தற்காலத்திற்கு மிகவும் பொருந்தும் எம்.ஜி.ஆர் பாடல்!

‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’, ‘ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை’, ‘ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா?‘ என்கின்ற மக்கள் திலகத்தின் பாடல்கள், வெளிவந்து சில காலம் பிடித்திருக்கலாம்.

ஆனால், அவை இன்றைய அரசியல் சூழ்நிலைக்கும் கனக்கச்சிதமாக பொருந்துகின்றன என்பதுதான் காலத்தை மீறிய ஆச்சர்யம்.

அப்படிப்பட்ட பாடல்களின் ஒன்றுதான் 1970-ல் வெளிவந்த ‘என் அண்ணன்’ படத்தில் இடம்பெற்ற மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக கவியரசர் கண்ணதாசன் எழுதி, டி.எம்.எஸ் பாடிய பாடலில்தான் எவ்வளவு அரசியல் அர்த்தம் பொதிந்த வரிகள்!

‘கடவுள் ஏன் கல்லானார், மனம் கல்லாய் போன மனிதர்களாலே’ என்று துவங்கும் கவியரசரின் பாடலுக்கு இடையே, இடம்பெற்றிருக்கும் சத்தான இந்த வரியைப் பாருங்கள்.

“இங்கு எல்லோருக்கும் நல்லவன் தன்னை இழந்தான்”.

திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு சூழலுக்காக கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் என்றாலும், எவ்வளவு ஜீவன் உள்ளவை இந்த வரிகள்.

இந்தப் பாடல் வரிகளுக்கு ஏற்ப, இன்றைய அரசியல் சூழலில், எல்லோருக்கும் நல்லவராக ஒருவர் இருந்துவிட முடியுமா?

இருந்தாலும் நல்லவராகவே தொடர்ந்து வாழ்ந்துவிடத்தான் முடியுமா?

நல்லவர்களை நல்லவர்களாக வாழ்வதற்கு இந்த சமூகம் அவ்வளவு சுலபத்தில் வழிவகுத்துக் கொடுக்குமா?

சில உதாரணங்களை வரிகளுக்கு ஏற்ப இங்கு சொல்லலாம்.

பொதுமக்களின் பார்வையில், நல்லவராகவே வாழ்ந்த மகாத்மா காந்திக்கு இந்த சமூகம் கொடுத்த எதிர்வினை என்ன என்பதை நாடறியும்.

மிகவும் எளிமையாக வாழ்ந்தவர் என்று பலராலும் பாராட்டு பெற்ற முன்னாள் அமைச்சரான கக்கன், தான் போட்டியிட்ட தொகுதியிலேயே தோற்க நேர்ந்திருக்கிறது.

1976-ல் பெரும் அரசியல் மாற்றம் நடந்த நிலையில், பெருந்தலைவரான காமராஜர் அவருடைய சொந்த தொகுதியான விருதுநகரிலியே அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மாணவரான வெ.சீனிவாசனிடம் தோற்றுப் போனார்.

அவ்வளவு ஏன், காஞ்சிபுரத்தில் தன் சொந்த தொகுதியில் போட்டியிட்ட அண்ணாவே தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது.

பழைய உதாரணங்களை விடுங்கள், மிகச் சமீபத்தில், மறைந்த பொதுவுடைமைக் கட்சித் தலைவரான ஆர்.நல்லகண்ணு மக்கள் மொழியில் சொன்னால், மிக நல்லவராக வாழ்ந்தாலும் அவர் இரண்டு முறை தேர்தல் போட்டியிட்டபோது, இரண்டு முறையும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.

தனக்கேற்பட்ட தோல்வியைப் பற்றி ஆர்.நல்லகண்ணு குறிப்பிடும்போது தன்னை தோற்கடித்த மக்களை சிறிதும் குற்றம் சாட்ட விரும்பவில்லை.

மிக எளிமையாக இப்படிச் சொன்னார், “வாக்காளர்கள் எதிர்பார்க்கிறபடி நான் இல்லை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்”.

இது மாதிரி பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

கூடங்குளம் பிரச்சனைக்காக அவர்களுடன் தங்கிப் போராடியவரான சுப.உதயக்குமார் தேர்தலில் போட்டியிட்டபோது, அவரால் வெற்றி பெற முடியவில்லை.

அதே சமயத்தில், மக்கள் நலனுக்கு எதிராக நின்றவர்கள், வன்முறையைக் கையாண்டவர்கள், மதுபானம் தயாரிக்க துணை நின்றவர்கள், வெளிப்படையாகக் குற்றவாளி பட்டியலில் இடம்பெற்று பெருமை சேர்த்தவர்கள்,

அநாகரீகமாக பேசுவதையே இயல்பாக கொண்டிருப்பவர்கள், இன்றைய வாக்குறுதியை நாளைக்கே மறந்துபோகும் அபூர்வ குணம் கொண்டவர்கள் என்று பல குணாம்சங்களைக் கொண்டவர்களெல்லாம் தேர்தலில் போட்டியிடும்போது,

கடைசி நேர இன்ஸ்டண்ட் கவனிப்பின் பலனாக அவர்களெல்லாம் வெற்றி வேட்பாளர்களாகி சட்டமன்றத்திற்குள்ளோ, நாடாளுமன்றத்திற்குள்ளோ சுலபமாக நுழைந்து விடுகிறார்கள்.

எந்த அளவுகோலின்படி அவர்களை தங்களுடைய பிரதிநிதிகளாக மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்? அதற்கான அளவுகோல்தான் என்ன?

இதில், நல்லவர் என்ற சொல்லுக்கு இங்கிருக்கும் அசலான அர்த்தம்தான் என்ன?

கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரி இப்போதும் இத்தகைய நல்ல எதிர்வினைகளை உருவாக்கிக் கொண்டுதான் இருக்கிறது.

வீரியமான அந்த வரி நிகழ்காலத்திற்கு பொருந்துவதைப் பரிபூரணமாக உணர முடியும்.

– துரைசாமி

You might also like