வரலாற்றின் ரத்தக்கறை படிந்த பக்கங்கள்!
தேர்தல் களம்: அசாம்-3
அசாமில் உள்ளூர் பிரச்சினைகள்தாம் நெடுங்காலமாக முதல் கவனத்தைப் பெற்றன. இதற்குக் காரணம், மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டதுதான். இந்தப் பிரச்சினைகளின் மையப் புள்ளி அண்டை நாடுகளிலிருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும், மக்கள் பெரும் எண்ணிக்கையில் அசாமினுள் வந்ததுதான்.
இவர்களால் உள்ளூர்வாசிகளின் வேலைவாய்ப்புகள், கலாச்சாரம் ஆகியனவற்றுக்கு ஆபத்து வந்துவிடும் என்று அசாம் பூர்வ குடிமக்கள் நம்பினார்கள்.
முதலில் இந்தக் காரணத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டது, அரசியல் சார்புள்ள எந்த இயக்கமோ, கட்சியோ அல்ல. மாணவர்களின் அமைப்பான அனைத்து அசாம் மாணவர் கூட்டமைப்புதான்.
இவர்கள் முதலில் கையிலெடுத்தது அகதிகள் ஊடுருவல் பிரச்சினையை. பக்கத்து நாடான பங்களாதேஷிலிருந்து 1971ஆம் ஆண்டு போரின்போது பல்லாயிரக்கணக்கில் வந்த அகதிகள் இங்கேயே தங்கிவிட்டனர். இது உள்ளூர் மக்களின் கலாச்சாரம், வாழ்க்கை நிலை ஆகியவற்றைப் பெரிதும் பாதித்தது. அது மட்டுமின்றி அசாமில் பல பகுதிகளின் தோற்றத்தையே மாற்றியது.
இந்த நிலை மாறும் என்று மக்கள் பல வருடங்கள் பொறுமையாக இருந்தனர். ஆனால் நிலைமை மோசமானதே தவிர முன்னேற்றம் ஏதுமில்லை.
1979ஆம் ஆண்டில் அனைத்து அசாம் மாணவர் கூட்டமைப்பு சாத்வீகமான முறையில் போராட்டங்களைத் துவக்கியது. இதற்கு முன்பாகவே கோரிக்கைகள், சிறு கூட்டங்கள் என்ற அளவில் அந்த இயக்கம் போராடி வந்தாலும், முழுமையான மக்கள் இயக்கமாக உருவெடுத்தது 1979இல்தான்.
அவர்கள் முன் வைத்த முக்கியமான கோரிக்கைகள், அகதிகளாக வந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும், அப்படி நீக்கப்பட்ட அனைவரையும் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே அனுப்ப வேண்டும் என்பதாக இருந்தது.
ஆனால் அதை கண்டுகொள்ளப்படாமல் காங்கிரஸ் அரசு தேர்தல்களை நடத்தி ஆட்சியைப் பிடித்தது. 1979 லிருந்து 1985 வரை நடந்த இந்தப் போராட்டங்களில் ஏறக்குறைய ஆயிரம் பேர் இறந்தனர்.
1983ஆம் ஆண்டு சட்டத்துக்குப் புறம்பாக ஊடுருவிய அகதிகளை வெளியே அனுப்ப சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, 1971-லிருந்து வந்தவர்களை தீர்ப்பாய முடிவின் அடிப்படையில் வெளியேற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த முடிவு நடைமுறைப் படுத்தப்படவில்லை.

அன்றைய காலகட்டத்தில் (1983), அசாமினுள் சுமார் நான்கு மில்லியன் பங்களாதேஷ் நாட்டவர் இருந்தனர். அவர்களுக்கு குடியுரிமை வழங்கி, அதற்குப் பதிலாக அவர்களின் ஓட்டுகளைப் பெற்று தேர்தலில் ஜெயிப்பது என்று இந்திரா காந்தி அரசு முடிவெடுத்தது. இதையடுத்து அசாமில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
கொலைவெறித் தாக்குதல்
அதே ஆண்டு பிப்ரவரி மாதத்தில், அசாமின் எதிர்காலத்தையே மாற்றிய ஒரு சம்பவம் அரங்கேறியது. அசாமிலுள்ள நாகுவான் மாவட்டத்தின் பதினான்கு கிராமங்களில் பல்லாயிரக்காணக்கான பங்களாதேஷிகள் தங்கியிருந்தனர். அவர்கள் மேல் உள்ளூர்காரர்கள் ஒரு பெரும் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் ஆயிரக்கணக்கான பங்களாதேஷ் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அரசின் கணக்கு 2,191 பேர். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு செய்தியாளர்களின் கணக்குப்படி இறந்தவர்கள் எண்ணிகை பத்தாயிரத்துக்கும் மேல்.
தேசத்தையே உலுக்கிய இந்தப் படுகொலை சம்பவத்திற்குப் பிறகு தேர்தல்கள் தள்ளிப் போடப்படலாம் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனாலும், ராணுவத்தினர், துணை ராணுவத்தினரை ஆயிரக்கணக்கில் கொண்டுவந்து அவர்களின் பாதுகாப்பில் தேர்தல் நடத்தப்பட்டது.
அந்தச் சமயத்தில் 400 கம்பெனி சிஆர்பிஎப் படையினரும், 11 பிரிகேட் ராணுவப் படையினரும் கொண்டு வரப்பட்டனர். இப்படியாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆட்சியை எப்படி ஒழுங்காக நடத்த முடியும்? அதே காலகட்டத்தில் இந்தியாவில் மிகப் பெரிய அதிர்ச்சிகரமான சம்பவமாக, பிரதமர் இந்திரா காந்தி அவரது பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
நாடு முழுதும் அமைதியற்ற சூழ்நிலை உருவானது. வட மாநிலங்களில் பெரும் கலவரங்கள் வெடித்தன. புதிய பிரதமாராக இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தி பதவியேற்றுக் கொண்டார்.
சமரச உடன்படிக்கை
அசாமில் இரண்டு ஆண்டுகால ஆட்சி பெரும் குழப்பத்திலும் அமைதியில்லாத சூழலிலும் கழிந்தது. 1985ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15ஆம் தேதி ராஜீவ் காந்தி முன்னிலையில் அசாம் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. அசாம் கண பரிஷத் பெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. நாட்டிலேயே இளம் முதல்வர் என்ற பெருமையுடன் பிரஃபுல்ல குமார் மகந்தா பதவி ஏற்றார்.
அவர்களது அனுபவமின்மை, பிற கட்சிகளின் ஒத்துழைப்பின்மை, ஆட்சி அதிகாரத்திற்குப் பழகாததால் நேர்ந்த குளறுபடிகள் போன்றவை பெரும் குழப்பமான சூழலை ஏற்படுத்தின. இதைப் பயன்படுத்திக் கொண்டு, இனவாதக் குழுக்கள், மதவாதக் குழுக்கள் வளர ஆரம்பித்தன.
இந்தக் காரணங்களால், கலவரங்கள், அமைதியில்லாத சூழல், பொருளாதாரப் பிரச்சினைகளும் சேர்ந்து கொண்ட நிலையை ஆளும் அசாம் கண பரிஷத்தால் சமாளிக்க முடியாமல் போனது.
இதெல்லாம் போதாதென்று அமைச்சரவையில் இருந்த சிலர், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் பல ஊழல் புகார்களில் சிக்கியது நிலைமையை மேலும் மோசமாக்கியது.

இந்தக் காரணங்களைக் குறிப்பிட்டுக் காங்கிரஸ் அரசு, அசாம் கண பரிஷத் ஆட்சியை 1991 பிற்பகுதியில் டிஸ்மிஸ் செய்தது. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. இதற்குக் காரணமும் அசாம் கண பரிஷத் என்றே சொல்லலாம். தேர்தலுக்கு முன்பாக அந்தக் கட்சி இரண்டாக உடைந்தது.
உல்ஃபாவின் தோற்றம்
இதற்கான இன்னொரு பெரும்காரணம், அசாம் கண பரிஷத் தோன்றிய சமகாலத்தில் உருவான உல்ஃபா இயக்கம்தான். ஆரம்பிக்கும்போதே தன்னை ஆயுதப் புரட்சி இயக்கமாக சொல்லிக் கொண்டது.
அது மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் செயல்பட்டுவந்த மற்ற தீவிரவாதக் குழுக்களோடு சேர்ந்து செயல்பட்டது. அது போதாதென்று அண்டை நாடான மியான்மரில் செயல்பட்டுவந்த கசின் சுதந்திர ராணுவப்படை இயக்கத்துடனும் இணைந்து பல தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வந்தது.
இதை மாநில அரசுகளால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. இத்தகைய தீவிரவாதச் செயல்களால், பல கோடிக்கணக்கான பொதுச் சொத்து நாசமானது. கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் இறந்து போனார்கள். உச்சக்கட்டமாக இந்திய ராணுவம் அழைக்கப்பட்டது. இதற்கும் ஒரு காரணம் இருந்தது என்று குற்றம்சாட்டப்பட்டது.
உள்ளூர்ப் பிரமுகர்கள், எதிர்ப்பாளர்கள் போன்றவர்களைக் கொன்றபோது ராணுவம் அழைக்கப்படவில்லை. உலகக் கோடீஸ்வர இந்தியர்களில் ஒருவரான லண்டன்வாசி, லார்ட் ஸ்வராஜ்பாலின் சகோதரர், சுரேந்திரபால், 1990, மே மாதம் உல்ஃபா தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்.
அதன் பிறகுதான் மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு ராணுவத்தை அழைத்தது. இதையடுத்த பல நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அசாம் கண பரிஷத் ஆட்சி டிஸ்மிஸ் ஆனதும் நிகழ்ந்தது.
1991இல் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் வென்றது. ஆனால் அதற்கடுத்து வந்த 1996 தேர்தல்களில் அசாம் கண பரிஷத், சிபிஐ, சிபிஎம்முடன் கூட்டணி அமைத்து தேர்தல்களைச் சந்தித்து மறுபடியும் வெற்றி பெற்றது.
இந்த முறையும் அந்தக் கட்சியால் சரியான ஆட்சியைத் தர முடியவில்லை. கட்சிக்குள் இருந்த குழப்பம் ஆட்சியில் எதிரொலித்தது. கட்சி பல்வேறு பிரிவுகளாகச் செயல்பட்டது. இதன் காரணமாக மக்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேர்ந்தது.

ஊழல், அனுபவமின்மை, உட்கட்சிப் பூசல், குழுக்களாக செயல்பட்டது ஆகியவற்றால் 2001-ல் ஆட்சியை இழந்தது. அப்போது ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் 2016 வரை தொடர்ந்து மூன்று முறை ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது.
பாஜகவின் பிரவேசம்
தொண்ணூறுகளின் பிற்பகுதியில்தான் பாஜகவால் அசாமில் தனது இருப்பை வெளிப்படுத்த முடிந்தது. ஆனால் அதற்கு முன்பிருந்தே நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு விதங்களில் அசாம் பிரச்சினைகளை முன்னிறுத்திச் செயல்பட்டதன் மூலம் தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. அதைச் செய்த விதம் சுவராஸ்யமானது. அடிப்படையில் மக்களோடு கலந்து தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. இதைத் தவிர பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.
அசாமில் பாஜக வளர்ந்த கதையையும் இன்றைய நிலையையும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
(அசாம் பயணம் தொடரும்)
- தனஞ்செயன்
01.02.2021 10 : 30 A.M