வி.எஸ்.பாபு மறைவும் அதன் தாக்கங்களும்!

தமிழகத்தில் ஒரு எம்எல்ஏவின் மரணம் இதற்கு முன் இந்த அளவுக்கு கவனிக்கப்பட்டிருக்கிறதா என்று பார்த்தால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
 
அந்த அளவுக்கு கவனிப்புக்கு உள்ளாகி இருக்கிறது, கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உயிரிழப்பு.
 
வி.எஸ்.பாபு சென்னை, தனியார் மருத்துவமனையில் கிட்டத்தட்ட 73 நாட்கள் சிகிச்சையில் இருந்தபோது, முதல்வர் விஜய், அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் சென்று பார்த்து நலம் விசாரித்து, கூடுதலான தொகை செலவழிக்கப்பட்டும் அவரைக் காப்பாற்ற முடியாத நிலையில் அவர் உயிரிழந்திருக்கிறார்.
 
ஆனால், அவர் என்றைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரோ அன்றிலிருந்தே அவரைப் பற்றிய பல்வேறு விதமான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் எழுந்து கொண்டே இருந்தன.
 
இதற்கு முன்னால் எம்.ஜி.ஆர். சிகிச்சை எடுத்தபோதும், ஜெயலலிதா சிகிச்சை எடுத்தபோதும் முன்வைக்கப்பட்ட அதே விதமான எதிர்வினைகள் இப்போதும் முன்வைக்கப்பட்டன.
 
அதாவது மருத்துவமனையில் அவர் சேர்ந்த சில நாட்களிலேயே அவர் உயிரிழந்துவிட்டார் என்றும், சில காரணங்களால் அவருடைய உயிரிழப்பு வெளியில் அறிவிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்ததாகவும் சில செய்திகள் கசிந்தன.
 
இதைவிட மேலாக, இன்னொரு தரப்பில், வி.எஸ்.பாபு உடல்நலம் குறைவதற்காக செய்வினை வைக்கப்பட்டிருப்பதாகவும், சிலர் ஆருடங்களைப் போல சொல்லி வந்தார்கள்.
 
வி.எஸ்.பாபு இறப்பதற்கு முன்பே இந்த தொகுதியில் மறுபடியும் திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் வேட்பாளராக நின்று வெற்றி பெறுவார் என்ற கருத்தெல்லாம் கூட பரப்பப்பட்டன.
 
இப்படிப்பட்ட நிலையில்தான் வி.எஸ்.பாபு உயிரிழந்ததும், உடனே சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார் முதல்வர் விஜய்.

அடுத்த நாள், வி.எஸ்.பாபுவின் உடலைத் தோளில் சுமந்து குறிப்பிட்ட தூரம் வரை வந்து, வேனில் ஏற்றி 2 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மயானத்திற்கு நடந்தே  வந்தது கொளத்தூர் மக்களை பெரும் வியப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.
 
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மயானத்தில் அவருக்கான இறுதிச் சடங்குகள் நடைபெற்றபோதும், முதல்வர், அமைச்சர்கள், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ என எல்லோரும் ஒரு சேர இருந்தது பலதரப்பட்ட விமர்சனங்கள் வருவதற்கும் வழிவகுத்திருக்கிறது.
 
கொளத்தூர் தொகுதி மக்கள் பார்வையில் இது பெரும் பேசுபொருளாகி இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.
 
அதிமுக தரப்பில், முதல்வர் விஜய் இப்போதே இடைத் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிவிட்டார் என்கின்ற விமர்சனங்களை சொன்னாலும் கூட, கொளத்தூர் மக்களைப் பொறுத்தவரை விஜய்யின் உணர்வு அப்படிப்பட்ட அளவில் இல்லை என்பதையும் சொல்ல வேண்டும்.
 
கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த ஸ்டாலினுடைய பிரதிநிதியாக இதே தொகுதியில் செயல்பட்டவரான முன்னாள் அமைச்சர் சேகர் பாபு தற்போது வி.எஸ்.பாபு வீட்டுக்கு வந்து அவரும் அஞ்சலி செய்திருக்கிறார்.
 
திமுகவில் அவர் இருந்ததை நினைவு கூர்ந்து அவரும் பேசியிருக்கிறார்.
 
இதிலிருந்து பார்த்தால் தவெக தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறது என்கின்ற விமர்சனத்தை முன்வைக்கிறவர்கள், அதே மாதிரியான விமர்சனத்தை திமுக மீதும் வைக்கிற அளவுக்கு சூழ்நிலை இருக்கிறது.
 
ஒருவேளை பலரும் எதிர்பார்த்த மாதிரியே மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டால் நிலைமை எம்மாதிரி இருக்கும்?
 
கடந்த முறை சுமார் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த மு.க.ஸ்டாலின், மறுபடியும் இதே தொகுதியில் வேட்பாளராக நின்று பிரச்சாரம் செய்து எப்படி வெற்று பெறுவார் என்பது பொதுவான கேள்வியாக இருக்கிறது.
 
இதையொட்டி, தவெக தரப்பில் இதே கொளத்தூர் தொகுதி மக்களை திமுக சார்பில் எப்படி எல்லாம் வசைபாடினார்கள் என்கின்ற காட்சிப் பதிவுகள் இரண்டு நாட்களாக இந்த தொகுதி முழுக்க அலையடித்துக் கொண்டிருக்கின்றன.
 
சேகர்பாபு, நடிகர் சத்யராஜ் இன்னும் பல பிரமுகர்கள் இதே கொளத்தூர் மக்கள் குறித்து என்னென்னெல்லாம் பேசினார்கள் என்பதெல்லாம் வெளிவருவது திமுகவுக்கு ஒரு விதத்தில் எதிர் பிரச்சாரமாகவே அமையும்.
 
வி.எஸ்.பாபுவின் மரணத்திற்கு பிறகு ஏற்கனவே ஐந்து சட்டமன்றத் தொகுதி இடத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படாத நிலையில் கொளத்தூர் தொகுதிக்கும் சேர்த்து இனி அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
 
அப்படி ஒரு வாய்ப்பு வரும் பட்சத்தில் ஸ்டாலின் இதே தொகுதியில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து மிக வலுவான ஒரு வேட்பாளரை தவெக முன்னிறுத்தும் என்பது தொகுதி வாக்காளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
 
தற்போது மரணம் ஏற்படுத்திய அதிர்வுகளும் அது தொடர்பான அனுதாபங்களும் தொகுதி மக்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருக்கும்போது, இதையெல்லாம் புறந்தள்ளி மீண்டும் திமுகவுக்கு எந்த அளவிற்கு வாய்ப்பிருக்கும் என்பது பற்றின ஒரு சந்தேகமும் இந்த தொகுதி மத்தியில் கேட்க முடிகிறது.
 
எது எப்படியோ, ஒரு சட்டமன்றத் தொகுதி வேட்பாளரின் மரணம் பல்வேறு தொடர் கேள்விகளுக்கு துவக்கமாக அமைந்திருக்கிறது.
 
தேர்தல் ஆணையம் இதில் எப்போது, என்ன, முடிவெடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

– யூகி  

You might also like