நம்மைக் கடந்து போகும் பட்ஜெட்!

அண்மையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் அதே விமர்சனங்கள் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கும் எதிராக முன்வைக்கப்படுகின்றன.

இரண்டிலும் சொல்லப்படுவது என்ன?

சராசரி மக்களைக் காட்டிலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிகமாகச் சலுகைகள் வழங்கப்படுகின்றன என்பதே!

அரசுடமையாக்கப்பட்ட நிறுவனங்களையும் தனியாரிடம் ஒப்படைக்க அரசு முயல்வதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள்.

ஏற்கனவே கொரோனா காலகட்டத்தில் வேலை வாய்ப்புகளை இழந்த கோடிக்கணக்கானவர்களின் வாழ்வாரத்திற்கு என்ன வழி? பட்ஜெட்டில் புலப்படவில்லை.

வருமானத்தை இழந்து மூடப்பட்ட சிறு, குறு தொழில்களை நடத்தி வந்தவர்களின் கதி என்ன? 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகச் சொன்னாலும், அதனால் உடனடியாக இவர்களின் வாழ்வில் என்ன மாற்றம் வரும்? தெரியவில்லை.

கொரானோ தடுப்பூசிக்கு மட்டும் 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். எப்படி இது நடைமுறைக்கு வரும் என்பது தெரியவில்லை.

அடுத்து சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் மாநிலங்களில் சிறப்பு நிதி உதவி அளிக்கப்பட்டிருக்கிறது. சில வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

அதே சமயத்தில் தமிழகத்தின் ஒரு பகுதி மக்கள் மன்றாடி “வேண்டாம்” என்று கேட்டுக் கொண்ட எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு விரைவில், அதுவும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் டெண்டர் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அவ்வளவு அவசரகதியில் இதை அறிவிக்க என்ன காரணம் என்பது சிறு குழந்தைக்கும் விளங்கிவிடும்.

பட்ஜெட் பலரையும் கடந்து போகிறது பெரு நதியைப் போல.

சிலர் மட்டுமே கரையேறுவார்கள். பலர் தவித்துப்போவார்கள்.

இம்முறையும் அது தான் நடந்திருக்கிறது.

-யூகி

02.02.2021   03 : 36 P.M

You might also like