இயக்குநர் கே.பாக்யராஜுக்கு பல வகைகளில் நெருங்கிய தொடர்புடைய மாவட்டம் சேலம்.
சேலம் கைலாஷ் தியேட்டரில் அவரது ’முந்தானை முடிச்சு’ நூறு நாட்கள் ‘ஹவுஸ்ஃபுல்’ காட்சிகளாக ஓடியது.
அவரது முக்கிய படங்களில் ஒன்றான ‘பவுனுபவுனு’தான் மேட்டூரிலும், மற்றொரு படமான ‘ஆராரோ ஆரிரரோ’ ஏற்காட்டிலும் எடுக்கப்பட்டன.
அவரது ‘சின்னவீடு’ படத்தின் பாடல் ‘கம்போசிங்’ சேலம் கோகுலம் ஓட்டலில் தான் நடந்தது.
இளையராஜா, தனி ’சூட்’டில் தங்கி இருந்தார்.
பாக்யராஜுக்கு தனி அறை; அப்போதுதான் அவரை முதலில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.
மாலை தினசரி பத்திரிகைக்காக அவரை பேட்டி எடுத்தேன்.
பாக்யராஜின் ‘சின்னவீடு’ எப்படி இருக்கும்? என்ற தலைப்பில் அவரது நேர்காணல் வெளியானது. தலைப்பை பாக்யராஜ் ரொம்பவே ரசித்தார்.
அந்த சமயத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மூன்றாவது முறையாக முதலமைச்சர் ஆனதையொட்டி, சபாநாயகராக இருந்த கே.ராஜாராம், சேலத்தில் பிரமாண்ட விழா எடுத்தார்.
ஆந்திர முதலமைச்சராக இருந்த என்.டி.ராமராவ், கர்நாடக முதலமைச்சர் ஹெக்டே, நடிகர் திலகம் சிவாஜி, பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோருடன் இந்தி சினிமாவின் கனவுக்கன்னி ஹேமமாலினியும் விழாவில் கலந்து கொண்டார்.
பாக்யராஜ் பேசும்போது, தனது முதல் மனைவி பிரவீணாவின் இறுதி ஊர்வலத்தில் எம்.ஜி.ஆர். பங்கேற்று தகன மேடை வரை நடந்தே வந்ததைக் குறிப்பிட்டார்.
பிரவீணாவின் நினைவுகளில் மூழ்கியவர், கண்ணீர் விட்டுத் தேம்ப ஆரம்பித்து விட்டார். எம்.ஜி.ஆரும், சிவாஜியும் தான் அவரை தேற்றினர்.
அதிமுகவுக்கு பிரச்சாரம் :
அப்போது, பாக்யராஜை தனது கலை உலக வாரிசாக எம்.ஜி.ஆர். அறிவித்திருந்தார்.
அந்த நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. உடல்நிலை காரணமாக எம்.ஜி.ஆரால் பிரச்சாரத்துக்கு வரமுடியவில்லை.
அவரது சார்பில் தமிழகம் முழுவதும் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த பாக்யராஜ், சேலத்தில் இருந்தே சூறாவளி சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார்.
பாக்யராஜின் பேச்சு, அதற்கு மக்களின் ‘ரீ-ஆக்ஷன்’, திரண்ட பொதுமக்கள் எண்ணிக்கை போன்றவை உடனுக்குடன், உளவுத்துறையால் எம்.ஜி.ஆருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அவரது பிரச்சாரத்தை முழு விவரமாக நான் வேலை பார்த்த மாலை தினசரியில் பதிவு செய்தேன். அதற்காக பாக்யராஜின் பாராட்டும் கிடைத்தது.
அதன் பிறகு அவரைப் பார்த்தது, சென்னக்கு வந்த பிறகுதான். அவரது ‘பாக்யா’ பத்திரிகையில் ‘ஃபிரிலேன்ஸ்’ நிருபராக வேலை பார்த்தேன். ’அப்பாய்மெண்ட் ஆர்டர்’ அளித்தவர் பாக்யராஜ் தான்.
’பாப்பாங்குளம் பாரதி’ என்ற புனைப்பெயரில் பாக்யா இதழில் தான் முதன்முதலாக எழுத ஆரம்பித்தேன்.
முதல் பேட்டி – சுஜாதாவின் பேட்டி. அப்போது மணிரத்னத்தின் ‘ரோஜா’ ரிலீஸ் ஆகி இருந்தது.
சுஜாதா வசனம் எழுதி இருந்தார்.
அந்த நேரத்தில் சுஜாதா பெங்களூரில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அவ்வப்போது சென்னை வருவார்.
பேட்டிக்காக அவருக்கு போன் செய்தபோது, ரோஜா படம் பார்த்து விட்டு வருமாறு பணித்தார்.
நானும் படம் பார்த்த கையோடு, சுஜாதாவைச் சந்தித்தேன். படம் குறித்த எனது அபிப்பிராயத்தை கவனத்துடன் கேட்டுக்கொண்டார். ஒரு மணி நேரம் வரை அன்றைய நேர்காணல் நீடித்தது.
சினிமா வார இதழ் ஒன்றிலும் ‘ஃபிரிலேன்சர்’ ஆக பணியாற்றினேன். பட விழாக்களில் பாக்யராஜ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை அந்த இதழில் பதிவு செய்துள்ளேன்.
சினிமாவில் உச்சம் தொட்ட நிலையிலும் புகழ் போதையை அவர் தலையில் ஏற்றிக்கொண்டதில்லை. இது அவரிடம் நான் கண்ட சிறப்பம்சம்.
அம்மா வந்தாச்சு, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, வேட்டிய மடிச்சு கட்டு ஆகிய படங்களைத் தயாரித்து அவர் கையை சுட்டுக் கொண்டார்.
தனிக்கட்சி ஆரம்பித்து கொஞ்ச நாள் அரசியலில் ஈடுபட்டு, அதனால் சூடுபட்ட அனுபவமும் பாக்யராஜுக்கு உண்டு.
– பாப்பாங்குளம் பாரதி.
#கேபாக்யராஜ் #பாக்யராஜ் #எம்ஜிஆர் #நடிகர்திலகம்சிவாஜி #பாப்பாங்குளம்பாரதி #பாக்யாஇதழ் #சுஜாதா #முந்தானைமுடிச்சு #சின்னவீடு #தமிழ்சினிமா #KBhagyaraj #MGR #SivajiGanesan #Sujatha #BhagyaMagazine #TamilCinema
