நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆர்.புதுப்பட்டியைச் சேர்ந்த எஸ்.பி.கருப்பண்ணன் – காளியம்மாளுக்கு, 1918, அக்டோபர் 20ஆம் தேதி பிறந்தார் பி.கே.முத்துசாமி.
தொடக்கத்தில் விவசாயத்திலும், தொடர்ந்து மிதிவண்டிக் கடையிலும் வேலை செய்த கவிஞர் முத்துசாமி, திரைப்படம் மீது கொண்ட ஆர்வத்தால் தனது நிலத்தை விற்று, அதில் கிடைத்த பணம் மூலம் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற திரைப்படத்தை எடுக்க முயன்றார்.
அந்த முயற்சி தோல்வியடைந்ததால், அந்தத் திரைப்படத்தை ஏ.கே.வேலனிடம் ஒப்படைத்தார்.
பின்னர், அதே படத்தில் பாடலாசிரியராகப் பணியாற்றினார்.
1958-ல் வெளியான ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ‘மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை பாரமா?’ என்ற பாடல் இவர் எழுதியது தான்.
‘காவிரியின் கணவன்’ என்ற படத்தில் “சின்னச் சின்ன நடை நடந்து, செம்பவள வாய் திறந்து” என்ற பாடல், ‘பொன்னித் திருநாள்’ படத்தில் “கண்ணும் கண்ணும் கதை பேசி, ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து” போன்ற பல வெற்றிப் பாடல்களை இயற்றியுள்ளார்.
ஏ.கே.வேலன் இயக்கிய ‘பொன்னித் திருநாள்’ திரைப்படத்தில் கவிஞர்கள் மருதகாசி, கண்ணதாசன், சுரதா ஆகியோருடன் இணைந்து முத்துசாமியும் பாடல் எழுதியுள்ளார்.
இதேபோல, இவர் எழுதிய நாடகத்தில், நடிகவேள் எம்.ஆர்.ராதா போன்ற திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர்.
கவிஞர் சுரதா வார இதழ் ஒன்றில், “குடத்துக்குள் ஒளிரும் குத்து விளக்கு, வறுமை வளாகத்தில் உலாவும் பெரியார், கொள்கைச் சிங்கம் கவிஞர் பி.கே.முத்துசாமி. இவரது பாடலுக்கு நான் அந்த நாள் ரசிகன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘வெண்பா கவிஞர்’ எனப் போற்றப்படும் இவருக்கு, ‘20 ஆம் நூற்றாண்டின் புகழேந்தி’ போன்ற விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
கவிஞர் பி.கே.முத்துசாமி, திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கி வந்தவர். குறிப்பாக, தி.மு.க.வில் இணைந்து, இந்தி எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்டவற்றில் தீவிரமாகப் பங்கேற்றுள்ளார்.
முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். மற்றும் கவிஞர் பாரதிதாசன் போன்றோரோடு நெருக்கம் பாராட்டியவர். பிற்காலத்தில் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
பாடல்கள், வெண்பா, கதை எழுதுவதில் ஈடுபட்ட அவர், கடந்த 1948-ல் கிராமத்தில் தனி பள்ளியைத் தொடங்கி, மாணவர்களுக்கு தமிழ் இலக்கியமும் கற்பித்து வந்தார்.
1957-ல் பிலிம் சேம்பர் மற்றும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இவரது திரைப்பட உரிமத்தை, முன்னாள் முதல்வர் அண்ணா ரூ.14,500-க்கு விற்பனை செய்ய உதவியுள்ளார்.
அண்ணா எடுத்த ‘காதல் ஜோதி’ படத்தில் கவிஞர் பி.கே.முத்துசாமி ஒரு பாடலை எழுதியுள்ளார். ஆனால் அந்தத் திரைப்படம் வெளியாகவில்லை.
கவிஞர் பி.கே.முத்துசாமியை நினைவு கூறும் விதமாக ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற திரைப்படத்தில் அவர் எழுதிய பாடல் வரிகள்…
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா
கொடிக்கு காய் பாரமா – பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா
(மண்ணுக்கு மரம் பாரமா)
வாடியே நாளெல்லாம் வருந்தி வருந்தி தவமிருந்து
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
மலடி மலடி என்று வையகத்தார் ஏசாமல்
தாயென்ற பெருமைதனை மனம் குளிர தந்தவளே
(மண்ணுக்கு மரம் பாரமா)
அழுதால் அரும்புதிரும் அன்னாந்தால் பொன்னுதிரும்
சிரித்தால் முத்துதிரும் வாய் திறந்தால் தேனுதிரும்
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா
பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா
குழந்தை அழுவதை கேட்டு மனசு விஞ்சுமா
(மண்ணுக்கு மரம் பாரமா)
