பொலிவியாவின் அடர்ந்த காடுகளில் வாழும் சிறிய புள்ளிகள் கொண்ட பூனை, இத்தனை ஆண்டுகளாக விஞ்ஞானிகளின் கண்களுக்கே சிக்காமல் இருந்திருக்கிறது.
பார்ப்பதற்கு ஒரு சாதாரண வீட்டுப் பூனை போலத்தான் இருக்கும். ஆனால், அது வீட்டுப் பூனை அல்ல. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அது ஏற்கனவே தெரிந்த காட்டுப் பூனை இனங்களில் ஒன்றும் அல்ல.
மரபணு ஆய்வுகளுக்குப் பிறகு, இந்தச் சிறிய பூனை ஒரு தனித்துவமான புதிய காட்டுப் பூனை இனத்தைச் சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது.
இதற்கு ‘டில்காயா பூனை’ (Leopardus tigray) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பின் பின்னால் இருப்பது ‘டிக்ரினோ’ என்று அழைக்கப்படும் ஒரு 10 வயது பூனை.
பல ஆண்டுகளுக்கு முன்பு, பொலிவியாவின் காட்டுப் பகுதியில் ஒரு உள்ளூர்வாசியால் இந்தப் பூனை கண்டெடுக்கப்பட்டது. அது ஒரு சாதாரண வீட்டுப் பூனைக் குட்டி என்றுதான் முதலில் நினைக்கப்பட்டது.
ஆனால், அது வளர வளர, அதன் நடத்தையில் ஏதோ வித்தியாசம் இருப்பது தெரியவந்தது.
பொலிவியாவின் யுங்காஸ் பகுதியில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் தன்னார்வலராகப் பணியாற்றிய விஞ்ஞானி பாவ்லா நோகலெஸ் – அஸ்காருன்ஸ், அந்தப் பூனையை கவனித்தபோது அதன் தோற்றமும் மற்ற பூனைகளிலிருந்து சற்று வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தார்.
அந்த ஒரு சந்தேகம் தான், பல ஆண்டுகளாக மறைந்திருந்த ஒரு மர்மத்திற்கான கதவைத் திறந்தது.
மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் காடுகளில் காணப்படும் புள்ளிகள் மற்றும் வரிகளைக் கொண்ட சிறிய காட்டுப் பூனைகள் ‘டைகர் கேட்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றன.
கோஸ்டாரிகா முதல் பொலிவியா மற்றும் அர்ஜென்டினா வரையிலான பகுதிகளில் இவை காணப்படுகின்றன.
ஆனால், இவற்றைப் பார்ப்பதற்கு ஒன்றுக்கொன்று மிகவும் ஒத்ததாக இருப்பதால், அவற்றை வெவ்வேறு இனங்களாக அடையாளம் காண்பதே விஞ்ஞானிகளுக்கு கடினமாக இருந்துள்ளது.
அதனால்தான் டில்காயா பூனையும் இதுவரை மற்றொரு காட்டுப் பூனை இனத்துடன் குழப்பப்பட்டிருக்கலாம்.
இந்த மர்மத்தைத் தீர்க்க, பல நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒன்றாக இணைந்தனர்.
உயிருடன் இருக்கும் பூனைகளிடமிருந்தும், அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பட்டிருந்த மாதிரிகளிலிருந்தும் மரபணுத் தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
அந்த மரபணு தகவல்களை வைத்து டைகர் கேட்களின் பரிணாம வரலாற்றை ஆராய்ந்தபோது, விஞ்ஞானிகளுக்கு எதிர்பாராத ஒரு விஷயம் தெரியவந்தது.
இதுவரை டைகர் கேட்கள் மூன்று இனங்களாகக் கருதப்பட்டிருந்தன.
ஆனால், அவை உண்மையில் ஐந்து தனித்தனி இனங்களாக இருக்கலாம் என்று அந்த ஆய்வு காட்டியது.
அவற்றில் ஒன்றுதான் தற்போது புதிதாக அடையாளம் காணப்பட்ட டில்காயா பூனை.
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தப் புதிய இனத்தைச் சேர்ந்ததாக அதிகாரப்பூர்வமாக அறியப்படும் உயிருடன் இருக்கும் ஒரே பூனை தற்போது டிக்ரினோ மட்டுமே.
அதனால் காடுகளில் இதே இனத்தைச் சேர்ந்த வேறு பூனைகள் இல்லை என்று அர்த்தமில்லை.
அவை இன்னும் பொலிவியாவின் காடுகளில் எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இந்தக் கண்டுபிடிப்பு ஒரு புதிய பூனை இனத்தைக் கண்டுபிடித்தது என்பதோடு முடிந்துவிடவில்லை.
ஒரு உயிரினம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளாமல், அதை எப்படிப் பாதுகாப்பது?
இந்தக் கேள்வியும் இப்போது முக்கியமாகியுள்ளது.
காடு அழிப்பு, வாழ்விட இழப்பு மற்றும் சட்டவிரோத வேட்டை போன்ற காரணங்களால் டைகர் கேட்கள் ஏற்கனவே ஆபத்துகளை எதிர்கொண்டு வருகின்றன.
ஆனால், டில்காயா பூனை இதுவரை தனி இனமாக அடையாளம் காணப்படாததால், முந்தைய பாதுகாப்பு மதிப்பீடுகளில் அது இடம்பெறவில்லை.
உலகின் பெரிய பூனை இனங்களான சிங்கம், புலி, சிறுத்தை போன்றவற்றைப் பற்றி நமக்கு நிறைய தெரியும்.

ஆனால், வீட்டுப் பூனையின் அளவே இருக்கும் இந்தச் சிறிய காட்டுப் பூனை குறித்து இன்னும் பல விஷயங்கள் நமக்குத் தெரியவில்லை.
அதனால்தான் இந்தக் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல, இயற்கையைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் அனைவருக்கும் ஒரு முக்கியமான நினைவூட்டலாக இருக்கிறது.
புதிய உயிரினங்களைத் தேடுவதற்கு எப்போதும் தொலைதூரத் தீவுகளுக்கோ, ஆழ்கடலுக்கோ, எரிமலைப் பகுதிகளுக்கோ செல்ல வேண்டியதில்லை.
சில நேரங்களில்…
நம்மைச் சுற்றியே, நமக்குத் தெரியாமல் ஒரு புதிய உயிரினம் வாழ்ந்து கொண்டிருக்கலாம்.
– சங்கீதா