சட்டசபை நேரடி ஒளிபரப்பு யாரை வெளிக்காட்டுகிறது?

”தமிழக சட்டசபை நிகழ்வுகளை தணிக்கை செய்யப்படாமல் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்” என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் முடிந்த பிறகு பேச ஆரம்பித்தன.

அதன் விளைவாக தற்போது நடந்து கொண்டிருக்கிற தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் நேரலையாக – எந்தவித தணிக்கையுமின்றி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை சட்டசபை நிகழ்வுகளை நேரடியாகப் பார்க்காத இளைஞர்கள் கூட, தற்போது இந்த நேரலை ஒளிபரப்பை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

சீரியல் பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் கூட இந்த நேரலை நிகழ்வுகளைப் பார்க்கும் அளவுக்குப் போயிருக்கிறார்கள்.

இதே சட்டமன்றத் தொடரில், “திமுக தனது மாமனாரிடமிருந்து 900 கோடி ரூபாயைப் பெற்றது உண்மையா, இல்லையா” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கேட்க,

அதற்கு, “அதைக் கொடுத்த உங்கள் மாமனாரிடம்தான், ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்கவேண்டும்” என உதயநிதி பதில் சொன்னது சமூகவலைதளங்களில் பெரும் வைரலாகப் பரவியது.

நடந்துகொண்டிருக்கிற சட்டமன்றக் கூட்டத் தொடரில் எதிர்த் தரப்பினரின் கேள்விகளைச் சமாளிக்க முடியாமல் தவெக திண்டாடப்போகிறது என்று தொலைக்காட்சிகளில் அரசியல் ஆருடம் கூறும் கணிப்பாளர்கள் கூறிக்கொண்டிருந்தார்கள். ஆனால், நடந்ததோ வேறு விதமாக இருந்தது.

சட்டமன்றத்தில் பாரபட்சமின்றி, ‘உட்காருங்க’ பலரை கஷ்டப்பட்டு உட்கார வைத்து பொறுமை காத்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகருக்கு  சமூகவலைதளங்களில் ஆதரவு பெருகியது.

ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சபாநாயகரை பாராட்டும் சூழலும் உருவானது.

அதேசமயம் தவெக தரப்பிலும் சில தவறுகள் நிகழாமல் இல்லை.

நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் ஒழுக்கான தமிழில் பேசலாமே என்று எதார்த்தமாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் சொல்லப்போக, அதற்கு நிதியமைச்சர் பதிலளித்த விதம் அவரது அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்தவில்லை.

இப்படிச் சிலசில தவறுகள் நடந்தாலும் திமுக மற்றும் அதிமுக தரப்பில் எழுப்பட்டப்பட்ட கேள்விகளுக்கு தவெக அமைச்சர்கள் சளிக்காமல் பதிலளித்தார்கள்.

குறிப்பாக, அமைச்சர் ராஜ்மோகன் போன்றோரின் பேச்சும் அவருடைய செயல்பாடும் பக்குவப்பட்ட முதிர்ச்சியுடன் இருந்ததையும் பார்க்க முடிந்தது. 

பாமக சட்டமன்ற உறுப்பினரான சௌமியா அன்புமணி, சட்டமன்றத்தில் முதலில் பேசும் முறையைக் ‘கன்னிப்பேச்சு’ என்று சொல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சொன்னதும் தவெக சார்பில் உடனே அதனை ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, நேரலையில் அமைச்சர் நிர்மல்குமாரை சங்கி அமைச்சர் என்று உதயநிதி பேச, அதற்கு கழிவறையில் மூன்று மணி நேரம் இருந்ததை நினைவுபடுத்தி அமைச்சர் நிர்மல்குமார் பதிலளிக்க அதுவும் சமூகவலைதளங்களில் வைரலாகிப் பரவி விவாதப் பொருளாகவும் மாறியது.

இதில், திமுகவின் நிலைப்பாடு குறித்து பலரும் கடும் விமர்சனங்களை எழுப்பியபோதுதான் நேரலை ஒளிபரப்பின் விளைவை திமுக உணர ஆரம்பித்தது.

சட்டசபையில் தவிர்த்திருக்க வேண்டிய பேச்சுக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டாலும் நேரலையாக ஒளிபரப்புவதால் சமூகவலைதளங்களில் பகிர்கிறார்களே என்ற வருத்தமான குரலை, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவும் உதயநிதி ஸ்டாலினும் சட்டசபையிலேயே பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் பலமாகக் கத்துவதும் கையை உயர்த்தியபடி ஓடி வருவதும் அதை, முன்னாள் அமைச்சரான எ.வ.வேலு குறுக்கிட்டு தடுத்ததும்

அதற்கு தவெக அமைச்சரான ராஜ்மோகன் கண்டிப்பு காட்டியதும் நேரலையாக ஒளிபரப்பான விதம் திமுக மீது ஏற்கனவே இருந்த வெறுப்புணர்வை இன்னும் அதிகப்பட வைத்திருக்கிறது என்பதே எதார்த்தம்.

75 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட கட்சி என்று அடிக்கடி நினைவுபடுத்தும் திமுகவினர், இரண்டரை வருடங்களே ஆன தவெகவுக்கு எதிராகக் குரல் எழுப்பி,

கையை உயர்த்தி சபாநாயகருக்கு எதிராக கத்தி செயல்பட்ட விதம், திமுகவின் “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்கிற வழக்கமான முழக்கத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இல்லை.

ஆக, சட்டமன்ற நேரலை மற்ற கட்சிகளைவிட அதிகமாக திமுகவினரையே எக்ஸ்போஸ் செய்திருப்பதால்தான் நேரலை ஒளிபரப்பு குறித்தே திமுகவினர் விமர்சித்துப் பேசும் சூழலும் உருவாகி இருக்கிறது.

சட்டசபை நிகழ்வுகள் எப்படி இருந்தாலும் சுமார் இரண்டு கோடி மக்கள் சட்டசபை நேரலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை திமுக, தவெக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் உணர வேண்டும்.

– லியோ

You might also like