மத்திய பட்ஜெட்: யாருக்கு பலன், யாருக்கு இழப்பு!

2021-22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பாராட்டுக்களும், விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. அதில், குறிப்பிடத்தக்கவர்களின் கருத்துக்கள் இங்கே.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்:

பட்ஜெட் தயாரிப்பில், ஏழை மக்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்தும் கேட்கப்படவில்லை. கல்வி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநில அரசுகளாலேயே நிறைவேற்ற முடியும். எனவே குடிநீர் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டியதில்லை. கடந்த நிதியாண்டில் மத்திய அரசின் வருவாயில் ரூ.1,60,000 கோடி இழப்பு ஏற்பட்டது பற்றிய தகவல் ஏன் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

ராகுல் காந்தி, காங்கிரஸ்:

‘மக்கள் கையில் பணம் வைத்திருப்பதை மறுந்துவிட வேண்டியதுதான். மோடி அரசு அவருடைய முதலாளித்துவ நண்பர்களுக்கு இந்தியாவின் சொத்தை ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது.

தமிழக முதல்வர் பழனிசாமி:

மத்திய பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க பல முயற்சிகளும், தமிழகத்திற்கு உகந்த பல அறிவிப்புகளும் உள்ளன. மதுரை கொல்லம், சித்தூர் – தச்சூர் சாலைத் திட்டங்கள் தமிகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். சாலை திட்டங்களை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசு ஒத்துழைப்பு நல்கும்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:  

இந்த ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் நிதிநிலை அறிக்கை வளர்ச்சியை இலக்காக கொண்டிருப்பது மகிழ்ச்சியளித்தாலும், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள் கட்டுப்படுத்தப்படாதது மக்களுக்கு மிகவும் கவலையளிக்கிறது.

ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ:

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட்டில் பொருளாதார மீட்சிக்கான வழி வகையை உருவாக்கி இருப்பதற்கான அறிகுறி இல்லை. தமிழக மக்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலையை நடப்பு நிதியாண்டில் தொடருவோம் என்று அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. தமிழக ரெயில்வே திட்டங்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் தருகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்: 

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது மட்டுமின்றி, பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளையும் விற்கப்போவதாக நிதியமைச்சர் இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு செய்துள்ளார். பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட நாட்டின் வளங்கள் அனைத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரைவார்த்து கொடுக்கும் மக்கள் விரோத பட்ஜெட் இது.

கே.பாலகிருஷ்ணன், சி.பி.எம்:

இந்த பட்ஜெட் தமிழக மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் பெரும் ஏமாற்றம் அளிப்பதோடு வெறும் வார்த்தைகளின் தொகுப்பாக மட்டுமே உள்ளது. உணவு, வேலை பாதுகாப்பை முன்னிறுத்தி, கார்ப்பரேட் ஆதரவு பட்ஜெட்டுக்கு எதிரான போராட்டங்களை பொதுமக்கள் நடத்திட வேண்டும்.

ஆர்.முத்தரசன், சி.பி.ஐ:

‘சுயசார்பு இந்தியா’ என்ற பெருமுழக்கம் செய்து, அன்னிய முதலீட்டுக்கு பட்டுக்கம்பளம் விரிக்கும் வஞ்சக எண்ணம் கொண்டிருக்கும் நிதிநிலை அறிக்கை, நாட்டை அன்னிய முதலீட்டுக்கு அடகுவைத்து அடிமைப்படுத்தும்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:

சாமானிய மக்கள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களுக்கும், தொழில்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் நம்பிக்கை கொடுக்கும் வகையில் கடன் வசதி வரிச் சலுகைகள், நிதி ஒதுக்கீடு, திட்டங்கள் என பல்வேறு நல்ல அம்சங்கள் நிறைந்த பட்ஜெட் என்பதால், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற சிறந்த பட்ஜெட் ஆகும்.

02.02.2021      01 : 45 P.M.

You might also like