உதவுவதிலும் வாழ்ந்து காட்டிய மக்கள் திலகம்!
வாழ வழி காட்டும் எம்.ஜி.ஆர் – 2
எம்.ஜி.ஆரின் மிகச் சிறந்த பண்பு மற்றவர்களுக்கு வாரி வழங்கும் வள்ளல் தன்மை என்பது அனைவருக்கும் தெரியும். இப்படி அவரிடம் உதவி பெற்றவர்கள் பெரும்பாலும் அவரது ரசிகர்களாக, ஏழை எளியவர்களாக, அவர் அன்பு வைத்திருந்த கலைத் துறையினராக இருந்தார்கள்.
பொதுவாகவே எம்.ஜி.ஆர்., ஒவ்வொரு படப்பிடிப்பு முடியும் முன்னர், அந்தப் படத்தில் வேலை செய்த சக நடிகர்களிலிருந்து, சாதாரண கடைநிலைத் தொழிலாளி வரையில் அவர்களுக்கான சம்பளம் கொடுக்கப்பட்டதா என்பதை உறுதி செய்துகொள்வார்.
அவரது வீட்டிற்குச் செல்பவர்களுக்கு அவர் சாப்பிடும் அதே உணவுதான் பரிமாறப்படும். இதில் சமூக வித்தியாசங்கள் எதையும் அவர் காட்டியதே இல்லை. மேலும் தன்னிடம் வேலை செய்தவர்கள் தனக்குத் தெரியாமல் அப்படி வித்தியாசமாக மற்றவர்களை நடத்தவும் அனுமதித்ததில்லை.
நண்பர்களுக்கு மட்டுமின்றி தன்னை நம்பி வந்தவர்கள் தன்னை எதிர்த்தவர்களாக இருந்தாலும் அவருக்கு உதவி செய்யத் தயங்கியதே இல்லை. அதுவும் பழையதை சிறு குறிப்பாலும்கூட உணர்த்தாமல், அப்போதைக்கு வேண்டிய உதவியை அவர்கள் மனம் கோணாதபடி மிகுந்த மரியாதையுடன் உதவி செய்தவர் எம்.ஜி.ஆர்.

கவிஞர் கண்ணதாசன் ஒரு காலகட்டத்தில் எம்.ஜி.ஆரைக் கடுமையாகத் தாக்கி எழுதியும், பேசியும் வந்தார். அதே காலகட்டத்தில் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள், மற்றவர்களை நம்பி ஏமாந்தது போன்றவற்றால் கவிஞர் மிகவும் பண நெருக்கடியில் இருந்தார்.
என்ன செய்வது என்று தெரியாமல் பெரும் கவலையில் இருந்தார். அவருக்கு வேண்டியது பெரிய தொகை. அதை பாடல்கள் எழுதுவதன் மூலம் உடனடியாகப் புரட்ட முடியாது. கடன்காரர்கள் நெருக்குகிறார்கள் யாரிடம் உதவி கேட்டால் கிடைக்கும் என்று சிந்தனை வயப்பட்டவராய் இருந்தார்.
அப்போது கவிஞருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர், “இதுபோன்ற சூழ்நிலையில் நம்பள மாதிரியான ஆட்களுக்கு உதவி செய்யக் கூடியவர் ஒருவர் மட்டுமே இருக்கிறார். அவர்தான் எம்.ஜி.ஆர். அவரிடம் போய் பிரச்சினைகளை சொல்லுங்கள், நிச்சயம் உதவிகள் கிடைக்கும்” என்றார்.
அதற்கு கண்ணதாசன், “ஐயோ, அவரிடமா… நான் இப்போதெல்லாம் அவரைப் பற்றி கடுமையாக ஏசியும், பேசியும், எழுதியும் வருகிறேன். அவரிடம் போவது நன்றாக இருக்காது, நான் போக மாட்டேன்” என்று சொல்லியிருக்கிறார்.
அதற்கு அவரது நண்பர், “அதெல்லாம் கவலைப்படாதீங்க, அவருக்கு இயல்பாகவே வள்ளல் தன்மை இயற்கையாகவே இருக்கிறது. நீங்களே போய்க் கேட்டால் அதற்காகவே உதவுவார். முயற்சி செய்து பாருங்களேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
கவிஞருக்கு அப்போதைக்கு வேறு எந்த வழியும் புலப்படவில்லை. மனம் முழுதும் தயக்கத்துடனும், நம்பிக்கை இல்லாமலும் எம்.ஜி.ஆர். இருக்கும் இடத்தைத் தேடி அங்கே சென்று அவரை சந்தித்தார்.
மக்கள் திலகம் இயல்பாக அவரை வரவேற்று, வந்ததற்கான காரணத்தைக் கேட்டார். கண்ணதாசனும் தான் அவரிடம் வந்த காரணத்தை மறைக்காமல் எடுத்துக் கூறினார். அவர் படும் துன்பங்கள், பிரச்சினைகள் பற்றி கவிஞர் சொல்லும்போது, இடையில் எதுவும் சொல்லாமல் அமைதியாகக் கேட்டுக்கொண்டார் எம்.ஜி.ஆர். அவர் முடித்ததும், “சரி உங்களுக்கு எவ்வளவு இருந்தால் பிரச்சினைகள் தீரும்?” என்று கேட்டார்.
அதைக் கேட்ட கண்ணதாசன் திகைத்துப் போனார். தயக்கத்துடன் ஒரு தொகையைக் குறிபிட்டார். உடனே, “கவலைப்படாம போங்க, நான் ஏற்பாடு செய்றேன்” என்று கூறி வழியனுப்பி வைத்தார்.
கவிஞருக்கு மனதில் நம்பிக்கையோ அமைதியோ ஏற்படவில்லை. ஆனாலும் வீடு திரும்பினார். அடுத்த நாள் எம்.ஜி.ஆர். தனது மேனேஜர் குஞ்சப்பனை அழைத்து ஒரு தொகையைக் கொடுத்து, “இதை நீங்களே கண்ணதாசன் வீட்டிற்குச் சென்று கொடுத்துவிட்டு வாருங்கள்” என்று கூறி அனுப்பினார்.
அன்றைக்கே குஞ்சப்பன் கவிஞரின் வீட்டிற்குச் சென்று எம்.ஜி.ஆர். கொடுத்து அனுப்பியதாகச் சொல்லி ஒரு பெரும் பணப் பொட்டலத்தைக் கொடுத்தார். அதை அதே இடத்தில் பிரித்துப் எண்ணிப்பார்த்த கவிஞர் நெகிழ்ந்துபோனார்.
எம்.ஜி.ஆருக்கு எப்படி நன்றி சொல்வது என்று யோசித்தபடியே, குஞ்சப்பனிடம் நன்றி சொல்லி அனுப்பி வைத்தார். அதன்பின் உடனடியாக எம்.ஜி.ஆர். அப்போது எங்கிருக்கிறார் என்று விசாரித்து அந்த இடத்துக்குப் போய் அவரைச் சந்தித்தார்.
எம்.ஜி.ஆரைப் பார்த்ததும், உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் சிந்தினார் கவிஞர். தழுதழுத்தபடியே எம்.ஜி.ஆரின் கைகளைப் பிடித்துக்கொண்டு நன்றி தெரிவித்தார்.
“நான் கேட்டதை விட பத்தாயிரம் ரூபாய் அதிகமாகக் கொடுத்துள்ளீர்களே, நானும் என் குடும்பமும், என்றென்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டவர்கள். நீங்கள் எப்போதும் எந்தக் குறையுமில்லாமல், இதுபோன்ற வள்ளலாக வாழும் வகையில் வாழ வேண்டும் என்று கடவுளை வணங்கிப் பிரார்த்திக்கொள்கிறேன்” என்று மனதார வாழ்த்தினார்.
அதுதான் எம்.ஜி.ஆர்.
கவிஞரைப் பற்றியும் அவரது தன்னிகரற்ற கவித்திறமையையும் அவருக்குத் தெரியும். எம்.ஜி.ஆர். தன்னுடைய படங்களுக்குப் பாடல் எழுதக்கூட அழைக்காமல் இருக்கும் அளவுக்கு அவருக்கும் கண்ணதாசனுக்கும் இடையே அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் இருந்தன.
கவிஞர் வாலிதான் அப்போது எம்.ஜி.ஆர். படங்களுக்கு பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தார். கவிஞர் கண்ணதாசனின் விமர்சனங்கள் தனக்கு ஏற்புடையதாக இல்லை என்பதை எம்.ஜி.ஆர். உணர்த்திக் கொண்டிருந்த காலகட்டம்.
ஆனாலும்கூடத் தன்னை எதிர்க்கும் கண்ணதாசன் தன்னிடம் வந்து கஷ்டம் என்று சொன்னவுடன், எந்த விதத்திலும் அவரைக் குறை கூறிப் பேசவில்லை. அவர் பேசியவற்றுக்கு விளக்கம் கேட்கவில்லை. இப்போது என்னிடம் வருகிறீர்களே என்பதைக் குறிப்பால்கூட உணர்த்தவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இனி அப்படிச் செய்ய வேண்டாம் என்கிற உறுதிமொழியைக்கூடக் கேட்கவில்லை. எதுவும் பேசாமல், அவரது பிரச்சினைகளைக் காது கொடுத்துக் கேட்டார்.
கவிஞர் சந்தித்த பிரச்சினைகள், அதையொட்டி அவர் எடுத்த முடிவுகள் ஆகியவை பற்றியும் எந்தக் கருத்தையோ, அபிப்பிராயத்தையோ, விமர்சனத்தையோ முன் வைக்கவில்லை. பிரச்சினைகளை எப்படிக் கையாண்டிருக்கலாம் என்று புத்திமதி சொல்லவில்லை. இதெல்லாம் சாதாரணமாக எல்லோருமே இயல்பாகச் செய்வது. ஆனால் எம்.ஜி.ஆர். சாதாரணமானவர் அல்ல.
அடுத்தவரின் நெருக்கடியின்போது அவரைச் சங்கடப்படுத்தக் கூடாது என்னும் பண்பைக் கொண்டவர். எனவே அவர் கவிஞரிடம் ஒரே கேள்வியைத்தான் கேட்டார், “எவ்வளவு இருந்தால், பிரச்சினைகளை சமாளிக்க முடியும்?”
இதற்கு எவ்வளவு பெரிய மனம் வேண்டும்? எம்.ஜி.ஆர். ஏமாளி என்று ஒருவரால் நகைச்சுவைக்காகக்கூட சொல்ல முடியாது. தன்னை எதிர்த்தவர் தன்னிடம் உதவி கேட்க வந்திருக்கிறார் என்ற இறுமாப்பு என்றும் சொல்ல முடியாது. அப்படி இருந்திருந்தால், அவரது வார்த்தைகளில், நடந்துகொள்ளும் முறைகளில் அவரையும் மீறி வெளிப்பட்டிருக்கும்.

ஆனால் அவர் அசாதாரணமான மனிதர் மட்டுமின்றி மற்ற மனிதர்களைப் பற்றித் தெரிந்தவர். பிறருக்கு உதவும்போது அதையும் மிக மரியாதையுடன், அவர்களது கஷ்ட காலத்தில் மனம் நோகா வண்ணம் செய்வது ஏறக்குறைய யாருக்குமே வராத ஒரு குணாம்சம். அதற்கென்று ஒரு மனம் வேண்டும்.
மற்றவர்களுக்கு உதவி செய்வது எப்படி என்பதையும் செயல் முறையில் விளக்கி, அதாவது வாழ்ந்து காட்டியிருக்கிறார் மக்கள் திலகம்.
(தொடரும்…)
02.02.2021 12 : 30 P.M