‘கபடதாரி’ – த்ரில் ஊட்டும் கயவன்!

ஏகப்பட்ட முடிச்சுகளுடன் மண்ணில் புதைக்கப்பட்ட வழக்கொன்றை, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு தூசு தட்டி வெளிக்கொணர்வதுதான்  ‘கபடதாரி’ கதை.

கொஞ்சம் பிசகினாலும் கேலிக்குள்ளாகிவிடும் அபாயத்தைக் கொண்ட திரைக்கதை. சில படங்களில் தலைகாட்டிய கலைஞர்கள், குறைந்த பட்ஜெட் இத்தனையையும் வைத்துக்கொண்டு ஒரு அபாரமான ‘ரீமேக்’ தந்திருக்கிறார் இயக்குனர் பிரதீப்.

2018-ல் கன்னடத்தில் வெளியான ‘கவுலதாரி’யைத் தழுவி உருவாக்கப்பட்ட இப்படத்தின் திரைக்கதையில் தனது பங்களிப்பைத் தந்திருக்கிறார் தயாரிப்பாளர் ஜி.தனஞ்ஜெயன்.

கயவன் எங்கே?

அவசரநிலை அறிவிக்கப்பட்ட காலகட்டத்தில் சென்னை தொல்லியல் துறை அலுவலகத்தில் ஒரு அதிகாரி கொலை செய்யப்படுகிறார். அவரது மேலதிகாரி சுரேஷ் மனைவி, மகளுடன் காணாமல் போகிறார்.

காணாமல் போன சுரேஷின் சட்டையில் ரத்தக்கறை படிந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வருகிறது. அவரது காரில் கொலைக்குப் பயன்படுத்திய கத்தி கிடைக்கிறது.

அதே நேரத்தில், தொல்லியல் துறை அலுவலகத்தில் இருந்த கிருஷ்ணதேவராயர் காலத்தைச் சேர்ந்த தங்கநகை புதையல் காணாமல் போகிறது.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கழித்து, சென்னையில் ஏரியை ஒட்டிய பகுதியொன்றில் பாலம் கட்டும் பணி நடக்கிறது. அப்போது மூன்று எலும்புக்கூடுகள் கிடைக்கின்றன. அதில் ஏழு அல்லது எட்டு வயது பெண் குழந்தையின் எலும்புக்கூடும் இருக்கிறது.

போக்குவரத்து காவல் துறையைச் சேர்ந்த சக்தி (சிபிராஜ்), கிடைத்த எலும்புக்கூடுகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதுகிறார்.

‘லாக்கப் நியூஸ்’ எனும் நாளிதழை நடத்தும் குமாரும் (ஜெயபிரகாஷ்) சம்பவ இடத்தைப் பார்வையிட வருகிறார். சக்தியுடன் மோதும் குமார், மெதுவாக அவரது விசாரணைக்கு ஒத்துழைப்பு தரச் சம்மதிக்கிறார்.

தடயவியல் துறை ஆய்வில், சுமார் 35-40 ஆண்டுகளுக்கு முன்னால் சம்பந்தப்பட்டவர்கள் மரணமடைந்திருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்படுகிறது. இதையடுத்து, அந்தக் காலகட்டத்தில் சென்னை பகுதியில் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களைத் தேடியெடுக்கிறார் சக்தி.

அப்போது, சுரேஷின் குடும்பம் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. அந்த வழக்கில் சாட்சியம் அளித்தவர்களில் யாரோ ஒருவர்தான் கொலையாளி என்று யூகிக்கிறார் சக்தி.

ஆனால், குற்றப்புலனாய்வு காவல்துறை அதிகாரிகள் அவரது ஆர்வத்துக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர்.

இதையடுத்து, சுரேஷின் வழக்கை கையாண்ட இன்ஸ்பெக்டர் ரஞ்சனை (நாசர்) தேடத் தொடங்குகிறார் சக்தி. அப்போது ஏற்படும் இடையூறுகள், அடுக்கடுக்காக கொலைகளைச் செய்துவிட்டு தொல்லியல் துறை பொக்கிஷங்களை கொள்ளையடித்தவரை அடையாளம் காணச் செய்கிறது.

குளத்துக்குள் விழுந்த குண்டூசியைத் தேடுவது போல கதை இருந்தாலும், மிகநேர்த்தியாக அமைக்கப்பட்ட திரைக்கதை நம்மை திரையுடன் ஒன்றச் செய்கிறது.

கச்சிதமான உள்ளடக்கம்!

40 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்ததை சக்தியே நேரில் கண்டுணர்வது போல காட்டுவது, முதலில் குழப்பத்தைத் தோற்றுவித்தாலும் மெதுவாக நம்மையும் விசாரணையுடன் ஒன்றிணைக்கிறது.

தொடக்கத்தில் விபத்துக்குள்ளாகும் நபர் ஒருவரை சுரேஷ் பார்ப்பதும், அவர் யாரென்று கடைசி காட்சியில் காட்டுவதும் அற்புதம். அந்த இடத்தில் நேர்த்தியான த்ரில்லரை பார்க்கும் உணர்வு மேலும் ஒரு முகட்டைத் தொடுகிறது.

சுரேஷ் கொலையாளி அல்ல என்பதை ரஞ்சனும் சக்தியும் புரிந்துகொள்ளும்போதே, உண்மையான கொலையாளி யார் என்பது காட்சியின் பின்னணியிலும் வசனம் மூலமாகவும் உணர்த்தப்படுகிறது. அதைப் புரிந்துகொண்டாலும், அந்த நபர் எவ்வாறு இந்த வழக்கில் சம்பந்தப்படுகிறார் என்பதை உணர்த்தும் வரை அந்த ‘த்ரில்’ தொடர்வது அருமை.

ரஞ்சனின் மனைவி, மகள் தொடர்பான காட்சிகள் ஊடே வருவது, ஆங்காங்கே நம் கவனத்தைக் கலைக்கிறது. ஆனாலும், நூல் பிடித்தாற்போல செல்லும் திரைக்கதை இறுதி வரை நம்மை கைபிடித்து கூட்டிச் செல்கிறது.

இறுதிக்காட்சிகள் குறைந்த பட்ஜெட்டை கோடிட்டுக் காட்டினாலும், கதையோட்டம் அந்த நினைப்பை விரட்டியோட்டுகிறது.

பொருத்தமான கலைஞர்கள்!

சக்தியாக வரும் சிபிராஜ், இதற்கு முன்னர் நடித்த படங்களை மறக்கடிக்கும் அளவுக்குப் புதிதாகத் தெரிகிறார். நந்திதாவுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், தனக்கான காட்சிகளை ஆக்கிரமிக்கிறார்.

ஜெயபிரகாஷ், நாசர் இருவரும் படம் முழுக்க சிபிராஜ் உடன் வருகின்றனர். அதற்கேற்றவாறு, அவர்களது பங்களிப்பும் இருக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து ஹீரோயினாக நடித்துவரும் பாத்திரத்துக்கு சுமன் ரங்கநாதன் மிகப்பொருத்தம். யோசித்துப் பார்த்தால், ‘மாநகர காவல்’ படம் வந்து 30 ஆண்டுகள் ஆனது உறைக்கிறது.

வில்லனாக நடித்திருக்கும் சம்பத் மைத்ரேயாவுக்குப் பெரிதாக வேலை இல்லை. ஆனாலும், கயமையை வெளிப்படுத்தும் அவரது பார்வை அதனை ஈடுகட்டுகிறது.

ஒரிஜினலில் அவர் நடித்திருந்தாலும், அந்தப் பாத்திரத்துக்குத் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த ஒருவரை தேர்வு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

தயாரிப்பாளர் ஜே.எஸ்.சதீஷ்குமார், சுரேஷ் எனும் பாத்திரத்தில் கவுரவமாக வந்து போகிறார்.

இத்திரைக்கதைக்கு உயிர் கொடுத்த வகையில் தனித்துவத்துடன் திகழ்கிறது சைமன் கே கிங்கின் பின்னணி இசை. ஆனால், பாடல்கள் அந்த அளவுக்கு கவரவில்லை.

ராசாமதியின் ஒளிப்பதிவும் பிரவீன்.கே.எல் படத்தொகுப்பும் திரையில் வெறுமையை உணரவைக்காமல் காக்கின்றன.

ஏற்கனவே வெற்றி பெற்ற படத்தை மறுஉருவாக்கம் செய்யும்போது, இயக்குனரின் சுமை மிக அதிகம். வெற்றி பெற்றால் கிடைக்கும் கிரெடிட் குறைவு என்பதைவிட, தோல்வியுற்றால் ஒட்டிக்கொள்ளும் கண்டனங்களின் எண்ணிக்கையே இதற்குக் காரணம்.

அந்த வகையில், பிரதீப் கிருஷ்ணமூர்த்தி ஒரு நல்ல த்ரில்லரை தமிழுக்கு தந்திருக்கிறார்.

சைத்தான், சத்யா ஆகிய முந்தைய படங்களில் அவருக்குக் கிடைக்காத கவனம், இப்படத்தில் அவருக்கு கிடைக்கக்கூடும். தமிழிலேயே நல்ல கதை, திரைக்கதையாசிரியர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டால், அவரிடம் இருந்து மேலும் சில நேர்த்தியான கமர்ஷியல் படைப்புகளை எதிர்பார்க்கலாம்.

வலுவான கதாபாத்திர வடிவமைப்பு, இழைகள் விடுபடாமல் கோர்க்கப்பட்ட காட்சிகள், குழப்பமில்லாத கதை சொல்லல், உளவியல் பூர்வமான மற்றும் வெகு இயல்பான வசனங்கள் ஆகியவற்றின் மூலமாக அழுத்தமான திரைக்கதையை தர முடியும். இளம் படைப்பாளிகள் புரிந்துகொள்ளும் வகையில், அதற்கொரு உதாரணமாகி இருக்கிறது ‘கபடதாரி’.

-உதய் பாடகலிங்கம்

02.02.2021 12 : 23 P.M

You might also like