இடைத்தேர்தல் : சூடு பிடிக்கும் பிரச்சாரம்!

கிரிக்கெட் விளையாட்டில் ஒன் டே மேட்ச் பெறும் கவனத்தை தற்போது மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

நான்கு மாதங்களைத் தாண்டிய தவெக ஆட்சிக்கு இந்தத் தேர்தல் களம் ஒரு சவாலான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. 

சென்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக அணியில் நின்று வெற்றி பெற்று மிகக்குறுகிய காலத்தில் தவெகவிற்கு சென்ற அதே வேட்பாளர்கள் மீண்டும் தவெக சார்பிலேயே களத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கிறார்கள்.

இதைவிடப் புதிய வேட்பாளர்களை களத்தில் இறக்கிவிட்டிருந்தால் தற்போதுவிட கூடுதல் கவனத்தை அவர்கள் பெற்றிருக்கலாம்.

இரட்டை இலைச் சின்னத்தில் ஏற்கனவே நின்றவர்களே அணி மாறி விசில் சின்னத்தில் போட்டியிடுகிறபோது, அது சற்றே பலவீனமானதுதான். இருந்தாலும் அவர்களை நம்பி களத்தில் இறக்கியிருக்கிறது தவெக.

ஏற்கனவே வெற்றிபெற்ற அதிமுக தற்போது மீண்டும் போட்டியிட்டாலும் அதன் பிரச்சாரம் முன்பிருந்ததைப்போல வலுவானதாக அமையவில்லை.

தற்போது தேர்தல் களத்தில் கொஞ்சம் அதிரடியான பிரச்சாரத்தை மேற்கொள்ள முயற்சிக்கிறது திமுக.

அண்மையில் கூட்டம் ஒன்றில் பேசிய திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் மின்சார வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டி என்று அவர் சொல்லியிருந்தாலும், அரிவாள் வெட்டு என்று தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைப் பற்றி அவர் குறிப்பிட்டிருப்பது தற்போதைய நிலையில் மக்களின் கவனத்தைப் பெறுமா என்பதும் கேள்விக்குறிதான்.

ஏனென்றால், மிக அண்மையில் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் தவெக அரசு வேகம் காட்டியிருப்பது அதே சமயத்தில் திமுக அதே வழக்கை தாமதப்படுத்தி அந்த வழக்கையே முடித்து வைக்க முயற்சித்திருப்பதும் பல்வேறு ஊடகங்களில் முக்கியமான விவாதப்பொருளாக மாறியிருப்பது திமுகவின் பிரச்சாரத்திற்கு எதிரான மனநிலையையே ஏற்படுத்தும்.

அதேசமயம் மு.க.ஸ்டாலின் முன் வைத்த மின்வெட்டுப் பிரச்சனையை சுலபமாக புறந்தள்ளி விட முடியாது.

மின்வெட்டு எந்த அளவுக்கு தேர்தல் முடிவை பாதிக்கும் என்பதற்கு திமுக ஆட்சிக் காலத்தில் ஆற்காடு வீராசாமி மின்துறை அமைச்சராக இருந்தபோது நிகழ்ந்த தொடர் மின்வெட்டு, முக்கியமான காரணியாக அமைந்ததை யாரும் மறுத்துவிட முடியாது.

அந்த அளவுக்கு சாதாரண மக்களிடம் அரசுக்கு எதிரான ஒரு மனநிலையை சுலபமாக உருவாக்கும் சூழலை மின்வெட்டு ஏற்படுத்தியிருக்கிறது.

அதற்கு திமுகவின் தோல்வியே ஒரு நடைமுறை சாட்சியமாகவும் அமைந்திருக்கிறது.

அதனால், திமுக தற்போது முன் வைத்திருக்கிற மின்வெட்டு பிரச்சனையை கவனமாக கையாண்டு, மின்வெட்டை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு தற்போதைய தவெக அரசுவிற்கு இருக்கிறது.

எந்தவொரு பிரச்சார வெளிச்சத்தைவிட வீட்டைச் சூழும் இருள் அதிகமான பாதிப்பை வாக்காளர்களிடையே ஏற்படுத்தும் என்பது நடைமுறை உண்மை.

ஏற்கனவே திமுகவும் தவெகவும் தங்களுடைய பிரச்சாரத்தை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக முதல்வரான விஜய் இரு தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வார் என்று சொல்லப்படுவது கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

எந்த அளவுக்கு அவர் திமுக மீது மட்டுமல்ல, அதிமுக மீதும் வெளிப்படையாக விமர்சனத்தை முன்வைக்கிறாரோ, அந்தளவிற்கு அதற்கான பலனும் இருக்கும்.

இதற்கு முன்பு அதிமுகவையே குறிப்பிடாமல் தவிர்த்து வந்த முதல்வர் தற்போது அதிமுகவிலிருந்து வெளியேறியவர்களை தங்களது வேட்பாளராக நிறுத்தியிருக்கும்போது, அதிமுகவை விமர்சிப்பது கட்டாயத் தேவையாகி விடுகிறது.

இதை முன்னிறுத்துகிற மாதிரி தவெகவின் சமூக வலைத்தளங்கள்  அதிமுகவின் எடப்பாடியின் ஆட்சிக் காலத்திய ஊழல்களைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கின்றன.

குட்கா ஊழல் அலசப்படுகிறது. பெரும் சொத்துக்குவிப்பு குறித்து பேசப்படுகிறது. முக்கியமாக திமுக ஆட்சிக் காலத்தில் சிறிதும் முன் நகர்த்தப்படாத கொடநாடு வழக்குப் பற்றிப் பேசப்படுகிறது.

இதையே தமிழக முதல்வர் விஜய்யின் பேச்சும் எதிரொலித்தால், அது அதிமுகவிற்கு சரிவை ஏற்படுத்தும்.

அதேசமயம் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்படும் ஜெம் வீரமணியின் வழக்கின் பின்னணி குறித்து முதல்வர் விஜய் தனது பிரச்சாரத்தில் முன் வைத்தாலே அது பெரும் தாக்கத்தை வாக்காளர்களிடையே ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது.

கடந்த ஆட்சிக் காலத்தில் திமுக செய்த தவறுகளை திமுகவின் இன்றைய பிரச்சாரத்திற்கு எதிராக மாறிவிடவும் வாய்ப்பிருப்பதை மறுக்க முடியாது.

திமுகவின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் மு.க.ஸ்டாலினும் உதயநிதியும் இத்தகைய பிரச்சாரத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதை வைத்தே திமுகவிற்கான வாக்குகள் கூடுவதையோ, சரிவதையோ கணிக்க முடியும்.

திமுக, தவெகவின் இறுதிக் கட்டப் பிரச்சாரமும் மக்களை ஈர்க்கிற செயல்பாடுகளும் எப்படி அமையப் போகின்றன என்பதைப் பொறுத்தே தேர்தல் முடிவுகள் அமையும்.

பொதுவுடமைக் கட்சியும் நாம் தமிழர் கட்சியும் இதே தேர்தலில் போட்டியிட்டாலும் கூட அவர்களால் குறைந்த அளவிலேயே வாக்குகளைப் பெற முடியும் என்பதே நிகழ்கால எதார்த்தம்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

– லியோ

You might also like