படத்தின் ஆன்மாவுடன் இணைந்த கலைஞன்!

ஸ்ரீகர் பிரசாத்தின் லிம்கா சாதனை

ஒரு திரைப்படத்தில் நடிப்புக் கலைஞர்களின் பெயர்கள், இசையமைப்பாளர், இயக்குனர் பெயர்கள், வெகு அரிதாக ஒளிப்பதிவாளர் பெயர்களை ரசிகர்கள் டைட்டிலில் கண்டு கைத்தட்டல்களைப் பரிசளிப்பதுண்டு. தீவிர சினிமா ரசிகர்கள் இந்த வரிசையில் படத்தொகுப்பையும் சேர்த்துக் கொள்வார்கள்.

அப்படிக் கைத்தட்டல் வாங்கும் ஒரு சில படத்தொகுப்பாளர்களில் ஸ்ரீகர்பிரசாத்தும் ஒருவர். படத்தொகுப்பு என்றால் சிறு துளி கூடத் தெரியாத பொழுதிலேயே என்னை ஈர்த்தவர்.

2001-ம் ஆண்டு திருவனந்தபுரம் சூர்யா திரைப்பட விழாவில் கலந்துகொண்டபோது, பட்டியலில் இருந்த திரைப்படம் திரையிடப்படாது என்று அறிவிக்கப்பட்டது. ஏதேனும் ஒரு புதிய திரைப்படம் வரப்போகிறது என்று மட்டும் சொன்னார்கள்.

திடீரென்று திரை ஒளிர்ந்தபோது ஆச்சர்யம் கண்ணை நிறைத்தது. அப்போது ரிலீஸான ‘தில் சாஹ்தா ஹை’ படம் திரையில் தொடங்கியது. அவ்வளவுதான்!

ப்ரெஷ்ஷான சினிமா என்பார்களே, அதனை அன்று நான் கண்டுகளித்தேன். அன்று முதல் இயக்குனர் பர்ஹான் அக்தரின் ரசிகனாகி விட்டேன். இத்திரைப்படம் ’ட்ரெண்ட்செட்டர்’ எனும் ரகம் சார்ந்தது.

திரைக்கதை, இசை, நடிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என்று அனைத்திலும் இளமையின் ஆதிக்கம். அத்திரைப்படத்தின் படத்தொகுப்பு இன்று வரை இந்தியா முழுவதும் வெளியாகும் அத்தனை படங்களிலும் தாக்கத்தைத் தொடர்ந்து தந்து வருகிறது.

அப்படத்தைத் தொகுத்தவர் ஸ்ரீகர் பிரசாத்.

அதன்பின், ஒரு ஆண்டில் வெளியான முக்கியமான, பெருவெற்றி பெற்ற, ரசிகர்களை ஈர்த்த, விருது பெற்ற சினிமாக்களை உற்றுநோக்கினால் அவற்றில் அதிகமாக அவரது பெயர் இடம்பிடித்திருப்பதைக் காண முடிந்தது.

தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் தன் பணியைத் தொடங்கிய இவர், இன்று தமிழில் தவிர்க்க முடியாத படத்தொகுப்பாளர்.

‘இருவர்’ படத்துக்குப் பின் மணிரத்னத்தின் கமர்ஷியல் வெற்றியை உறுதி செய்த ‘அலைபாயுதே’ படத்தில் இவரது படத்தொகுப்பு கண்ணுக்குத் தெரியாத ஒரு கதாபாத்திரம் தான்.

கமர்ஷியல், ஆர்ட் படங்கள் அல்லது இரண்டும் கலந்த படங்கள் என்று எந்த வரையறைக்குள்ளும் இவரது பிலிமோகிராபி அடங்காது. உதாரணம், 2019-ல் இவர் பணியாற்றியவை.

மிகக்குறைந்த பட்ஜெட்டில் வெளியான ‘டுலெட்’ முதல் அதிக பட்ஜெட்டில் தயாரான ‘சைரா நரசிம்மா ரெட்டி’, ‘சாஹோ’, ‘தர்பார்’ படங்கள் வரை அனைத்திலும் இவரது கைவண்ணம் இருக்கும். அதேபோல இவர் பணிபுரியும் திரைக்களங்களையும் வரையறுக்க முடியாது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம், ஒடியா, அஸ்ஸாமிஸ், பெங்காலி, பஞ்சாபி, நேபாளி, மராத்தி, சிங்களம், கர்பி, மிஷிங், போடோ, பாஞ்சென்பா என்று 17 மொழிகளில் படத்தொகுப்பு செய்திருக்கிறார். இதற்காகவே, 2013-ம் ஆண்டு லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்திருக்கிறார்.

எல்.வி.பிரசாத்தின் சகோதரர் சஞ்சீவியின் மகனான ஸ்ரீகர், தன் தந்தையிடம் இருந்து படத்தொகுப்பைக் கற்றவர். இன்று, இவரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்கள் பலர் வெவ்வேறு மொழிகளில் தங்கள் தடங்களைப் பதித்திருக்கின்றனர்.

ஒரு படத்தொகுப்பாளருக்கு வேகத்தைப் போலவே இசைவும் கைவந்திருக்க வேண்டும் என்பது ஸ்ரீகர் அடுத்த தலைமுறை படத்தொகுப்பாளர்களுக்குச் சொல்லும் அறிவுரை. ஸ்ரீகர்பிரசாத்.காம் என்ற வலைதளத்தில் அவ்வப்போது தன் கருத்துகளையும் பகிர்ந்து வருகிறார்.

மணிரத்னம், சந்தோஷ் சிவன், ஷாஜி கருண், விஷால் பரத்வாஜ், பிரசன்ன விதாங்கே என்று பல புகழ்பெற்ற இயக்குனர்களுடன் பணியாற்றியிருக்கிறார்.

விஷ்ணுவர்தன், ராம், விக்ரம்குமார் உட்படத் தமிழில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களாக உருவெடுத்தவர்களோடு கைகோர்த்துப் பயணித்து வருகிறார்.

ஒரு திரைப்படம் படத்தொகுப்பு மேஜையில்தான் உருவாகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அது சிறப்பாக இருக்க வேண்டுமானால், அத்திரைப்படத்தின் ஆன்மாவுடன் படத்தொகுப்பாளரின் மனம் ஒன்றிணைய வேண்டும்.

புதிய கருத்துகளை ஏற்கத் தயாராக இருப்பதோடு, கற்றுக்கொள்ளவும் கற்பிப்பதற்குமான மனநிலையோடு இருக்க வேண்டும்.

ஒரு திரைப்படத்தில் படத்தொகுப்பு என்பது கதை சொல்வதற்கும் கதாபாத்திரங்களின் உணர்வு வெளிப்பாட்டுக்கும் இடையே சமநிலையைப் பேண வேண்டும். இதுதான் ஸ்ரீகரின் இலக்கணம்.

தொழில்நுட்பத்தின் உதவியால் ஸ்லோமோஷன்களும் ஃபாஸ்ட் கட்களும் கண்களைப் பிரமிக்க வைக்கலாம். அதையும் மீறி, சம்பந்தப்பட்ட திரைப்படத்தில் கதை சொல்வதற்கு அது உதவுகிறதா என்பதையும் பார்க்க வேண்டியது அவசியம்.

இதனாலேயே வெவ்வேறு வகை கதை சொல்லலில் இவரால் ஈடுபாட்டோடு பணிபுரிவதற்கு முடிகிறது. தொழில்நுட்பத்தைவிட படைப்பாக்கமே எப்போதும் முன்னுரிமை பெறும் என்று சொல்லும் ஸ்ரீகரின் படங்கள் ஒரு பாடம்.

படத்தொகுப்பு, ஒலி வடிவமைப்பு, கலை, நடிப்புக்கலைஞர்கள் தேர்வு என்று ரசிகர்கள் கைத்தட்டுவதற்கான பட்டியல் பெருகி வருகிறது. சினிமா மற்றும் அதன் ரசனை குறித்த அவர்களது தேடலும் அதிகரிக்கிறது.

அப்படியொரு கவனிப்பை உருவாக்கும் ஸ்ரீகர் பிரசாத் போன்ற கலைஞர்கள் எப்போதும் பாராட்டுக்குரியவர்கள்!

– உதய்.பா

 

You might also like