என எல்லாவற்றையும் விவரிக்கிறது.

அதோடு, இறந்தது யார்? அவரது பாலினம் என்ன? அவர் வயது என்ன இருக்கும்? அவரது உயரம் என்னவாக இருக்கும்? அவர் எடை என்னவாக இருக்கும்?

அவர் எப்படி இறந்திருக்கலாம்? யார் கொலை செய்திருக்கலாம் என அவரது இறப்பு குறித்த அத்தனை விவரங்களையும் எப்படித் தருகின்றன?

இதனை ஆராய்வதற்கு என்னென்ன வழிமுறைகள் உத்திகள் இருக்கின்றன? தடயவியலில் என்னென்ன உட்பிரிவுகள் இருக்கின்றன?

தடயவியலில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் என்னென்ன? மென்பொருள் என்ன? தடயவியல் சார்ந்து பயன்படுத்தப்படும் கலைச் சொற்கள் எவை?

நாம் தடயங்களைக் கொண்டு நிறுவும் முடிவு என்பது நீதிமன்றத்தில் மெய்மை என ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது கருத்துரை என்று ஊகத்தின் பெயரில் அணுகப்படுமா?

இப்படி ஏராளம் இருக்கின்றன. 

உண்மையில் தடயவியல் துறையில் தமிழில் பாடமாகவே வைக்கும் அளவுக்கு செறிவான புத்தகம்.

********

நூல்: தடயம்
ஆசிரியர்: ரிஷி ரமணா
எழுத்து பிரசுரம்
விலை: ரூ. 230/-

– நன்றி : முகநூல் பதிவு

You might also like