அக்டோபர் 6 ம் தேதி நடக்க இருக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் நெருங்குவதற்குள் பல கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம், தற்போது அடித்து வருகிற கூடுதலான வெய்யிலைப் போலவே சூடு பிடித்திருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஒருபுறம் சில பரபரப்பான, சிலேடையான பேச்சுக்களை வழக்கம்போல உதிர்க்க எடப்பாடி பழனிசாமியும் தனது வழக்கமான தடத்தை விட்டுக் கீழே இறங்கி பேச ஆரம்பித்திருக்கிறார்.
சீமான், பிரேமலதா போன்றவர்கள் எப்போதும்போல் ஊடகங்களுக்குத் தீனி போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையில் அதிகமான ஜனத்திரளுக்கு இடையே இடைத்தேர்தல் நடைபெறப் போகும் இரண்டு தொகுதிகளிலும் தனது பரப்புரையை முடித்திருக்கிறார் தமிழக முதல்வரான விஜய்.
மதுராந்தகம், தாராபுரம் இரண்டு தொகுதிகளிலும் அவர் பேசியது, சென்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது செய்த பரப்புரையைவிட அதிகமான வீச்சுடன் பரந்துபட்ட மக்களையும் இரு தொகுதி வாக்காளர்களையும் சென்றடைந்திருக்கிறது.
முதல்வர் விஜய்யின் பேச்சு எந்தளவுக்கு வாக்களர்களை ஈர்த்து தவெகவை வெற்றிபெற வைக்கும்?
விஜய் கடந்த மாதங்களில் தவெக அரசு எதையெல்லாம் செய்திருக்கிறது எதையெல்லாம் செய்ய இருக்கிறது இரண்டையுமே வாக்காளர்களுக்கு முன் வைத்திருக்கிறார்.
அண்மையில் மதுரையில் துவங்கப்பட்ட தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டம், இனி செயல்படுத்தப் போகும் இலவச சிலிண்டர் திட்டம், விரிவுபடுத்தப்பட்ட பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் உள்ளிட்ட பலவற்றை பரப்புரையின்போது பட்டியிலிட்டிருக்கிற விஜய்,
இந்தப் பரப்புரையின்போது வெளிப்படுத்திய முக்கிய அம்சம் திமுகவுக்கு எதிரான கட்சி தவெக தான் என்பதை வெளிப்படையாக முன்வைத்திருக்கிறார்.
அந்த விதத்தில் சட்டமன்றத் தேர்தலின்போது தங்களுக்கும் திமுகவும் இடையில் மட்டும்தான் போட்டி என்பதை மீண்டும் வலுவாக வலியுறுத்தியவர், அதிமுகவையும் பாஜகவையும் திமுகவுக்கு வெளிப்படையாக உதவுகிறவர்களாக பொதுவெளியில் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
அந்த விதத்தில் அதிமுக பாஜக இரண்டு கட்சிகளும் இதுவரை கையாண்டு வந்திருக்கிற மந்தமான திமுக எதிர்ப்பு என்கிற ஆயுதத்தை தனது கையில் எடுத்து அதைக் கூர்மைப்படுத்தியிருக்கிறார்.
டெல்லியில் உள்ள திமுகவுக்குப் பெயர் தான் பாஜக என்கிற அளவுக்கு மிகவும் அழுத்தமாக பரப்புரை செய்தாலும் அதற்கான சரியான எதிர்வினையை பாஜகவும் வெளிப்படுத்தவில்லை திமுகவும் மறுக்கவில்லை.
ஒருகாலத்தில் திமுக சொல்லிவந்த சனாதனம் என்கிற விமர்சனங்களையெல்லாம் தற்போதைய திமுகவின் பரப்புரையில் பின்னுக்குப் போய்விட்டன அல்லது காணாமல் போய்விட்டன.
அதைப் போலவே அதிமுக தற்போதைய தேர்தலில் தன்னுடைய வழக்கமான திமுக எதிர்ப்பு என்கிற ஆயுதத்தைக் கீழே போட்டு, தவெக எதிர்ப்பு என்கிற நிலைப்பாடை எடுக்க முக்கிய காரணமும் தமிழக முதல்வர் விஜய்யின் பரப்புரை தான் காரணம்.
திமுகவுக்கும் அதிமுகவுக்கும் சென்ற தேர்தல் முடிவுக்குப் பிறகு ரகசிய கூட்டணி பேச்சுக்கள் எல்லாம் நடந்தன என்பதெல்லாம் திரும்பத் திரும்ப வலியுறுத்தியதன் மூலம் சம்பந்தப்பட்ட கட்சிகளை அது குறித்து பேசாமல் மவுனமாக்கியது ஆபாசமாகவும் எதிர்வினையாற்றும் அளவுக்கு அவர்களைச் செல்ல வைத்திருக்கிறார்கள்.
அந்த விதத்தில் இதுவரையில் நடந்த பரப்புரைகளைவிட, நடக்கப் போகும் இடைத்தேர்தலில் வாக்காளர்களிடையே தங்களுடைய நிலையையை தெள்ளத் தெளிவாக தெளிவுபடுத்தியிருக்கிறார் முதல்வர் விஜய்.
இந்த இடைத்தேர்தலில் ஏற்கனவே இதே தொகுதியில் நின்று வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர்களையே திரும்பவும் தவெக வேட்பாளர்களாக நிறுத்தாமல் இருந்திருந்தால் அது கூடுதல் வலுசேர்த்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இருந்தும் தற்போதைய பரப்புரை, போட்டிகளுக்கு இடையே முன்வரிசையில் முந்தியிருக்கிறார் விஜய் என்று தான் சொல்ல வேண்டும்.
– லியோ