மக்களை நம்பிச் செல்லுங்கள்!

மதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு வணக்கம்.

இந்தக் கடிதத்தை தமிழ்நாட்டுக் குடிமகனாக வாக்களிக்கும் உரிமை பெற்ற ஒரு வாக்காளனாக உங்களுக்கு எழுதுகிறேன்.

“வெளித் தீனி கிடைச்ச எந்த ஆடும் ஓட முயற்சிச்சுக்கிட்டே இருக்கும், அதை ரொம்ப நாளைக்குக் கட்டிப் போட முடியாது” என்று நமது கிராமப்புறங்களில் ஒரு சொல் வழக்கு உண்டு.

தற்போது அதை நிரூபிக்கிற விதத்தில் உங்களது கட்சி எம்.எல்.ஏ.க்களை அழைத்து தனித்து அவர்களிடம் பேசும் அளவுக்கு ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதாவது உங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களிடமே ஏதோ ஒரு விதத்தில் மற்ற கட்சிகள் சார்பில் பேசப்பட்டு, அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கசிந்து கொண்டிருந்த நேரத்தில்தான் நீங்கள் நேரடியாக அவர்களை அழைத்துப் பேசி இருக்கிறீர்கள்.

பேசிய விவரங்கள் முழுக்க வெளிவராவிட்டாலும், பல்வேறு ஊடகங்களில் பல்வேறு விதமான செய்திகளும் வதந்திகளும் உலா வந்து கொண்டிருக்கின்றன.

மேலே சொன்ன கிராமத்துச் சொல் வழக்கப்படி பார்த்தால், வெளியே ஏதோ ஒரு விலை பேசப்பட்டு, கட்சியை விட்டுப் போகத் தயாரான எம்.எல்.ஏ.க்களை எவ்வளவு காலத்திற்கு உங்கள் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்க முடியும்?

உடனடியாக அவர்கள் அந்த முயற்சியை செய்யாவிட்டாலும் கூட, அதற்கான தூண்டுதல்கள் தொடர்ந்து செய்யப்படும் பட்சத்தில், இந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் உங்கள் கட்சி தாண்டி வேறு முயற்சிகளை எடுக்க முனைய மாட்டார்கள் என்பதை நிச்சயப்படுத்த முடியுமா?

தமிழகத்தில் 1967-ம் ஆண்டு பெரும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அதுவரை ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் தோல்வி அடைந்து, திமுக வெற்றி பெறும் சூழ்நிலை உருவானபோது, அப்போது இருந்த தலைவர்கள் அதை எப்படி எடுத்து கொண்டார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

திமுக வெற்றி அடைந்தபோதும் விருதுநகரில் சீனிவாசன் என்ற மாணவரிடம் காமராஜர் தோற்றுப் போனதற்காக வருத்தப்பட்டவர் அறிஞர் அண்ணா.

அதைப் போலவே விருதுநகரில் தான் தோற்றபோதும் அந்த தோல்வியை மிக எளிதாக எடுத்துக்கொண்டு ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருக்கிற திமுகவிற்கு போதுமான கால அவகாசத்தை அளிக்க வேண்டும் என்கிற விதத்தில்தான் காமராஜரின் அன்றைய விளக்கம் அமைந்திருந்தது.

இத்தகைய ஒரு முதிர்ச்சி அன்றைக்கு இருந்த தலைவரிடம் இருந்தது. இன்று அத்தகைய முதிர்ச்சி எந்த அளவுக்கு இருக்கிறது என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

தற்போது தவெக அரசின் மீது பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே இருக்கின்றன.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பற்றி பெருமளவில் கேள்வி எழுப்பப்பட்டு, அது ஆளுநரிடம் அளிக்கப்பட்டு, அது மத்திய உள்துறை அமைச்சர் வரை சென்றதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்களும், சிறுமிகள் காணாமல் போவது தொடர்பான நிகழ்வுகளும், பாலியல் துன்புறுத்தல்களும் அதிகப்பட்டிருப்பதாக ஒரு பட்டியலையும் எதிர்க்கட்சிகள் தயார் செய்து அதை அறிக்கைகள் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்; தொலைக்காட்சிகளிலும் அதைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய குற்றச் சம்பவம் கடந்த அதிமுக ஆட்சியிலோ, திமுக ஆட்சியிலோ அதிகளவில் இருக்கதான் செய்தன.

ஆனால், அதை கண்காணித்து, உரிய முறையில் விமர்சனம் செய்யும் ஊடகங்கள் இப்போதிருக்கும் அளவுக்கு அப்போது இல்லை.

ஆனால், அதை ஒப்பிட்டுப் பார்க்கும் பார்வையில்லாமல் தற்போதும் ஒட்டுமொத்த பழியையும் தவெக அரசின் மீது போடுவது நடந்து கொண்டிருக்கிறது.

தவெக அரசு செய்யும் ஒவ்வொரு செயல்பாட்டையும் கடுமையான சொற்களால் விமர்சிப்பது நடந்து கொண்டிருக்கிறது.

தவெக அரசு மக்கள் பயன்பாட்டிற்கான சில செயல்பாடுகளைச் செய்யும்போது சென்ற ஆட்சியின் தொடர்ச்சியாகத்தான் இதைச் செய்கிறார்கள் என்கின்ற அளவில் விமர்சனம் வருகிறது.

ஆனால், சற்று பிரச்சனை ஏற்பட்டாலோ அல்லது வேறு சில சிக்கல்கள் இருந்தாலோ இத்தகைய விமர்சனங்கள் வெளிவருவதில்லை.

அடுத்தது, உங்கள் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிற, இன்றைக்கு தவெக கூட்டணியில் இருக்கிற கட்சிகள் எந்த அளவுக்கு உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றன?

காங்கிரஸாக இருந்தாலும் விடுதலைச் சிறுத்தைகளாக இருந்தாலும் பொதுவுடமைக் கட்சிகளாக இருந்தாலும், தொடர்ந்து, தவெக அரசைக் குறித்த கூர்மையான விமர்சனங்களை வெளிப்படுத்தத் தவறவில்லை.

தங்களது ஆதரவு இருப்பது குறித்தும் அடிக்கடி தடுமாறிய நிலையிலும் அவர்கள் பேசுவதை ஊடகங்கள் வழியே பார்க்க முடிகிறது.

ஆனால், இப்படிப்பட்டவர்கள் தான் இன்றைக்கு சிறுபான்மை எண்ணிக்கையில் அமைந்த பெரும்பான்மை இல்லாத அரசை தாங்கிப் பிடிக்கக் கூடிய கட்சிகளாக இருக்கின்றன.

இனி ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்தால் உங்களுக்கு கூடுதலான எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றாலும், இந்த எண்ணிக்கையை உருக்குலைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும் என்கிற அளவுக்குதான் இங்குள்ள சூழல் இருக்கிறது.

இந்த நிலையில், தவெக ஆட்சி அமைத்தால் ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று நீங்கள் அறிவித்தபடி, தற்போது முதற்கட்டமாக முன்னாள் கல்வி அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

பல முன்னாள் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் வலுத்து, நீதிமன்ற ஆதாரத்துடன் வழக்குகள் தொடரப்பட காத்திருக்கின்றன.

ஆனால், இப்படி ஒரு நெருக்கடி திமுகவுக்கு உருவாவதைத் தடுக்கும் விதத்தில் தற்போது நேரடியான தவெக ஆட்சியை கலைக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தவெகவுக்குள் தற்போது வெவ்வேறு பொறுப்புகளில் இருப்பவர்களோ அல்லது காவல்துறை தரப்பிலோ தொடர்ந்து இந்த ஆட்சி நீடிப்பதற்கான பல்வேறு உத்திகளை அவரவர் எண்ணப்படி சொல்லலாம்.

ஆனால், அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தொலைக்காட்சி எடுத்த உங்கள் ஆட்சியைப் பற்றிய மதிப்பீடு தொடர்பான ஒரு சர்வேயின்படி, மக்களில் 20% பேர் மட்டுமே தவெக அரசு மீதான அதிருப்தியில் இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.

அதன்படி பார்த்தால் அதிருப்தியின் அளவை விட ஆதரவு சதவீதம் அதிகமாக இருப்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

இந்த நிலையில், தடுமாற்றத்தில் இருக்கிற கூட்டணிக் கட்சிகளையோ அல்லது வேலி தாண்டி போகிற மனநிலையில் இருக்கிற எம்.எல்.ஏ.க்களையோ முழுக்க நம்பி ஒரு ஆட்சியை நடத்துவதைவிட நீங்களே இந்த ஆட்சியை கலைத்துவிட்டு மக்களை சந்திப்பது பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

இதற்கு ஒரு முன்னுதாரணமாக 1980 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் எம்.ஜி.ஆர். தலைமையிலான ஆட்சி கலைக்கப்படுகிறது. ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு அவர் மக்களிடம் நீதி கேட்டுச் செல்கிறார்.

அதைத் தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்த பிறகு, ஜூன் மாதத்தில் நடந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கிறார் என்கின்ற வரலாற்றை நீங்கள் கவனிக்க வேண்டி இருக்கிறது.

அதாவது மற்ற ஆதரவுக் கட்சிகளையோ அல்லது யாரையும் நம்புவதைவிட, நேரடியாக அடிக்கடி அண்ணா சொல்வதாக நீங்கள் குறிப்பிடுகிற ‘மக்களிடம் செல்லுங்கள்’ என்கின்ற பிரபலமான சொல்லாக்கத்தையே இப்போதும் வழிமொழிய விரும்புகிறோம்.

ஏற்கனவே கடந்த ஆட்சியில் உங்களது தேர்தல் பிரச்சாரப் பயணத்திற்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டன; கரூர் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன.

இதற்கிடையில் நீங்கள் குறைந்த அளவு பயணம் செய்துதான் சென்ற தடவை பெரும் எண்ணிக்கையை பெற்றீர்கள்.

தற்போது ஆட்சியைக் கலைக்கிற சூழ்நிலையை நீங்களே ஏற்படுத்தி, அதை வெளிப்படையாக அறிவித்து, மக்களை நேரடியாக சந்தித்து பயணம் செய்து, உங்களுடைய நிலையை மக்களிடம் தெளிவுபடுத்தினால், பலவிதமான சீர்கேடுகளை நீங்கள் களைய முடியும். கட்சியையும் ஒழுங்கப்படுத்த முடியும்.

எம்.எல்.ஏக்களாக தகுதி படைத்தவர்களை உரிய முறையில் தேர்வு செய்ய முடியும்.

பல்வேறு விதத்தில் அதிருப்திக்கு உள்ளான எம்.எல்.ஏ.க்கள் தொடராமல் இருக்கவும் இது வழிவகை செய்யும்.

உரிய முறையில் செயல்படும் அதிகாரிகள், குறைந்தபட்ச நேர்மையுடன் செயல்படும் எம்எல்ஏக்களை நீங்கள் தேர்வு செய்யவும் இந்தக் கால இடைவெளி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அப்படி மக்களிடம் சந்தித்து நீங்கள் ஆதரவு கோரும் பட்சத்தில் தமிழகத்தில் அதற்கான ஆதரவு கணிசமாக கிடைத்து, பெரும்பான்மை எண்ணிக்கையை அடங்கிய உறுதியான ஆட்சியை உங்களால் அமைக்க முடியும்.

அதற்கு நீங்கள் முதற்காரியமாக மக்களிடம் செல்ல வேண்டும்; அதற்கு மக்களை நம்ப வேண்டும்.

அப்படி நம்பும் பட்சத்தில் மக்கள் ஆதரவு பெருமளவில் கிடைத்து மீண்டும் உறுதியான அளவில் தவெக ஆட்சி நீங்கள் எதிர்பார்த்தபடியே சற்று களையெடுக்கப்பட்ட நிலையில் அமைவதற்கான வாய்ப்பு கனிந்திருக்கிறது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது உங்களுடைய முடிவை பொறுத்த விஷயம்.

இதை, எளிமையான வேண்டுகோளாக உங்கள் முன் வைத்திருக்கிறோம்; பரிசீலிப்பது உங்களுடைய விருப்பம்.

அன்புடன் தமிழன்.

You might also like