சிசேரியன் – பெண் உடல் மீதான மருத்துவ வன்முறை!

அபூர்வமாக செய்யப்பட வேண்டிய அறுவை சிகிச்சை குழந்தை பிறப்பு இன்று இயல்பான ஒன்றாக மாற்றப்பட்டு வருவது பொறுப்பற்றது.

மருத்துவ வணிகத்திற்காக தாய்குலத்தை நிரந்தரமாக பலவீனமாக்குவதா? சுகப் பிரசவத்தை துயரம் அனுபவிக்கும் சுமை பிரசவமாக்கும் அறுவை சிகிச்சை அணுகுமுறை குறித்த ஒரு அலசல்;

ஒரு குழந்தை தாயின் கருவறையில்இருந்து வெளி வருவதற்கான பிறப்புரிமை என்பது இயற்கையானது. சட்டப்படி பெறும் அடிப்படை உரிமையுமாகும். கருவறையில் இருந்து விடுதலையாகி சுதந்திரமாக வாழும் உரிமையை அது குறிக்கிறது.

அவ்வகையில் ஒவ்வொரு மனிதருமே இயற்கையான முறையில் பிறக்கும் உரிமையைப் பெற்றுள்ளார். அதாவது தாயின் பிறப்புறுப்பின் வழியாக பிறக்கும் உரிமை அது.

அந்த உரிமையை கருவுறும் பெண்ணோ, அவரது ஆண் துணையரோ அல்லது குடும்ப உறுப்பினரோ, மருத்துவ முறைகளோ மறுக்கலாகாது.

அப்படி மறுப்பது ஒரு மனிதன் பிறக்கும் போதே தன்னுடைய உரிமைகளை இழந்து, உரிமைகள் மறுக்கப்பட்டு பிறப்பதாகும்.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறுவைமுறை பிரசவங்கள் தலைமுறைகளின் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது, ஆகையினால் இலாப நோக்கில் செய்யப்படும் அறுவைமுறை பிரசவங்களை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும்’’ என்றார்.

சிசேரியனுக்கு முழுமையான காரணம், பெற்றோர், தங்களுக்குத் தேவையான நாளில் குழந்தையை வெளியில் எடுப்பது தான், சிசேரியனை தவிர்க்குமாறு தனியார் மருத்துவமனைக்குக் கடிதம் எழுதியுள்ளோம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

2021 நவம்பர் 11-ம் தேதி 24 மணி நேரத்தில் 68 குழந்தைகள் எழும்பூர் தாய்சேய் மருத்துவமனையில் பாதுகாப்பாக பிறந்துள்ளன.

இதில் 60 சதவீதம் சுகப் பிரசவத்திலும், 40 சதவீதம் அறுவைசிகிச்சை செய்யப்பட்டும் குழந்தைகள் பிறந்தன. இதில் 8 மருத்துவர்கள், 22 செவிலியர்கள் பணியாற்றி உள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனை தமிழ் நாட்டில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 65 விழுக்காடு பிரசவம் நடைபெறுகிறது. 35 விழுக்காடு பேர் தனியார் மருத்துவமனைக்குச் செல்கின்றனர்.

இந்த எண்ணிக்கையில் அரசு மருத்துவமனைகளில் 65 விழுக்காடு பேருக்குச் சுகப்பிரசவமாகவும், தனியார் மருத்துவமனையில் 35 விழுக்காடு பேருக்கு மட்டுமே சுகப்பிரசவம் நடைபெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேற்கத்திய நாடுகளில் சுகப்பிரசவம்;

மேற்கத்திய நாடுகளில் 20 விழுக்காடு மட்டுமே சிசேரியன் செய்யப்படுகிறது, 80 விழுக்காடு சுகப்பிரசவமாக உள்ளது.

முன்பெல்லாம் 100 விழுக்காடு சுகப்பிரசவம் மட்டுமே இருந்தது. தற்போது, அந்த சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது.

சிசேரியன் சதவீதம் அதிகரித்துக் கொண்டே உள்ளது என்று தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அறுவைமுறை பிரசவங்களை மருத்துவர்கள் தவிர்த்து, நலமான தலைமுறைகளை உருவாக்க நாட்டுக்கு உதவ வேண்டும்’’ என்று பேசினார்.

90 விழுக்காடு சிசேரியன் பிரசவங்கள் தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன.

அதில் 56.62 விழுக்காடு சில மருத்துவர்களின் பேராசையினால் சிசேரியன் பிரசவங்களாக நடக்கின்றன என்றார்.

இந்தக் கருத்தியலை தமிழ்நாட்டில் டாக்டர் ஃபஸ்லூர் ரகுமான், டாக்டர் சித்திக் ஜமால், டாக்டர் கோ.நம்மாழ்வார் மற்றும் என்னைப் போன்ற இளம் பெற்றோரும் பேசவும் செயல்படவும் துவங்கினோம்.

2011-ம் ஆண்டு திருப்பூரில் நடந்த நண்பர் கதிர் முருகனின் திருமண இணையேற்பு நிகழ்வில் இயற்கை ஞானி கோ.நம்மாழ்வார் அவர்கள் பேசிய பேச்சில் இருந்து இக் கருத்தை உங்கள் முன் வைக்கிறேன்;

அப்பொழுதெல்லாம் வீட்டிலேயே குழந்தை பிறந்தது. இன்றைக்கு குழந்தை வீட்டில் பிறப்பதென்றால் பெரிய வியப்பான செயலாக ஆக்கிவிட்டார்கள்.

பத்து மாசமாச்சுனா குழந்தை அம்மா வயித்த உதைச்சிட்டு வெளிய வந்து விழுந்துரும். இப்ப விழுவ விட மாட்டேங்கிறாங்களே!

மெய்ஞ்ஞான மூர்த்தி சொன்ன விஷயம் என்னன்னா…. திருமணமான 2, 3 மாதத்தில் கர்ப்பம் தரிக்கிறாங்க. அது இயல்பாக நடக்கக் கூடிய விஷயம்.

கர்ப்பம் தரிச்சதிலிருந்து ஒரு மருத்துவமனைக்குப் போய்கிட்டே இருக்காங்க.

சோதனை செய்து மருந்து, ஊசி எல்லாம் போடுறாங்க. கடைசியில் அந்த 9 மாசம், 9 நாள், 9 மணி, 9 நிமிடம் நடக்கிற நேரத்தில் என்ன சொல்றாரு….

இல்ல இல்ல, குழந்தை தானா வராது போல இருக்கு, ஒன்னு குழந்தை செத்துப் போய்டும், இல்ல அம்மா செத்துப் போயிரும், ரெண்டையும் காப்பாத்துனும்னா வயித்தக் கிழிச்சு எடுக்கணும். வயித்தக் கிழிச்சு எடுக்குறதுக்கு எதுக்கு 9 மாசம் இவன் வைத்தியம் பாத்தான்…?

கொஞ்சம் யோசிங்க. குழந்தை உண்டாகறது, வெளிய வர்றது எல்லாம் தானா நடக்கக்கூடிய செயல்….!

இன்னிக்கு நம்ம கூட்டாளி ஏங்கல்ஸ் வந்துருக்காரு. பட்டுக்கோட்டையில், அவர் மனைவிய வீட்டிலேயே வச்சு குழந்தைய வெளிய எடுத்துருக்காங்க.

வீட்டில வச்சுக்கறதுக்கு அவ்வளவு கஷ்டமாப் போயிடுச்சாம். அவர் மாமியாரே சொல்லிட்டாங்களாம்.

இத பாரு..எதாவது நடந்து போயிடுச்சுனா போலிஸ்ல உன் மேலதான் Complaint கொடுப்பேன்னு…..

கடைசில குழந்தை தானா வெளிய வந்துடுச்சு. பெரிய அதிசயமா பாத்தாங்க. அதே போல இன்னொரு குழந்தை கூட அப்படி வந்திருச்சு. அதே மாதிரி சபாபதி பையனும் தானாகவே வீட்டிலேயே பிறந்தான்.

நல்லா தெரிஞ்சுக்கங்க. ரொம்ப சின்ன விடயங்கள் நமக்குத் தெரியாததால நாம பாதிப்புக்குள்ளாகுறோம்..!

அந்த இங்கிலீஷ் டாக்டருக்குத் தெரிஞ்ச பெரிய செயல் கிழிச்சு தைக்கிறது தான். உடம்ப கிழிச்சு தைக்கிறது மட்டும் தான். அதுக்கு அவர் கிட்ட License இருக்கு. யாரும் அவர் மேல குற்றஞ் சாட்ட முடியாது.

கோர்ட்ல கேஸ் எல்லாம் போட முடியாது. கிழிச்சு கிழிச்சு தைக்கிறான். கிழிச்சு தைச்சிட்டு என்ன சொல்றான், குனியாத, நிமிராத, வேகமா நடக்காத, தண்ணீர் தூக்காதன்னு. அந்த உடம்பு அதோட தீந்து போச்சுல்ல.. அதுக்கப்புறம் வாழத் தகுந்தது இல்லாம பண்ணிருச்சுல்ல.

வாழத் தகாததாக மாத்துறது மட்டும் தான் அவங்க செஞ்சிட்டுருக்காங்க. இத நாகரிகம்ங்கிற பேருல நாம ஏத்துக்கிறோம்.

இந்த இடத்துல எது நாகரிகம் எது வாழ்க்கைனு புரிஞ்சிடுச்சுனா, சரியாயிடும்’’ என்று நம்மாழ்வார் அவர்கள் மிக ஆழமான விடயத்தை நம் முன்விட்டுச் சென்றுள்ளார்.

அறுவை சிகிச்சையை ஏன் தவிர்க்க வேண்டும்?

# அறுவை சிகிச்சையால் உருவாகும் நிரந்தர இடுப்பு மற்றும் முதுகு வலி!

# அறுவை சிகிச்சையால் அடி வயிற்று தசைகள் பலவீனமடைவதால் வயிறு தன் இயல்புக்கு மாறாமல் பெருத்து அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் அவதிப்படுவது.

# அடுத்தடுத்த பிரசவத்தையும் சிசேரியன் என்ற நிலைக்குத் தள்ளி பெண் உடலை மேன்மேலும் பலவீனமாக்குதல்.

# அறுவை சிகிச்சையால் தாய்ப்பால் கொடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

# அறுவை சிகிச்சைக்கு பிறகு ஏற்படும் மாதவிடாய் மற்றும் கர்ப்பகால சிக்கல்கள்.

# சிசேரியனின் போது ஏற்படும் மனித தவறுகளால் மற்ற உறுப்புகள் பாதிக்கப்படுகிறது.

இவை போன்று நபருக்கு நபர் ஏற்படும் மாறுபட்ட உபாதைகள் அதிகம் அதிகம்..

இதனால் தான் பெண் உடலின் மீது நடத்தப்படும் வன்முறையாக நாம் அறுவை சிகிச்சையை சொல்கிறோம்.

தனி மனிதர்களும் அரசு சாரா அமைப்புகளும் இது குறித்து அக்கறைக் கொண்டு பேசியும் செயல்பட்டும் வரும் சூழலில், முன்பு மிக அதிகமாக இருந்த இறப்பு விகிதம் தற்போது குறைந்துள்ளது.

15 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட தற்போது மூன்றில் ஒரு பங்கே பேறுகால இறப்பு ஏற்படுகிறது.

ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள மகப்பேறு இறப்பு விகிதம் தொடர்பான புள்ளி விவரங்களின்படி, தமிழ்நாட்டின் 2021-2023 காலகட்டத்தில் மகப்பேறு மரண விகிதம் ஒரு லட்சம் மகப்பேறுக்கு 35 ஆக குறைந்துள்ளது.

இந்திய அளவில் மகப்பேறு மரணம் ஒரு லட்சத்திற்கு 88 ஆக உள்ளது. உத்திரபிரதேசத்தில் 140 ஆக உள்ளது.

பேறுகாலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மரணம் என்பது மருத்துவ வசதிகள் சென்றடையாத கிராமங்களில் தான் அதிகம் என்கிற நம்பிக்கை நம்மிடையே வேரூன்றி இருக்கிறது.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, கிராமங்களில் பெண்களே சக பெண்கள் பிள்ளைப் பெற உதவி செய்வது மிக இயல்பான சம்பவமாக இருந்தது.

ஊர்ப்புற வயல் வெளிகளில் வேலை செய்து கொண்டிருந்த போதே பிரசவ வலி ஏற்பட்டு, மரத்தடியில் பிள்ளைப் பெற்ற சம்பவங்கள் ஏராளம்.

2015-2016 நடைபெற்ற கணக்கெடுப்பின்படி இந்திய அளவில் 22 சதவிகிதம் வீட்டுப் பிரசவமாக இருந்துள்ளது. இதே காலகட்டத்தில் தமிழ் நாட்டில் 6 சதவிகிதமே வீட்டு பிரசவமாக இருந்துள்ளது.

ஆனால் இந்த கணக்கெடுப்பில் 34 சதவிகித பெண்கள் வீட்டு பிரவசவத்தை விரும்புவதாக தெரிய வந்துள்ளது.

ஆனால், பெண்களின் விருப்பங்களை இந்த சமூகம் பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை என்பது தான் காலம்காலமாக நடக்கின்றது.

வீட்டுப் பிரசவம் குற்றமல்ல;

இன்றைய தினம் தமிழ் நாட்டில் வீட்டுப் பிரசவமே கூடாது என்பதை ஒரு மருத்துவத் தீவிரவாதம் போல இங்கு அமல்படுத்துகிறார்கள்.

அங்கும்மிங்கும் அபூர்வமாக வீடுகளில் நடக்கும் சுகப் பிரசவங்களைக் கூட காவல்துறையை ஏவி கடும் குற்றமாக்கும் போக்கு நடக்கின்றது. இது தவிர்க்க வேண்டியதாகும்.

இன்றும் ஊர்ப்புறங்களில் மருத்துவச்சி எனும் வயதான பெண்மணிகள் அடி வயிற்றைத் தடவிப் பார்த்தே தலை எங்கே இருக்கிறது என்பதைச் சொல்லி விடுவார்கள்.

அண்மையில், மதுரை அருகே உள்ள மலைவாழ் பழங்குடியினர் குடும்பம் பற்றிய செய்திக் கட்டுரையில் அந்த இனக் குழுவில் இருக்கும் யாருமே மருத்துவமனைக்கு வந்து பிள்ளைப் பெற்றதே இல்லை என்றும், அவர்களில் ஆண்-பெண் இருவருமே பேதமற்று இதில் திறமை பெற்றிருக்கிறார்கள் என்றும், படித்த போது வியப்பாக இருந்தது.

மருத்துவமனைகளை மட்டுமே நம்பிக் கொண்டு, நமது மரபு மருத்துவ முறைகளை நாம் மறந்து போகிறோம்.

கர்ப்பத்தை உறுதி செய்வதில் தொடங்கி, மூன்றாவது மாதத்திலேயே ஸ்கேன் செய்யத் தொடங்கி, டானிக்குகள் சாப்பிடச் சொல்லி, அலோபதி மருத்துவத்தால் மட்டுமே குழந்தை நலமாகப் பிறக்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டார்கள்.

கிராமத்துக் குடும்பங்கள்கூட நகரங்களுக்கு வந்து தனியார் மருத்துவமனைகளில் சுகப் பிரசவத்திற்கு ரூ.50,000-த்தில் இருந்து 75,000 வரையிலும் சிசேரியன் செய்து கொள்வதற்கு ஒரு லட்சத்தில் இருந்து ஒன்றரை லட்சம் வரை செலவு செய்யும் அவல நிலை உள்ளது.

இதனால் ஏழை, எளிய குடும்பங்கள் கடனாளியாகிவிடுகிறார்கள்.

முன்பெல்லாம் பனிக் குடம் உடைந்தும் பிள்ளைப் பேறு நிகழாத நிலையில் தான் மருத்துவமனையை நாடும் வழக்கம் இருந்தது.

அத்தகையச் சூழலில் மட்டுமே சில கர்ப்பிணிப் பெண்கள் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் இறந்தனர் என்பதும் உண்மை.

இன்று பெண் கல்வியும், போக்குவரத்து வசதியும், கைப்பேசி வசதியும், 108 அவசர ஊர்தி போன்ற வசதிகளும் பெருகியுள்ள இந்த நாளில் மரபு மருத்துவத்தைக் கடை பிடிக்கவும், பிரசவம் கடினமானதாக இருக்கும்போது மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்வதும் மிக எளிது.

மகப்பேற்றில் மரபு முறைகளைக் கையாளுதல், தேவைப்பட்டால் ஆங்கில மருத்துவத்தின் துணை நாடுதல் என்ற இரண்டும் இணையும் ஒரு நிலைமை உருவானால், அனைத்து கர்ப்பிணிகளுக்குமே பயனுள்ளதாக அமையும்.

இன்றைய சூழ்நிலையில் இதற்கான மருத்துவச்சியை அடையாளம் காண்பது அரிது.

ஆனால், அங்கன்வாடி பணியாளர்கள், கிராமச் சுகாதார அலுவலர்களுக்கு இத்தகைய மரபு மருத்துவ அறிவைப் புகட்டி, பயிற்சியும் அளிக்க முடியும்.

தேவையில்லாமல் அறுவை சிகிச்சை, மருத்துவமனைச் செலவு என்று பணவிரயம் செய்ய வேண்டியது அவசியம் தானா? நாம் ஏன் மரபு மருத்துவமுறைகளைப் பாதுகாத்துக் கொள்ள மறுக்க வேண்டும்?

  • லெ. ஏங்கெல்ஸ் ராஜா, அக்குபங்சர் மற்றும் இயற்கை வழி நல வாழ்வு மருத்துவர்.

– நன்றி : அறம் இதழ்

You might also like