திரு.வி.க.விடம் ஒற்றைக் கோரிக்கை வைத்த மனைவி!

‘‘நல்லன கொண்டும், தீயன விலக்கியும் மற்றவர் வாழ்வதற்கு என் வாழ்க்கைக் குறிப்புகள் ஓரளவிலாது துணைபுரியும்’’ – என்றவர் திரு.வி.கல்யாணசுந்தரனார்.

திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் என்பதே அவர் பெயரின் சுருக்கம்.

அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர்.

சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் ‘தமிழ்த் தென்றல்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

ஒற்றுமையைக் குலைக்காத, அமைதியே உருவான கமலாம்பிகை என்ற நங்கையை 1912-ல் திருமணம் செய்துகொண்டார் திரு.வி.க.

‘‘தனக்குக் கல்வி போதிக்க வேண்டும்’’ என்று தன் கணவரிடம் கோரிக்கை வைத்தார் கமலாம்பிகை.

அதற்கு திரு.வி.க., ‘‘நீ இளமையில் பொன், புடவைகளை அல்லவா கேட்க வேண்டும். அதை விட்டுவிட்டு வேறு எதையோ கேட்கிறாயே’’ என்றார்.

அதற்கு கமலாம்பிகை, ‘‘எனக்கு நகைகள் இருக்கின்றன. என் அன்னையாரின் விலை உயர்ந்த புடவைகள் பல இருக்கின்றன.

நான் என்ன கேட்டாலும் வாங்கித் தர பெரியப்பா இருக்கிறார். ஆகவே, உங்களிடம் விரும்புவது கல்வி மட்டுமே’’ என்று பதிலளித்தாராம்.

அவர் கேட்டுக்கொண்டபடி அவருக்கு தமிழ்க் கற்பித்தார் திரு.வி.க.


கமலாம்பிகை, இனிமையாகப் பாடக் கூடியவர். ஆகையால் அவரை, திருவொற்றியூர் கடற்கரைக்கு அழைத்துச் சென்று அவரைப் பாட வைத்துக் கேட்டு மகிழ்வார்.

அவர்களுடைய இல்லற வாழ்க்கையின் பயனாக இரண்டு குழந்தைகள் பிறந்தனர். இரண்டும் இறந்துவிட்டன.

கமலாம்பிகையும் எலும்புருக்கி நோயால் இறந்துபோனார். மனைவியை இழந்து துக்கத்தில் இருந்த திரு.வி.க-வைப் பலர், மறுமணம் செய்யச் சொல்லி வலியுறுத்தியும் இறுதிவரை மறுமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.

– நன்றி : விகடன்

You might also like