கார்ல் மார்க்ஸ் சிலை அமைப்பு, பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் சென்றது, தனித்து குழந்தைகளை வளர்க்கும் பெண்களின் பிரச்சினை, தலித் பெண்கள் மாநாடு, போரில்லா உலகம், 33% இட ஒதுக்கீட்டை நிர்பந்தித்து முதலமைச்சர் விஜய்யை சந்தித்த பெண்கள் குழு.. என பரபரப்பாக இயங்கும் மனிதி செல்வியிடம் பீட்டர் துரைராஜின் நேர்காணல்;
பொது வாழ்க்கைக்காக ஆசிரியர் பணியை துறந்த மனிதி செல்வி, இந்த நேர்காணலில் பெண்கள் எதிர் கொள்ளும் பலவிதமான பிரச்சினைகளை அலசுகிறார்.
தனித்து வாழும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கிறதே?
தனித்து வாழும் பெண்கள் பலவிதமான சிக்கல்களை சந்திக்கிறார்கள். திரைப்படங்களும், திரைத் தொடர்களும் அவர்கள், மற்றவரின் கணவர்களை அபகரிப்பதாக சித்தரிக்கின்றன.
இதனால் சமூகத்தில், மற்ற பெண்கள் அவர்களோடு பழகும் போது எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதை யாரும் யோசிப்பதில்லை.
ஜெயலலிதா ஆட்சி செய்த போது, குழந்தையின் முன்னெழுத்தாக (initial) தாயாரின் பெயரைப் போடலாம் என்று அரசாணை வந்துள்ளது.
ஆனால், இந்த முன்னெழுத்தை மாற்றுவது பெரும்பாடாக உள்ளது. இதுகுறித்து எந்தவித தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளும் இல்லை.
சமுதாயத்தில் தனித்து வாழும் பெண்கள் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்று தெரியாது.
தனித்து வாழும் பெண்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை. இந்த நிலைமாற பண்பாட்டு மாற்றங்களும், அதற்கான போராட்டங்களும் தேவை.
பெண்களுக்கான கவனம், நிதி ஒதுக்கீடு போதுமான அளவு இருப்பதில்லை. இதற்காகத் தான் பெண்களுக்காக தனி அமைச்சகம் வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
சோவியத் புரட்சிக்கு பிறகு கருக் கலைப்பு என்பதை சட்டப்பூர்வமானதாக ஆக்கினார்கள்.
இது அந்தக் காலத்தில் நடந்த முற்போக்கான ஒரு மாற்றமாகும். இதனால் பல உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.
பெண்களுக்கு சம கூலி என்ற சட்டம் வந்தது. குழந்தைகள் காப்பகம் என்ற வசதி முதலில் ரஷ்யாவில் தான் வந்தது.
அரசு செலவில் திருமணம், தேனிலவு போன்றவைகள் சோவியத் ஒன்றியத்தில் நடந்தன. பொதுச் சமையலறை வந்தது. அது போல அரசு செய்ய வேண்டியவை எவ்வளவோ உள்ளன.
மத நம்பிக்கையற்ற நீங்கள் சபரிமலைக்கு வழிபடச் சென்ற பெண்கள் குழுவிற்கு தலைமை தாங்கிச் சென்றதை எப்படி புரிந்து கொள்வது?
குழந்தை பிறந்தவுடன் சபரிமலைக்கு வருவதாக வேண்டுதல் செய்த ஒரு தம்பதியினருக்கு திருமணமாகி 23 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பிறந்தது. தந்தை சென்று விட்டார். தாயார் ஐம்பது வயதுக்கு பின்னர் தான் செல்ல முடியும்.
ஒரு வேளை அதற்கு முன்பு இறந்து விட்டால் தனது வேண்டுதல் நிறைவேறாமல் போய்விடுவோமோ என்று அவர் வருந்தினார்.
அந்த சமயத்தில் எல்லா பெண்களுக்கும் சபரிமலையில் வழிபாட்டு உரிமை உள்ளது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்ததால் அந்தத் தாயை அழைத்துக் கொண்டு சபரிமலைக்கு போவது என முடிவெடுத்தோம்.
உண்மையான ஒரு பெண் பக்தரின் குரலுக்கு நாங்கள் செவி சாய்த்தோம்.
சபரிமலையில் கடந்த காலங்களில் பெண்கள் வழிபாடு நடத்தி உள்ளனர்.
மேனாள் குடியரசுத் தலைவரான கே.ஆர்.நாராயணன் தனது அம்மாவின் மடியில் உட்கார்ந்து அங்கு பால்சோறு சாப்பிட்டதாக தனது சுயசரிதையில் எழுதியுள்ளார்.
வசதி படைத்தவர்கள் கையூட்டாகப் பணம் கொடுத்து போவது நடந்துள்ளது. ஐம்பது வயதுக்குட்பட்ட ஒருசில பெண் திரைக் கலைஞர்கள் வழிபாடு நடத்தியதாக செய்திகள் ஏற்கனவே வந்துள்ளன.
அங்குள்ள ஆதிவாசிப் பெண்கள் சபரிமலையை தமது இடமாக கருதி வழிபாடு நடத்தி வருகிறார்கள்.
ஆனால், இடைப்பட்ட காலத்தில் தான் 10 வயதில் இருந்து 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு வரக்கூடாது என்று சொல்லி வருகின்றனர்.
மாதவிடாய் நின்றுவிட்டதாக மருத்துவச் சான்று பெற்று வரவேண்டும் என்று கூறி வருகின்றனர்.
மற்ற கோவில்களில் இருந்து வேறுபட்டு ஆண்கள் மட்டுமே வர முடிந்த கோவில் என்ற தனித்துவத்தை காட்டினால் கூடுதல் வருமானம் வரும் என்ற வியாபார யுத்தி தான் இப்படிப்பட்ட தடைகளுக்கு காரணம்.
சபரிமலையில் நீங்கள் எப்படிப்பட்ட அனுபவங்களை எதிர் கொண்டீர்கள்?
நாங்கள் ஏழு பேர் அங்கு போவதாக கேரள அரசுக்கும், பத்தினம்திட்டா காவல்துறை கண்காணிப்பாளருக்கும் முன்கூட்டியே கடிதம் எழுதி, தகவல் சொல்லித் தான் நாங்கள் புறப்பட்டோம்.
எங்களை பத்தினம்திட்டா காவல்துறை தனது பொறுப்பில் அழைத்துச் சென்றது.
கோட்டயத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, பகிரங்கமாக பேசினோம்.
ஆனால், எங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது என்ற பெயரில் எங்களை யாரோடும் பேச அனுமதிக்காமலும், குடிதண்ணீரோ, சாப்பாடோ கூட வாங்க அனுமதிக்கவில்லை.
சிறுநீர் கழிக்க ஒவ்வொருவராக போகச் செய்தனர். அப்படி தனியாகச் சென்ற ஒவ்வொருவரிடமும் உங்கள் குருதி எந்த வகையைச் சேர்ந்தது, தாக்குதல் நடந்தால் தேவைப்படும் என்றெல்லாம் காவலர்கள் கேட்டு மிரட்டினார்கள்.
நாங்கள் அதிகாலை 3.30 மணிக்கு பம்பை சென்றபோது கூட்டம் இல்லை. எங்களை எந்தவிதத் தடங்கலும் இன்றி சபரிமலைக்கு அழைத்துச் சென்றிருக்கலாம்.
ஆனால், பத்துமணிவரை அடிவாரத்தில் எங்களை காக்க வைத்து கூட்டம் சேர வைத்தனர். அதற்குள் ஆர்எஸ்எஸ் ஆட்கள், கும்பலைக் கூட்டி கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டனர்.
எதுவும் நடக்காதபோதே, திடீரென்று ஒவ்வொருவரையும் காவல்துறையினர் கீழே இழுத்துச் சென்று விட்டனர்.
என்ன நடக்கிறது என்றே புரிந்துகொள்ள முடியவில்லை. எங்களை கேரள அரசும், காவல்துறையும் நடத்திய விதம் மிக மோசமாக இருந்தது.
இடதுசாரி அமைச்சராக இருந்தால் கூட அவரது செயல்பாடு சரியானதாக இல்லை.
நாங்கள் திரும்பி வந்த மறுநாள், காவல் துறையினர் அதிகாலையில் பிந்து அம்மிணி, கனக துர்கா என இரு பெண்களை உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி சபரிமலையில் வழிபாடு செய்ய வைத்தனர்.
அவர்கள் நினைத்து இருந்தால் முதல் நாளே எங்களை அனுமதித்து இருக்க முடியும்.
இடது முன்னணி அரசு வாக்கு வங்கிக்காக, ஆணாதிக்க மனநிலையில் தவறான முடிவு எடுத்தது.
அங்கு என்ன நடந்தது என்ற தகவல்களை பத்திரிகையாளர்களிடமோ, பொது மக்களிடமோ சொல்லக் கூட அவர்கள் அனுமதிக்கவில்லை. வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தின் சீராய்வில் உள்ளது !
காரல் மார்க்ஸ் சிலை அமைப்பது எப்படி சாத்தியப்பட்டது?
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மே நாளின் போது கார்ல் மார்க்சுக்கு சிலை வைக்க வேண்டும் என்ற பேச்சை மரியசூசை, மாரியப்பன் எழுப்பினார்கள். கார்ல் மார்க்ஸ் சிலை அமைக்க ஒரு குழு அமைத்தோம்.
இந்தக் குழுவின் தலைவராக அ.மார்க்ஸ் அவர்களைத் தேர்ந்தெடுத்தோம். அ.மார்க்ஸ் என்பதால் பல கதவுகள் தடையின்றி திறந்தன. காரல் மார்க்சுக்கு 2023-ல் அஞ்சல் தலை வெளியிட்டோம்.
அந்தக் கருத்தை கொஞ்சம் கொஞ்சமாக வலுப்படுத்தி தமிழக அரசுக்கு தொடர் அழுத்தம் தந்தோம்.
அந்தக் கனவு நிஜமாகி இன்று கன்னிமாரா நூலக வளாகத்தில் சிலையாக நிற்கிறது. தனிப்பட்ட வகையில் கார்ல் மார்க்ஸ் சிலை எனக்கு மனநிறைவைத் தருகிற ஒரு சாதனையாகும்.
தவெக அரசு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
விஜய் ஒரு அரசியல் உள்ளீடற்ற நபர். ஊழல் அடிமட்டத்தில் குறைந்திருப்பது போல தோன்றலாம். ஆனால் ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த் போன்றவர்களின் கடந்த கால வரலாறு நமக்குத் தெரியும்.
ஊழலை ஒழிப்பதற்கான அரசியல் பயிற்சியும், அமைப்புகளும் தவெகவிடம் இருக்கிறதா? சி
ங்கப் பெண் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைவாகவாவோ, துல்லியமாகவோ நீதி கிடைப்பதாக தெரியவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்ததாகவும் தரவுகள் இல்லை.
சட்டமன்றங்களில் லாவணிக் கச்சேரி நடக்கிறது. சபாநாயகர் நடுநிலையோடு இருப்பதாக தோற்றமளிக்கிறார்.
முக்கிய மசோதா சட்டமாகும் போது அவரது நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதை வைத்து தான் அவரின் உண்மை நிலையை காண இயலும்.
முதல்நாள் ஒரு உத்தரவு வருகிறது; எதிர்ப்பு வந்தவுடன் மறுநாளே அது திரும்பப் பெறப்படுகிறது.
விஜய் பலவீனமாக இருப்பதால்தான், அதிகாரிகள் இது போன்ற ஆணைகளை வெளியிடுகிறார்கள்.
தனக்குத் தெரிந்த மொழியில் விஜய் பத்திரிகையாளர்களிடம் பேச வேண்டும். பொது மக்களோடு உரையாடலை அவர் நடத்த வேண்டும்.
நேர்காணல்; பீட்டர் துரைராஜ்
நன்றி : அறம் இதழ்