ஏன் தவறான முடிவுகளை எடுக்கிறது தவெக அரசு?

சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு வெளியிட்டிருக்கிற அறிவிப்பு தமிழ் உணர்வாளர்களுக்கிடையே பலத்த விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.

ஏன்? என்ன காரணம்?

அரசின் அறிவிப்புப்படி தமிழகத்தில், ஓடும் அரசுப் பேருந்துகளில் நடத்துநர்களை (கண்டெக்டர்கள்) நியமிக்கும் பொறுப்பு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து வடநாட்டைச் சேர்ந்தவர்கள் பேருந்து நடத்துநர்களாக நியமிக்கப்படலாம் என்கிற கருத்தும் உருவாகி, போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இந்த அறிவிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே வந்து குவிந்திருக்கிற வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி இருக்கிறது.

பல்வேறு வேலைவாய்ப்புகளிலும் தொழில்களிலும் அவர்களின் ஆதிக்கமும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் எந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்குப் போனாலும், அங்கே வாடிக்கையாளர்களுக்கான கவுண்ட்டர்களுக்குப் பின்னால், அதிகாரிகளாக அல்லது ஊழியர்களாக வட இந்தியர்கள் தான் இருக்கிறார்கள்.

தங்களது பென்ஷனையோ அல்லது தங்களுக்குத் தேவையான பணத்தை எடுக்க வங்கிக்கு வரும் வயதான பெண்கள், இந்தியும் ஆங்கிலமும் பேசும் அந்த வங்கி ஊழியரிடம் பேசுவதற்கு படாதபாடு பட வேண்டியிருக்கிறது.

சலூன் கடைகள், சிறு டீ கடைகள், பெரும் கட்டுமான நிறுவனங்கள், ஓட்டல்கள் என எங்குப்பார்த்தாலும் வட மாநிலத்து இளைஞர்களே சென்னை, கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில் அதிகப்பட்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே நஷ்டத்தில் இயங்குவதாகச் சொல்லப்படும் அரசுப் பேருந்துகளில் நடத்துநர் வேலையையும் வடமாநிலத்தினரிடம் தவெக அரசு ஒப்படைத்தால், அவர்கள் யாரை ஊழியர்களாக நியமிப்பார்கள்?

அவர்கள் எந்த மொழியில் தமிழகத்தில் பயணிக்கும் பயணிகளிடம் இயல்பாகப் பேசி பயணச்சீட்டை வழங்க முடியும்?

மிக அண்மையில்தான் தமிழ்த்தாய் வாழ்த்துக் குறித்த சர்ச்சை அலையடித்து ஓய்ந்திருக்கிறது.

இப்போது மறுபடியும் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோகுமோ என்கின்ற அச்சமூட்டும் அறிவிப்பு வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இத்தகைய அறிவிப்புகளை தவெக அரசு வெளியிடுகிறது என்றால், அந்த அறிவிப்பை முதல்வர் விஜய்க்குத் தெரியாமல் அறிவிக்கிறார்களா?

அல்லது தலைமைச் செயலகத்தில் உயர் பொறுப்பிலிருக்கும் வடமாநிலத்து அதிகாரிகள் தங்கள் மாநில உணர்வுடன் முடிவெடுக்கிறார்களா?

எப்படி இருந்தாலும் இதன் எதிர்விளைவுகள் தவெக அரசுக்குத்தான் வந்து சேரும் என்பதை முதல்வர் விஜய் உணர வேண்டும்.

இதற்கு முன்பு திமுக ஆட்சியில், தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரம் என்று திமுக அரசு மாற்றமுனைந்தபோது பொதுவுடைமைக் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளிடமிருந்தும் தொழிற்சங்ககளிடமிருந்தும் பரந்துபட்ட எதிர்ப்பு உருவானதால், திமுக அரசு அத்திட்டத்தை அறிவித்ததிலிருந்து பின்வாங்கியது.

தற்போது தமிழ்நாட்டில் ஓடும் பேருந்துகளில் யாரை நடத்துநர்களாக நியமிக்கலாம் என்பதையும் தனக்கு வாக்களித்த தமிழர்களின் நலன் சார்ந்து தவெக அரசு உரிய முடிவெடுக்கட்டும்.

வெறும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனை வலுப்படுத்தாமலும் இருக்கட்டும்.

– லியோ

You might also like