குட்டியூண்டு தெருவில் படு எளிமையான வீடு என்று தான் அந்த வீட்டைச் சொல்ல வேண்டும்.
கோவிலுக்குப் பெயர் போன மதுரை. மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போகிற மேலக் கோபுரத் தெருவிலிருந்து கிளை பிரிகிற குறுகலான மேல ஹனுமந்தராயன் கோவில் தெரு.
அதில் சற்று நகர்ந்தால் முகப்பில் வீணை வடிவில் சிலை. பழமை இன்னும் மாறாத இந்த வீட்டில் இரண்டாவது குழந்தையாகப் பிறந்தவர் குஞ்சம்மா. பின்னாளில் எம்.எஸ். அம்மா. பிறந்தது 1916-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி.
தன்னுடைய பெயரிலேயே பிறந்த ஊரைச் சுமந்த மதுரை சோமுவைப் போல இவரும். மதுரை சண்முகவடிவு சுப்புலெட்சுமி என்று பிரியத்துடன் மதுரையைச் சுமந்திருக்கிறார்.
வெப்பம் பரவிய அறைகள் நிரம்பிய இந்த வீட்டில் தான் எத்தனை இசைச் சங்கமங்கள்? அம்மா சண்முகவடிவு பிரபலமான வீணைக் கலைஞர். பாட்டி அக்கம்மா அந்தக் கால வயலின் வித்வான். அண்ணன் சக்திவேல் மிருதங்கம்.
தங்கை வடிவாம்பாளும் அம்மாவைப் போல வீணை. அப்பா சுப்பிரமணியம் சங்கீத ரசிகர் என்று இசை சுற்றிலும் சூழ்ந்திருக்கும்போது பிஞ்சிலேயே வாய்ப்பாட்டில் கமகமக்க ஆரம்பித்துவிட்டார் சுப்புலெட்சுமி.
குஞ்சுப்பெண்ணின் குரலில் இசை கமழ்ந்தது. அம்மா சண்முகவடிவு வாசிக்கும்போது கூடவே வாய்ப்பாட்டை சுப்புலெட்சுமி பாடும்போது அந்தக் குரல் கேட்பவர்களைக் கிறங்கடித்தது.
அப்போது நாதஸ்வரத்தில் பிரபலமாக இருந்த பொன்னுசாமி பிள்ளை (தில்லானா மோகனாம்பாளில் வாசித்த சேதுராமன்-பொன்னுசாமி சகோதரர்களின் அப்பா) சுப்புலெட்சுமியை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டே சொல்லியிருக்கிறார்.
‘’குஞ்சம்மா… நீ பெரிய ஆளா வருவே’’
மதுரையில் உள்ள ஒரு கோவில் திருவிழா. அங்கு சண்முகவடிவு வீணை வாசிக்கப் போகும்போது சின்ன உருவமாய்க் கூடவே போயிருக்கிறார் சுப்புலெட்சுமி.
வீணையின் தந்தியுடன் இணைந்து அதிர்ந்திருக்கிறது சுப்புலெட்சுமியின் குரல். கேட்டவர்கள் வியந்து போனார்கள். அம்மாவுடன் இசைத்தட்டுக்காக ஒலிப்பதிவு நடந்தபோது சுப்புலெட்சுமியின் இசைக்குரலையும் பதிவுசெய்தவர்கள் அசந்து போனார்கள்.
‘பாடியவர் மிஸ் சுப்புலட்சுமி வயது 10‘ என்று அந்த இசைத்தட்டுக்கு விளம்பரம் செய்தார்கள். ஏணியில் ஏறத்துவங்கிவிட்டார் எம்.எஸ். குரல் சிறகடிக்க ஆரம்பித்துவிட்டது.
அம்மா தான் குரு. வீட்டிலேயே சாதகம் நடக்கும். ஆறாவது வகுப்புக்குப் பிறகு பள்ளிக்குப் போகவில்லை. சீனிவாச அய்யங்காரிடம் வாய்ப்பாட்டு. பண்டிட் நாராயணராவிடம் ஹிந்துஸ்தானி. இசை தான் எல்லாமாயிற்று.
அம்மாவுடன் சேர்ந்து கச்சேரிகளுக்குப் போனார். சென்னை மியூசிக் அகாடமியில் ஒரு கச்சேரி. அம்மா தம்பூரா.
பதினாறு வயதான சுப்புலெட்சுமி வாய்ப்பாட்டு. அரங்கத்தை நிறைத்தது அந்த வசியக்குரல். கேட்டவர்கள் வாழ்த்தினார்கள்.
பரவசமடைந்த காரைக்குடி சாம்பசிவ அய்யர் உச்சி குளிர்ந்து பாராட்டினார். “உன் தொண்டையிலேயே வீணையை வைச்சுண்டிருக்கேம்மா..’’
மாயவரம் கிருஷ்ணய்யரும், செம்மங்குடியும் கற்றுக்கொடுக்க இன்னும் மெருகேறியது அந்த இளங்குரல்.
குரலில் மட்டுமல்ல, சுப்புலெட்சுமியின் முகத்திலும் வீணையின் நளினம் இருப்பதை உணர்ந்தவர்கள் ‘சேவாசதன்’ படத்தில் நடிக்க அழைத்தார்கள்.
முதலில் கூச்சத்துடன் நடித்த எம்.எஸ். பின் காமிராவுக்கு முன்னால் இயல்பானார்.
’’என்ன செய்வேன்.. எங்கே செல்லுவேன்’ – குரல் மிளிரப் பாடினார். 1938-ல் வெளிவந்த படம் ஹிட்.
‘போய்ப் பாருங்கள்‘ – இரண்டே வார்த்தைகளில் இப்படத்திற்கு விமர்சனம் எழுதினார் கல்கி.
சதாசிவத்துடன் திருமணத்திற்குப் பிறகு சகுந்தலை, சாவித்ரி என்று அடுத்தடுத்த படங்கள்.

‘காற்றினிலே வரும் கீதம்’ பாடலைக் கொண்ட ‘மீரா’ சுப்புலெட்சுமியைத் தேசிய அளவில் பிரபலமாக்கியது. ஹிந்தியிலும் இவரே பாடி நடித்தார்.
மகாத்மா நெகிழ்ந்திருக்கிறார். நேரு மனம் கசிந்திருக்கிறார். சரோஜினி நாயுடு வியந்திருக்கிறார். இப்படி எம்.எஸ்.ஸின் குரல் பலரை வசப்படுத்தியது.
ஐ.நா.சபையில் பாடியபோது அரங்கமே அமைதி காத்தது. மாஸ்கோவில், தளர்ந்த வயதில் பாடியபோதும் அரங்கமே எழுந்து கைதட்டி எதிரொலித்தது.
ஆரவாரமில்லாத அமைதியான சிற்றோடையைப் போன்ற எம்.எஸ்.ஸின் இசை பத்ம்பூஷணிலிருந்து பாரத ரத்னா வரை பல விருதுகளைத் தேடி வரச்செய்தது.
எந்த விருதும் அவருடைய இயல்பைக் குலைத்து விடவில்லை. அதே சாந்தம் ததும்பும் முகம். அதில் எப்போதும் கசியும் புன்னகை.
“இசை என்பது கடல். நான் ஒரு மாணவி’’ – அகங்காரத்தின் நிழல் படியாத அவருடைய முகம் இது தான்.
சதாசிவம் மறைந்தபிறகு பாடுவதைக் குறைத்துக் கொண்ட எம்.எஸ். 2004 டிசம்பர் 11 ஆம் தேதி மறைந்தபோது அவருக்கு வயது 88. அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது அந்த மெலிந்த உடல்.
அதிகமான கச்சேரிகள் மூலம் கோடிக்கணக்கான நிதியை நாட்டுக்குத் திரட்டித் தந்திருக்கிற எம்.எஸ்.ஸின் ‘’கௌசல்யா சுப்ரஜா ராம்பூர்வா’’ என்கிற வேங்கடேச சுப்ரபாதத்துடன் தான் திருப்பதி கோவிலில் இன்றும் அதிகாலைப் பொழுது புலர்கிறது.
சர்வதேசம் முழுக்க வலம் வந்த குரல்- மதுரையின் ஒடுக்கமான தெருவிலிருந்து தான் ஊற்றெடுத்திருக்கிறது.
குறை சொல்வதும், புலம்பல்களும் மலிந்துபோன காலகட்டத்தில் ‘குறையொன்றும் இல்லை. மறை மூர்த்திக் கண்ணா’’ என்று எம்.எஸ். பாடியிருப்பது அவருடைய மனசின் குரல்.
அந்தக் குரலை எப்படி அழிக்க முடியும்?
– மணா
#எம்எஸ்சுப்புலட்சுமி #சண்முகவடிவு #இசையின்அரசி #MSS #Shanmukhavadivu #Isaiyarasi #MSSubbulakshmi #CarnaticMusic #TamilMusic #IndianClassicalMusic